Advanced Search

Author Topic: Empty Dappa Kavithaigal  (Read 30883 times)

December 21, 2022, 10:46:06 pm
Reply #30
அதன் பிறகு❤️💛💚
« Reply #30 on: December 21, 2022, 10:46:06 pm »
அதன் பிறகு
கடந்து விட்ட மொத்த விசயங்களையும்
ஏதோ ஒன்றின் நிகழ்வாகவோ,
பொழுதுபோகாத பூமியின் தற்செயலாகவோ
பாவிக்கத் துவங்கியிருப்போம்.

அதன் பிறகு
அதீத அன்பு, ஆத்ம திருப்தி, கடுங்கோபம், பெருந்துயர்
என்று எதிலும் ஆட்படாத் தன்மையில் தனித்திருக்கவோ,
தியானித்திருக்கவோ தயாராயிருப்போம்.

அதன் பிறகு
முக்கியஸ்தர்களுக்கும், மரியாதைக்குரிய
பெரிய மனிதர்களென்ற சிலருக்கும்
சாதாரணர்கள் என்ற தோரணையிலான
பார்வையைக் கொடுத்திருப்போம்.

அதன் பிறகு
பெயர், புகழென்று ஓடித் திரியும்
வெண் சட்டைக் கார யோக்கியஸ்தர்களுடனான
சிறு விலகலை அத்தியாவசியமாக கடைபிடித்திருப்போம்.

அதன் பிறகு
எது எவ்வளவு பாதித்தாலும் வலிக்காமலோ,
அல்லது வலிப்பதை வெளிக் காட்டாமலோ
முடிந்தளவு அகக் கூறாய்வின் பக்குவத்திற்கு
அதனை இரையாக்கியிருப்போம்.

அதன் பிறகு
பணமென்று ஓடித் திரிந்த மனநிலை சாந்த மடைந்திருக்கும்
அல்லது அதுவே போதையாகி வெறியேறி பணத்தீயில்
விளையாட ஆசை வந்திருக்கும்.

அதன் பிறகு
முரட்டுத் தோள்களும், மிரட்டும் பாவணையும்
சற்றே கீழிறங்கி யாரென்றே தெரியாத ஏதோவொரு
குழந்தையின் அழுகையை நிறுத்த சிரிக்கத் தயாராயிருப்போம்.

அதன் பிறகு
சிலர் சாக நினைப்பார்கள்.
சிலர் சலிக்க சலிக்க வாழ்ந்து
செத்து விட நினைத்துக் கொண்டிருப்பார்கள்.
சிலர் வாழ்ந்து விட நினைப்பார்கள்.

அதன் பிறகென்பது
வாழ்வில் எதன் பிறகாக வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஆனால்,
வாழ்வையே இரண்டாய் பிளக்கும்
பிரளயம் எல்லோர் வாழ்விலும் சாதாரணமான
அதிசயமாய் நிகழ்ந்து விடுகிறது.

அதன் பிறகு எல்லாம் மாறும் ❣️

December 23, 2022, 05:24:35 am
Reply #31
வாழ்🎭
« Reply #31 on: December 23, 2022, 05:24:35 am »
நான் இவ்வாழ்வின்
அகன்ற விதிகளுக்குள் இருந்து
அகப்படாதவாறு நகர்ந்திட, எத்தனிப்பதில்லை.
அதன் ஓட்டத்தில்
ஓர் அங்கமாகவே இருந்துவிட்டுப் போகத்தான்
பழகிக் கொள்கிறேன்.

என்னை தாங்கிக் கொள்வதற்கான கரங்களை
எப்போதும் நான் எதிர்ப்பார்த்ததில்லை.
எனக்குத் தெரியும்...!
எப்போதும் அவர்கள்
நான் நினைக்கின்ற போதெல்லாம் அருகிருந்து என்னை
அள்ளிக் கொள்ளப் போவதில்லை.

என் சுமைகளை
நீங்கள் கொஞ்சம்
சுமந்து கொள்ளுங்கள் என்றெண்ணி...!
பகிர்ந்தளித்து ஆறுதல் பெற்றதில்லை.
அவைகளை நான் மட்டும்தான்
சரி செய்ய வேண்டும்
என்பதற்காகத்தான்,
வாழ்வு என்மேல்
அவைகளை சுமத்தி இருக்கிறது.

