Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-064  (Read 94 times)

February 02, 2026, 06:14:09 pm
Read 94 times

RiJiA

கவிதையும் கானமும்-064
« on: February 02, 2026, 06:14:09 pm »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-0634


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.



மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
« Last Edit: February 02, 2026, 07:48:02 pm by RiJiA »

February 03, 2026, 03:17:32 am
Reply #1

Misty Sky

Re: கவிதையும் கானமும்-064
« Reply #1 on: February 03, 2026, 03:17:32 am »
"காதலின் உதயம்"
"காதலின் வடுக்கள்"

"காதலின் உதயம்"


"செங்காந்தள் மலரொன்று கையில் ஏந்தி, சிரித்த முகமாய் நீ நின்ற கோலம்"
"காதல் மொழிகள் என் காதில் ரீங்காரமாய், கனவுலகில் நானும் மகிழ்ந்த காலம்"
"காதல் ரோஜா மலர்ந்தது, நமக்குள் காதல் பிறந்தது"
"என் இதயம் முழுதும் இன்பத்தால் நிறைந்தது"
"உன் புன்னகை மின்னல் ஒளி கீற்றாய் பாய்ந்திட"
"என் உயிரின் ஆழத்தில் இன்பம் பொங்கிட"
"தென்றல் காற்றும் தாலாட்டாய் மாறிட"
"தேனிலவு காலம் தொடர்ந்தது நம் வாழ்வினிலே"
"காதல் சாம்ராஜ்யம் பூத்தது நம் நெஞ்சினிலே"

"நிலவொளி கூட பொறாமை கொள்ள,
நாம் இணைந்திருக்க நாட்கள் அழகாய் நகர்ந்தன"
"சின்னச் சின்ன மகிழ்ச்சியில் நம் காதல் வசந்தத்தின் காலமாய் மலர்ந்தன"
"உன் அழகிய பேச்சின் மொழியில் புதுக்கவிதை பிறந்ததே"
"உன் அன்பின் பார்வையில் எனக்குச் சொர்க்கம் தெரிந்ததே"
"மகிழ்ச்சியின் எல்லை மீறி சிறகடித்துப் பறந்தோம்"
"பிரிவின் நிழல் அறியாமல் சந்தோஷத்தில் களித்திருந்தோம்"
"இனிமை நிறைந்த அந்தியிலே"
"இதயம் முழுவதும் காதல் அலையிலே"
"புன்னகை பூக்கள் பூத்த நாட்களிலே"
"இளமை கொஞ்சும் நம் காதலின் பயணத்திலே"
"இன்பம் பொங்கிடுதே பொன் மாலையிலே"

"காலம் கூட பொறாமை கொள்ளுமே"
"காதல் அமுதம் என்றும் நிலைக்குமே"
"வாழ்வின் புது அர்த்தம் உன்னால் கிடைத்ததே"
"வானம் தாண்டி நம் காதல் நேசம் உயர்ந்ததே"
"மார்கழிப் பனியும் தோற்றுப் போக,
நம் காதல் அனலாய் பற்றி எரிந்தது"
"ரோஜா இதழ்கள் பொழிந்து கிடக்க,
மேகம் போலே மனம் மிதந்திருந்தது"
"விண்மீன் கூட்டம் வாழ்த்துக்கள் கூற,
வானில் வெண்ணிலவு கூட வெட்கி மறைந்தது"
"உன் கை கோர்த்தபடி நடந்த போது,
காலம் கூட நின்று போனதாய் உணர்ந்தேன்"
"உன் பேசாத மௌனங்கள் கவிதை பாட, வாழ்வின் பொருளை அன்று நான் அறிந்தேன்"
"காதல் கோட்டையில் கொடியேற்றி நின்றோம்"
"காலத்தை வென்றிட்ட களிப்பினில் திளைத்தோம்"


"காதலின் வடுக்கள்"

