இப்போதெல்லாம் ஒரு பிரிவினை
அத்துனை சுலபமாக,
இதோ! பரிசெனக் கையளிக்கிறார்கள்.
அதனை நாம்
ஒப்புக் கொண்டுத்தான் ஏற்கிறோமா, என்பதைப் பற்றிய
கரிசனையாவது இருப்பதில்லை.
எப்போதோ துயருறும் போது
துணை நின்றவர்கள் தான்,
இப்போது துவழ்கையில்
துரதிர்ஷ்டவசமாய்
இல்லாமல் போயிருக்கிறார்கள்.
அவர்கள் அறிவார்களா!?
"இனி இல்லை"
என்ற வார்த்தைக்குப் பின்னால்,
தனியாய் நடுநடுங்கிக் கொண்டிருக்கும் தனிமையைப் பற்றி?
இன்மை என்பதன் பின்னால்
பதற்றத்தோடு மறைந்திருக்கும் ஆற்றுப்படுத்தவியலாத
ஆதங்கங்கள் பற்றி?
அவர்களுக்குத் தெரியவில்லை!
பிடித்தமான ஒருவரின்
குரல் கேட்பது நின்று விட்டால்,
மனதுக்கு நெருக்கமான அத்துனையும் பிடிக்காத பட்டியலில்
சேர்ந்து விடுகிறதென்பது!
மேலும்!
குறுஞ்செய்திகளை
அத்துனை இயல்பாய்
நிறுத்திக் கொள்கிறார்கள்.
அவர்கள் அறியமாட்டார்கள்! அவையெல்லாம் வெறும்
எழுத்துக்கள் அல்ல!
விரும்பிப் படித்துப் படித்தழும்
ஆசையாய் சேகரிக்கப்படும்
உணர்வுக் குவிப்புக்கள் என்று.
"காலம் மாற்றி விடும்!
இயல்பாய் இருக்கப் பழகிக் கொள்"!
எனச் சொல்லித் திரும்புகிறார்கள்.
அவர்களுக்கு எப்படிப் புரியும்?
கடலும், காற்றும்,
வானும், மண்ணும்,
நிலையாய்
இருப்பு பெற்றிருப்பது போலத்தான்
அவர்களின் இருப்புமென்பது.
அவர்கள் அறிவார்களா?
எத்தனை முகங்களோடு
உறவாடி, உரையாடினாலும்,
அவர்களை, அவர்களின் பிரதியினை,
பிற ஒருவரிடம்
தேடியடைந்து கொள்ள முயற்சித்த பிரயத்தனங்கள் எல்லாம்,
பரிதாபமாய் தோற்றுப் போனதை.?