இயல்புகளிலிருந்தோ
நியதிகளிலிருந்தோ
விலகிச் செயல்பட்டு,
செயற்கைகளுக்குள்
என்னை நானாகவே
திணித்துக் கொண்டதில்லை.
எனக்கு ஊர்ஜிதமாகத் தெரியும்...,
எத்துனைதான் பலத்த நடிப்புக்களை அரங்கேற்றினாலும்,
அதன் எல்லையில்
என் அடிப்படைக் குணங்களைத்தான்
இவ்வாழ்வு என்னிடம் வேண்டி நிற்கும்.

அனுதாபங்களை
பெற்றுக் கொள்வதில் எல்லாம்
எனக்கு சற்றும் உடன்பாடில்லை.
அவர்களுக்கும் அதே அனுதாபத்தை
அளிக்க நேர்கையில்...!
நான் அதில் தவறிழைத்து விட்டால்,
என்மீதான அபிப்பிராயத்தில்
சலனம் சற்றேனும் உண்டாகிவிடும்.

இதற்காகத்தான் சொல்கிறேன்...!
வாழ்வின் அவ்வப்போதைய
நிகழ்வுகளோடு, யதார்த்தத்தை ஏற்று,
ஓர் பாலைவனப் பயணியாய்
நடை போடுங்கள்.
ஏனெனில்...!
வாழ்வின் உபசரிப்பு
மிக வித்தியாசமானவை,
விநோதமானவை.
இடர்களின் நடுவே
பயணிக்கத்தான் அதிகம் நேரும்..

புன்னகை செய்!
ஏனெனில் உன் கவலைகளைக் கொண்டு
இந்த உலகினை மாற்றிவிட இயலாது்….
என்ற கலீல் ஜிப்ரானின் வரியொன்றில்,
எப்போதும் நான்துல்லியமாய் லயித்துக் கிடக்கிறேன்…..

December 23, 2022, 09:14:19 pm
Reply #32
நீயென் அமைதி💚
« Reply #32 on: December 23, 2022, 09:14:19 pm »
நிறைய ரகசியங்கள் உள்ளது.
நிறைய கவிதைகள் உள்ளது.
மறைக்கப்பட்ட நிறைய அன்புகள் என்னுள் உள்ளது.
மறுக்கப்பட்ட நிறைய நியாயங்கள் என்னுள் உள்ளது.
மறக்க முடியாத நிறைய நினைவுகள் என்னுள் உள்ளது.
என்னோடு இன்னும் எத்தனையோ அபூர்வங்கள் நிறைந்துள்ளது.

உங்களுக்குத் தெரியாத, புரிந்து கொள்ள முடியாத
எத்தனையோ வித்தியாசமானவை
என்னுள் என்னை சிதைத்துக் கொண்டிருக்கிறது.
நீங்கள் தெரிந்து வைத்திருப்பவை போல் எத்தனையோ மடங்கு
என்னுள் தேக்கி வைக்கப் பட்டிருக்கிறது….

ஓர் வெள்ளம் கடந்த படகாய்,
புயல் கடந்த மரமாய், பேரலை கடந்த தீவாய்,
பேரிடர் கடந்த நிலமாய், என் இடர் கடந்த மனம்
கரை சேர்ந்திடும் மடி அங்கேதான்.
நீயென்ற ஓர் சாயலைத் தான் இங்கே
ஆசீர்வாதமாய் தரச் சொல்லி கேட்டிருந்தேன்.

நான் மீண்டும் சொல்லிச் சிரித்து விட்டு
இதையெல்லாம் கடந்து ஏதோவொரு
கடல் நோக்கி பயணிக்கத் துவங்கி விடுகிறேன்.
ஏதோவொரு புன்னகை முகத்திற்காக ஓடத் துவங்கி விடுகிறேன்.

ஏதோவொரு சிரிப்புச் சத்தத்திற்காக நடக்கத் துவங்கி விடுகிறேன்.
ஏதோவொரு பாடல் குரலுக்காக அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து விடுகிறேன்.
என் தேங்கிப் போன எத்தனையோ இடுக்குகளை மறக்கடித்து வாழ வைக்க
எப்போதும் ஓர் அலாதியான காதல் உள்ளது.
அதுபோதுமென்று உன்னை நினைத்துக் கொள்கிறேன்.

ஒவ்வொரு முறையும் உன் நியாபகத் தீவில்
நான் தனியே உலவி நிதானமடைவதை விட
பெரிய நிம்மதியைத் தேடித் தேடித்
தொலைந்து கொண்டே தான் இருக்கிறேன்.