"நம் காதல் சரியான பாதையில் பயணித்து கொண்டிருந்த வேளையில், ஒரு நாள் திடீரென பிரிவின் நிழல் நம்மை மெல்லச் சூழ்ந்ததே"
"ஊடலின்றித் தொடர்ந்த பாதையில்
நம் காதலும் இருண்டதே"
"மௌனமே பதிலாய் மாறியபோது,
என் மனதின் ஆழம் வலித்ததே"
"பிரிவெனும் பெரும் துயரில் என் இதயமோ வலியால் துடித்ததே"
"விதியின் விளையாட்டு, நாமும் பிரிய நேர்ந்ததே"
"பிரிவின் வலி, இதயத்தை பிளக்கும் கூர்மையான வாளாய் மாறியதே"

"நிறமிழந்த என் உலகில் உன் நினைவுகள் மட்டும் இந்தச் செந்நிற ரோஜாவாய்"
"கறுப்பு வெள்ளை உலகினிலே, செவ்வண்ண காதல் ரோஜா சிவந்திருக்கக் கண்டேன்"
"காதலால் இணைந்த நம் கைகள் பிரிந்து செல்ல, உதிர்கின்ற இதழாய் நானும் உடைந்து நின்றேன்"
"வார்த்தைகள் மறைந்து போன பின்பும், வலியின் மெளனம் தொடர்கிறதே"
"மனதின் ஆழத்தில் புதைந்த நினைவுகள், கருகிய கனலாய் சுடுகிறதே"
"நம் கையில் பிடித்திருந்தது வெறும் மலரல்ல, அது மரித்துப்போன நம் காதலின் சாட்சி"
"வண்ணங்கள் மறைந்தாலும், நீ தந்த வலியின் சுவடுகள் மட்டும் இன்னும் என் மனதில் ஆறாமல் சிவப்பாய்"

"காதலெனும் தோட்டத்தில் சிறகடித்துப் பறந்தோம், பிரிவெனும் புயலை எதிர்பார்க்கவில்லையே"
"விதி செய்த சதியால் விலகிச் சென்றாய் நீ"
"வானம் இடிந்து வீழ்ந்ததாய் உணர்ந்தேன் நான்"
"என் காதல் மாளிகை நொறுங்கிப் போனதே"
"என் கண்ணீர்த் துளிகள் நதியாய் பெருகி ஓடியதே"
"நம் காதலின் நினைவுகள் அனலாய் என்னைச் சுட்டதே"
"நம் பிரிவின் வலியால் நான் உன்னோடு கழித்த ஒவ்வொரு நொடியும் மறக்க முடியா வடுக்களாய் மாறியதே"
"பிரிவின் வலி ஒரு ஆழ்கடல் போல,
அது என் ஆத்மாவின் அடியாழம் வரை சுட்டெரித்ததே"

"நினைவுகளின் அலைகள் ஓயாமல் என்னைத் தாக்க, நிம்மதி தேடியே நித்தம் வாடுகிறேன்"
"என் ஆசைகள் அனைத்தும் கருகிய கனவாய் நானும் வாழ்கிறேன்"
"உயிரிருந்தும் நானொரு நடைபிணமாய் உணர்கிறேன்"
"நம் காதல் பிரிவின் வலி தாங்காமல் அணுஅணுவாய் சாகிறேன்"
"என் கண்ணீர்த் துளிகள் காய்ந்த பின்னும், மனதில் காயம் மட்டும் ஆறவில்லையே"
"வெறுமை சூழ்ந்த என் வாழ்க்கைப் பயணம், இன்னும் விடியலைத் தேடி நகரவில்லையே"