நீயென் அமைதிக்கான இடம் ♥

December 24, 2022, 05:54:36 am
Reply #33
நலம்
« Reply #33 on: December 24, 2022, 05:54:36 am »
மனிதர்களை விட்டு வெகு தொலைவாகி விட்டதாக ஒரு எண்ணம்.
காதல், அன்பு, பரிமாற்றம் எதன் மீதுமே பிடிப்பில்லாத நிலைக்கு
மனம் தள்ளப்பட்டிருக்கிறது.

அதிகம் நேசித்த இன்னமும் நேசித்துக் கொண்டிருக்கிற
எத்தனையோ பேருக்கு இன்று நான் எங்கே இருக்கிறேன்,
என்ன செய்கிறேன் என்று கூட தெரியாது.

ஒரு விசயம் தெரியுமா மனிதா.
நாம் எந்தளவு ஒவ்வொரு மனிதனையும்
நேர்மறை எண்ணங்களைக் கொண்டு மதிப்பிட முயல்கிறோமோ,
அதேயளவு எதிர்மறை எண்ணம் கொண்டவர்கள் அவர்கள்.

எல்லா மனிதருக்குள்ளும் இருக்கும் ஒரு மிருகம்
என்றேனும் வெளிப்பட்டு சாந்தமடையும்.
நாம் அடைக்கலம் கொண்டிருக்கும் ஒரு கூட்டில்
ஒருநாள் மழை பெய்யும், மறுநாள் வெயிலடிக்கும்.

எனக்கென்று யாருமில்லை என்று வருந்துவதை விட,
யாருக்கும் நான் பாரமாயில்லை
நானே என்னை பார்த்துக் கொள்கிறேன்
என்று பெருமையோடு தட்டிக் கொடுத்துக் கொள்ள வேண்டியதுதான்.

நாம் மனிதர்களை நேசிக்காமலோ,
பிடிப்பில்லாமலோ ஆராய்வதில் துளியளவும் பயனில்லை.
இதில் எல்லாமவருக்கும் கைசேதம் தான் மிஞ்சும்.
சட்டென பிடித்து விடுங்கள். தொலைவாகி விட்டாலும் பரவாயில்லை.

இருக்கும் இறுக்கமான சூழ்நிலைகளுக்கு மத்தியில்
மனிதர்களுடனான விருப்பு, வெறுப்பு, ஆசைகளோடு
வாழ்வதை விட அவர்களுடனான நினைவுகளோடு வாழ்வது
கொஞ்சம் ஆறுதலாயிருக்கும்.

December 27, 2022, 06:10:43 am
Reply #34
நான்…..🖋️
« Reply #34 on: December 27, 2022, 06:10:43 am »
பின்னாட்களில்
இடைவெளி விட்டுச் சென்றது
உணர்த்தப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே...!
இப்போதெல்லாம்
இடைவெளிகளோடு
உரையாட ஆரம்பித்து விட்டேன்.

விலகலுக்கு ஒப்பான
கடினமொன்று இங்கே இருந்ததில்லை, என்பதை துள்ளியமாய்
அறிந்து கொண்டதனாலேயே...!
சற்று அந்நியமாய்
இருந்துவிட முயற்சிக்கிறேன்.

சொற்களற்ற தனிமைக்குள்
மிகுதியாய் தள்ளப்பட்டு,
குரலற்ற மெளன சம்பாஷணைகளோடு எனக்குள் நானே உளருவதை
உணர்வுகள் காட்டித் தந்த போது...!
உண்டான அழுத்தத்தை
இனி பெற்று விடக் கூடாது
என்பதாலேயே
விலகியிருக்க கற்றுக் கொண்டேன்.

நியாபகங்களின்
மிச்சத் துகள்களை வைத்துக் கொண்டு அவதிப்படும் நிலையொன்று
கிடைப்பது போதுமென
கண்ட பிறகே...!
நேசித்தலில் நியாபகத்தை
நிறுத்தி விடாதபடியாக
சட்டென நகர்ந்து செல்கிறேன்.

மரித்துப்போன இதயத்தின் மேலே மீண்டுமொறுமுறை
அன்பெனும் அமிலத்தை,
யாரும் தெளித்து விடக் கூடாது
என்பதில் கவனமாக இருக்கிறேன்.
இங்கே அருகாமையில்
ஏலவே ஓர் குமியல் வெறுமை
செத்துக் கிடக்கிறது.

மூச்சுக்குழல் அடைத்துப் போகும்
அளவுக்கு அளிக்கப்படும்
அபரிமித நேசப் பரிமாற்றங்களில் இருந்து
வெகு தொலைவில்
தொலைந்திருக்கவே
மனதை திடப்படுத்திக் கொண்டிருக்கிறேன்.

December 28, 2022, 06:10:11 am
Reply #35
ஆழி
« Reply #35 on: December 28, 2022, 06:10:11 am »
மிக ஆழமான நேசங்களின் மிச்சங்கள் எப்போதும்
மிக ஆழமான வலிகளையும்
தந்துவிடத்தான் செய்கிறது.
அப்போது மட்டும் அழுவதை தவிரவோ முணங்கிக் கொண்டு
அல்லல் படுவதை தவிரவோ
எதையும் செய்யத் தோன்றுவதில்லை.

எஞ்சிப் போன காலத்திற்காகவும்
சற்று வலிகளை
சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்...!

அன்பெனும் போதைக்கு அடிமையானால்
தன்னிலை மறந்து கூட
துயர் பட நேரிடும்.
முதலில் உணர்வுகளின்
அத்தனை பலத்தையும்
மெல்ல மெல்ல விழுங்கிக் கொண்டு,
நம்மை ஆர்ப்பரிப்பில் ஆழ்த்தி விடும்.
பிறகு மீளவே முடியாத
எல்லைக்குள் நிற்க வைத்து
வதைப்புக்குள் அடக்கி விடும்.

பல போது மிருதுவான
நெஞ்சத்துக்கு அளிக்கப்படும்
அதிகபட்ச ரணமே...!
இந்த நேசத்தின் போதை தரும்
முதல் சொட்டு ஆர்ப்பரிப்புத் தான்.

December 29, 2022, 05:32:37 am
Reply #36
தனிமை
« Reply #36 on: December 29, 2022, 05:32:37 am »
தனியா இருக்கேன், எனக்கு யாருமே இல்ல,
எனக்கு நா மட்டுந்தான் துணைன்னு
பொதுவா சொல்லிக்கலாம்.
உண்மையில இங்க யாருமே தனியா விடப்படுறதில்ல.
ஒரு பக்கமிருந்து இன்னொரு பக்கம்
திசை மாற்றப்படுதுன்னு வேணா சொல்லிக்கலாம்.

தனின்னு உலகத்துல யார சொல்லீற முடியும்.
வேணான்னு சொன்னாலும் யாரோவொருத்தர்
நம்மல அரவணைக்குறாங்க, நேசிக்கிறாங்க,
அன்ப தர்ராங்க, நம்ம நல்லாருக்கனும்ன்னு நினைக்கிறாங்க.

கூட்டமா ஒருத்தன கொன்னாலும்
அவனுக்காக அழுக ஆயிரம் கண்கள் இருக்கத்தான் செய்யும்.
எல்லாரும் என்னய வெறுக்குறாங்கன்னு
சொல்ற ஒருத்தனுக்காகவும் அழுது பிரார்த்திக்க
ஒரு உயிர் இருக்கும்.

அவ்ளோதான்.
இன்னமும் குழப்பாமாவே இருந்தா சிம்பிளா ஒன்னுதான்.
நமக்கு யார் இருக்கான்னு பாக்குறத விட்டுட்டு,
நம்மலாள முடிஞ்ச அளவு நாம யார் யாருக்கு
துணையா இருக்கோம்ன்னு யோசிக்கலாம்
நல்லாருக்கும்ல..!

"உலகத்தில் எவரும் தனிச்சி இல்லையே.
குழலில் ராகம், மலரில் வாசம் சேர்ந்தது போல!"

December 29, 2022, 10:03:01 am
Reply #37

SuNshiNe

Re: தனிமை
« Reply #37 on: December 29, 2022, 10:03:01 am »
There is many positivity hidden inside a negativity la

Antha positivity ya unga kavithai alaga veli kondu varuthu

Always manam yaarukaagavaachum yaengi kondu than iruku

Meendum oru arumaaiyana kavithai
Nandru



~ Pena rasigai
ㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤㅤ

December 30, 2022, 01:56:17 am
Reply #38
முப்பெரும் வாழ்கை 🩸
« Reply #38 on: December 30, 2022, 01:56:17 am »
🍂

ஒவ்வொரு மனிதனுக்கும் மூன்று வாழ்க்கைகள் உண்டு.