"ஒரு துளி அன்பிற்காக ஏங்கிய என் இதயம், கண்ணீர்க் கடலில் மூழ்கியதே"
"இனிவரும் பாதைகள் தனிமையே என்றாலும், கடந்து போகும் காலம் மருந்தாகுமோ?"
"ஒன்று மட்டும் நிச்சயம் காதலின் சிகரம் நாம் தொட்ட தருணம், அழியாத நினைவாய் என்றென்றும் நிலைத்து நிற்கும்"
"இந்த கவிதை உனக்காய், நம் காதலின் அழியாச் சின்னமாய்"
"நம் பிரிவு ஒரு முடிவல்ல, மீண்டும் சந்திக்கும் நம்பிக்கையின் தொடக்கமானது"
"நம் பாதைகள் வேறானாலும், நம் இதயங்களின் பிணைப்பு புனிதமானது" 💜💜

சந்தோஷமிக்க என் கண்ணீர் துளிகளுடன் முடிக்கின்றேன்!!!
இப்படிக்கு,
உங்கள் MISTY SKY 💜💜
« Last Edit: February 03, 2026, 05:17:10 am by Misty Sky »

February 03, 2026, 05:16:16 pm
Reply #2

Love Me

Re: கவிதையும் கானமும்-064
« Reply #2 on: February 03, 2026, 05:16:16 pm »
வார்த்தைகள் எல்லாம்
உன்னை வர்ணிக்க முயன்ற நொடியில்
தம்முடைய அர்த்தங்களை இழந்து
என் முன் மௌனமாய் நின்றுவிடுகின்றன.
அதனால்தான்
சொல்ல முடியாத அன்புகளை
என் மௌனங்களுக்குள் உன்னை வைத்து
நாள்தோறும் உயிரோடு காத்திருக்கிறேன்.

விடியும் காலையின் ஒளி
என் விழிகளைத் தொட்டாலும்,
உன் முகம் மனதில் மலராத வரை
அந்த ஒளியும் எனக்கு இருட்டாகத்தான் தெரிகிறது.
உன்னை நினைத்து விழித்திருக்கும்
இந்த கண்களுக்கு
உறக்கம் கூட ஒரு ஆடம்பரம்.

உன் நினைவு தீண்டாத
ஒரு நொடி கூட
என் வாழ்வில் இல்லை என்பதால்தான்,
நீ இல்லாத தருணங்களில்
என் சுவாசமே தன்னை
அனாதையாய் உணர்கிறது.

நீ பேசும் போது
உன் குரலில் மட்டும் அல்ல,
என் உயிரின் ஆழத்திலும்
தேன் சொட்டுகிறது.
நீ மௌனமாய் இருந்தால்
அந்த மௌனமே
என் மனதை எழுதும்
அழகிய கவிதையாக மாறுகிறது.

உன் கை பிடித்து நடக்கும் பாதைகளில்
வலி என்ற சொல்லுக்கே இடமில்லை;
கற்களும் கூட
உன் அருகாமையில்
மலர்களாய் மாறி
என்னை மென்மையாய் தழுவுகின்றன.

உனக்கும் எனக்குமான இந்த அன்பு
நாள்காட்டியின் சில தேதிகளுக்குள்
சுருங்கிப்போகும் உறவல்ல.
காலங்கள் கடந்து,
நரைகள் நம் தலைமுடியில்
வெள்ளையாய் பூத்தாலும்,
உடல் தளர்ந்து
நடையும் மந்தமானாலும்,
உன்னை பார்க்கும் என் கண்கள் மட்டும்
எப்போதும் இளமையோடே இருக்கும்.

உன் மார்பில் சாய்ந்து
உலகம் முழுதையும் மறந்து,
நான் கேட்க விரும்புவது
பாடல் அல்ல…
கவிதை அல்ல…
இசைக்கருவி அல்ல…
உன் இதயத்தின்
நித்தியமான அந்த ஒரே துடிப்பு தான்.

அந்தத் துடிப்பில்
என் வாழ்க்கை கரைந்துவிடட்டும்,
அந்த அன்பில்
என் பிறவிகள் எல்லாம்
நிறைவடைந்துவிடட்டும்.

உன்னை காதலிப்பது
ஒரு நாள் விழா அல்ல…
என் மூச்சு நிற்கும் வரை
தொடரும் என் வாழ்வின் வழிபாடு.