தனிப்பட்ட சொந்த வாழ்க்கை,
பொது வாழ்க்கை,
மற்றும் அவரே அறியும் ரகசியமான வாழ்க்கை.

--மார்க்வெஸ்--

உண்மைதான் இல்லியா?
மூன்றாவது சொல்லப்பட்ட இந்த ரகசியமான வாழ்க்கையின்
சந்தோஷங்கள், துயரங்கள், கொண்டாட்டங்கள், சின்னச் சின்ன அச்சங்கள்,
அளவற்ற மகிழ்ச்சி போன்ற அனைத்துமே,
அவரவர் மனங்களுக்கு மட்டுமே சொந்தமானது.
எதுவொன்றின் பொருட்டும் அவைகளை
மனிதன் பிறரிடம் பகிர்ந்து கொள்ள விரும்புவதில்லை.
ஏதோவொரு உந்துதலில்,
எப்போதாவது மட்டும் அதனைப்பற்றி,
தான் நம்புகின்ற ஒரு சிலரிடம் பேசக்கூடும்.

மனதிற்குள் தன்னந்தனியே நகர்ந்து கொண்டிருக்கும்
அந்த ரகசியமான வாழ்வு, அவரவரின் மன உலகுக்குள் மட்டுமே
எப்போதும் பயணிக்கிறது,
நினைத்துச் சிரிக்கிறது,
பரிதவித்து அழுகிறது, மீண்டெழுகிறது…..


December 30, 2022, 10:47:57 pm
Reply #39
பகிர்தல்🥰
« Reply #39 on: December 30, 2022, 10:47:57 pm »
உன்னோடு பகிர்கையில் இலகுவாகிறேன்...

அளவீடுகளும் மதிப்பீடுகளும் செய்யாதவை
உன் செவியேற்றல்கள்

உன் செவிகளுக்கு இதயமுண்டு
சில நேரம் தோளும்...
கரங்களையும் அவ்வப்போது
நீட்டிக்கொள்ளும் அது

ஆதரவாய் தலைகோதவும் செய்யும்
அதன் கரங்கள்
என் வலி தீர்க்க வேண்டிவரின்
ஆயுதம் பூண்டு சமர் செய்யவும் தயாராகும்...

பகிர்தல்கள் இதமூட்டுபவை
யாரோடும் பகிரலாம் தான்..

மகிழ்வொன்றின் பகிர்தல்
சுயபுராணமாய் தெரியக்கூடும்
இல்லை பொறாமையின்
பொறியொன்றை மூட்டிப் போகலாம்

கேட்பவரின் பலவீனமான பொழுதில்
அவரை காயப்படுத்திடவும் செய்யலாம்...

வலியின் பகிர்தல்கள் புலம்பல்களாக படலாம்
சிலநேரம் சலிப்பாகலாம் இல்லை
அழுத்தமுடைக்கும் ஒரு பணிவிடையெனக் கருதி
அமைதியாக செவியுறலாம்
அல்லையேல் செயற்கையான
ஒரு புன்னகை கொண்டு சகித்தும் போகலாம்

அன்றியும் பெரும்பான்மை பொழுதுகளில்
அலைவரிசைகளின் பொருந்தா நிலைகளில்
எல்லோரின் வெளிப்பாடுகளோடும்
ஒன்றிப் போய்விடவும் முடிந்திடுவதில்லை

உனக்கப்படியல்ல

எனக்கு சரிப்படும் ஏதோ ஒன்றை
அநிச்சையாகவே செய்து கடக்கும் உன் வெளிப்பாடு

அதை உன் நுட்பத்தில் சேர்ப்பதா
இல்லை உன் நேசத்தில் சேர்ப்பதா என்பதைத் தவிர்த்து
உன்னோடு பகிர்தலில் வேறு கேள்விகளும் இல்லை எனக்கு

உன்னோடு பகிர்கையில் இலகுவாகிப் போகிறேன்.

January 01, 2023, 11:09:10 am
Reply #40
இசை🎧
« Reply #40 on: January 01, 2023, 11:09:10 am »
என் மனதை ஆக்கிரமிப்புச் செய்யவென்றே
சில பாடல் வரிகளை
நான் நெஞ்சோடு சேமித்து
வைத்துக் கொள்வேன்.
அவை மனிதர்களைப் போல
பல நேரம் ஏமாற்றம் தராதவை
எதிர்ப்பார்ப்புகளை தகர்க்காதவை.