இனிய காதலர் தின நல்வாழ்த்துகள்
என் உயிரே…
என் வாழ்வே…
என் என்றும் தீராத காதலே… 💞

February 03, 2026, 05:32:31 pm
Reply #3

Deepa

Re: கவிதையும் கானமும்-064
« Reply #3 on: February 03, 2026, 05:32:31 pm »
வண்ணங்கள் இழந்த வானவில்லாய்
வாழ்க்கை நகர்ந்த நாட்களிலே,
வண்ணம் சேர்த்த ஓவியமாய் - என்
முன்னே நின்றது உன் ஒற்றை ரோஜா!

யார் கரம் இது? யார் விரல் இது?
அறியத் துடிக்கவில்லை என் இதயம்..
ஏனெனில், கொடுப்பது நீயாகவும்
பெறுவது நானாகவும் இருக்கும் வரை
இவ்வுலகம் அழகானது....

இந்தச் சிவப்பு ரோஜாவை நீ நீட்டிய போது,
வெறும் பூவை மட்டும் நான் வாங்கவில்லை...

உன் சுவாசத்தின் மிச்சத்தையும்,
உன் இதயத்தின் துடிப்பையுமே
பரிசாகப் பெற்றுக் கொண்டேன்!

​இரு கரங்கள் இணையும் ஒரு கணத்தில்
இதயத் துடிப்புகள் பரிமாறப்பட,
சொற்கள் ஊமையாய் நின்ற வேளையில்
இந்தச் சிவப்பு சங்கீதம் பாடியதே!

​விற்பனைப் பொருள் அல்ல இந்த மலர்,
உன் வியர்வை சிந்திச் சேர்த்த காதல்!

முள்ளைத் தாங்கி இதழ் கொடுக்கும் - இந்தப்
பூவைப் போலத் தான் உன் பாசம்!

​காலம் ஒருநாள் இந்தக் காம்பை
காய வைக்கக் கூடும் - ஆனால்
உன் கரம் தந்த அந்தத் தீண்டல்
என் கல்லறையிலும் மணம் வீசும்!

​உன் விரல் பிடித்துப் பெற்ற இந்தப் பரிசு,
ஒரு பூவின் பிறப்பல்ல...

உன் நிழலில் நான் வாழப்போகும்
புது யுகத்தின் தொடக்கப் புள்ளி!

​இதழ்கள் சொல்லத் தயங்கியதை எல்லாம்
இந்த இதழ்கள்  சொல்லிவிட்டன...

​நீட்டப்பட்ட உன் கரங்களில் இருப்பது பூவல்ல,
உன் இதயத்தின் ஒரு சிறு பகுதி!

பெற்றுக்கொண்ட என் கைகளில் இருப்பது வெறும் காம்பல்ல,
நம் வாழ்நாள் முழுமைக்குமான பிணைப்பு!

நிறமற்ற பின்னணியில் இந்தச் சிவப்பு ரோஜா
நமக்குச் சொல்லும் பாடம் ஒன்றுதான்:
"அன்பு எங்கே இருக்கிறதோ, அங்கே தான் வாழ்வு நிறம்பெறுகிறது!"

காலங்கள் ஓடி உருமாறலாம் - நம்
கைகளில் ரேகைகள் தேய்ந்து போகலாம்,
தலைமுடி நரைத்துத் திரை விழலாம் - ஆனால்
உன் மீதான என் காதல் நிலையானது....

 "காலங்கள் மாறலாம்... காட்சிகள் மறையலாம்... ஆனால் உனக்கான என் காதல் மட்டும் கவிதை போல என்றும் வாழும்!"

"கேட்காமலே கிடைத்த வரமும் நீ...
என் தேடல்கள் அனைத்தும் முடிந்தது உன்னிடமே,
என்னவனே!"🩷💕🩷
இனிய காதலர் தின நல்வாழ்த்துகள்!"💝