என் மனம் அமைதி நாடும் போதெல்லாம்
மனதிற்கு நெருக்கத்தை ஏற்படுத்துபவை.
என் மனம் மடி நாடும் போதெல்லாம்
உறங்கிக் கொள்ள அனுமதி தருபவை
அவைகளிடம் சிறையாகும் போதெல்லாம்
நான் சுதந்திரமாய் திரிகிறேன்.

என் உணர்வுகளை
அத்துனை நேர்த்தியாய்
வெளிக்கொணர உதவுபவை.
நான் அதிகம் உரையாடல் செய்யும்
என் ரகசிய சகா!

நான் சிறகுலர்த்தி
பறக்கத் தேவைப்படும் போதெல்லாம்,
என் வானமாய்
அந்த இசை விரிந்து கொடுக்கும்.
நான் தனித்து நிற்க
நாடும் போதெல்லாம்
சிறையாய் மாறி
எனை கைது செய்து கொள்ளும்.
என் கண்ணீரை என்னிடமிருந்து
அவ்வப்போது கொஞ்சம்
வாடகைக்கு  வாங்கிச் செல்லும்.
துயரங்களை துடைத்து விடும்
கரங்களாய் மாறி நிற்கும்.
வெறுமைகளில்
மிக அன்னியோன்யமாய்
மனதோடு நெருங்கிப் பேசும்.
என் பல வன்மையான இரவுகளில்
மிக நீண்ட பேச்சுத் தோழனாக
கூடவே அமர்ந்திருக்கும்.

அவை மனிதர்களைப் போல
அவ்வப்போது
அந்நியப்பட்டுப் போவதில்லை.
மழை தூவிக் கொண்டிருப்பதை
என் சாளரத்தின் வழியே
எந்த படபடப்புமில்லாமல்
நான் ரசிக்கும் நள்ளிரவுகளில்,
என் மனதுக்கு ஒத்ததாகவே
அவை இருந்திருக்கிறது.
என் காது வழியே சென்று
என் மனதின் உயிர்ப்பை தட்டியெழுப்பி,
என் ஆன்மாவின் ஆசைகளை
அந்த மழையில் நனையச் செய்திருக்கிறது.
காலம் சென்ற என் நினைவுகளையும்,
காலாவதியான சில உறவுகளையும்,
அவ்வப்போது நினைவூட்டியிருக்கிறது.
சூழ்ந்து கிடந்த என் பயங்களுக்கு அபயமளித்திருக்கிறது.

பாறைகளின் ஈரத்திற்கும்,
பெருமழையின் உற்சவத்திற்கும்,
ஆழியின் ஆழத்திற்கும்,
ராத்திரியின் ரசனைகளுக்கும்,
நதிக்கரை கொண்ட நகரங்களுக்கும்,
என்னை கூட்டிச் சென்றிருக்கிறது.
நடைபாதை
அதிசயங்களையும்,
இரயில் பாதை
இடுக்குகளில் பூத்திருக்கும்
வெள்ளை மலர்களையும்,
இப்பிரபஞ்சத்தில்
காதல் வாழும் முடுக்குகளுக்கும்,
என்னை அழைத்துச் சென்று காட்டியிருக்கிறது.

Music_Is_The_Healing


January 02, 2023, 04:31:07 am
Reply #41

Sanjana

Re: இசை🎧
« Reply #41 on: January 02, 2023, 04:31:07 am »
VERY NICE POEM ;D

January 02, 2023, 04:31:26 am
Reply #42

Sanjana

Re: பகிர்தல்🥰
« Reply #42 on: January 02, 2023, 04:31:26 am »
NICE KAVITHAI.....

January 02, 2023, 04:32:00 am
Reply #43

Sanjana

Re: முப்பெரும் வாழ்கை 🩸
« Reply #43 on: January 02, 2023, 04:32:00 am »
GOOD ONE....

January 02, 2023, 04:33:03 am
Reply #44

Sanjana

Re: Empty Dappa Kavithaigal
« Reply #44 on: January 02, 2023, 04:33:03 am »
IVALAWU KAVITHAI PODITUKINKA...NAAN PADIKA MISS PANNIDEN.INIKU PADICHE....SUPER....KEEP GOING....