Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-051  (Read 879 times)

February 04, 2025, 07:14:31 pm
Read 879 times

RiJiA

கவிதையும் கானமும்-051
« on: February 04, 2025, 07:14:31 pm »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-051


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.



மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
« Last Edit: February 04, 2025, 08:33:17 pm by RiJiA »

February 05, 2025, 07:00:29 am
Reply #1

Limat

Re: கவிதையும் கானமும்-051
« Reply #1 on: February 05, 2025, 07:00:29 am »

அறியா வயதில் தாயை இழந்து
பருவ வயதில் தந்தையை இழந்து
தான் யாரென உணரும் வயதில் பாட்டி மற்றும் உடன்பிறவா சகோதரியையும் இழந்து
உறவென சொல்லிக்கொள்ள அண்ணன் இருந்தும் சகோதர பாசம் இன்றி தவித்த பேதையாய் என் முன்னே தோன்றிய என் அம்முவின் சோதனைகளும் அதில் அவள் கண்ட வெற்றியை பற்றியும் நம் கவிதையும் காணமும் நிகழ்ச்சி மூலம் உங்களுடன் பகிர்வதில் பெருமை கொள்கிறேன்...


அவளாகியவள்...


சொல்லி கொள்ள சொந்தமின்றி
சொந்த வீட்டில் அகதியாய்
வாழ்ந்தாள் அவள்..

உறக்கம் வேண்டாம் உணவும் வேண்டாம்
தனது தந்தையின் கனவுகளை நிறைவேற்றினால் போதும்
என்றாள் அவள்..

ஏதேனும் செய்ய வேண்டும்..
எப்படியும்
சாதித்தே ஆக வேண்டும்..
சூளுரைத்தாள் அவள்..

பணம் இருந்தும் பரிவு கொள்ள யாரும் இல்லை..
ஊசியாய் குத்துகிறது அன்பின் ஏக்கம்..
துடித்தாள் அவள்..

நித்திரை இன்றி ஒளி இழந்த கண்கள்..
சிவப்பு சாயம் பூச அழுதாள் அவள்..

கனவுகளின் வாயிலில் விசும்பும் தாயின்
முகம் கண்டாள்..
நொடிந்தே போனாள்..

கடல் அலையாய் அவளது இழப்பு வந்து தாக்க.
அலையிலே நுரைத்தெழுந்த சோகத்தோடு
நொறுங்கி போனாள்..

முயன்று தான் பார்த்தாள் மீண்டும் தோற்றாள்..
முயன்று முயன்று வியர்த்து போனாள்..

உடல் சுகமில்லாமல் பல மாதங்களாக தன் நிலை மறந்து மரண படுக்கையில் கிடந்து  மரண தேவனை நெருங்கி
" நான் வீழ்வேன் என்று நினைத்தாயோ"
என்று சிறு புன்முறுவலுடன் மீண்டும் கனவை நோக்கி பயணித்தாள்..

( தோல்வி படிகளை ஏறி மிதித்து சாதித்தாள்
இன்று இரு பள்ளிகளுக்கு தாலாளராக🌹)

அதோ..
அந்த கண்ணுக்கெட்டிய தொலைவில்
சிரித்தபடி நிற்கிறாள்..!!

வெற்றி களிப்பா அது..??
இருக்கலாம்..
தோல்வியோடு அவள் புரிந்த
கோர போர்களின்
முடிவாகவும் இருக்கலாம்..

அதுவரை..
எங்கோ இழுத்து செல்கிறது அவளையும்
அவள் காலங்களையும் அவளாகிய
அவள் கனவுகள்..
« Last Edit: February 05, 2025, 12:37:29 pm by Limat »

February 13, 2025, 11:31:47 am
Reply #2

Passing Clouds

Re: கவிதையும் கானமும்-051
« Reply #2 on: February 13, 2025, 11:31:47 am »
படிகளை உடைத்திடு, சிறகை விரித்து பறந்திடு!

"தோல்வியே வெற்றியின் முதல் படி"

அனைவருக்கும் எதிர்கால வாழ்க்கைப் பயணத்தில்
பயணித்துக் கொண்டிருக்கிறோம் படிகளைக் கடந்து…

பேருந்துப் படிகளில் நின்று பயணிப்பது போலத்தான்
இன்றைய நமது வாழ்க்கையின் பயணம்...
ஒரு கால் தடுக்கினால் கிடைக்கும் எட்டுக்கால் பயணம்...

ஒரு பெண் சாதனைப் படைக்க எத்தனை தடைகள்
இந்தச் சமுதாயத்தில்!
அத்தனை தடைகளையும் படிக்கட்டுகளாக மாற்றி
வெற்றியடையும் பெண்களும் உண்டு...
அந்தத் தடைகளில் மாட்டிக்கொண்டு தங்கள்
கனவைத் தொலைத்தவர்களும் உண்டு...

பெண்ணே! பிறவியிலேயே உனக்கு மனத்தைரியத்தை
அளவுக்கு அதிகமாகக் கொடுத்தான் கடவுள்...
மனிதரோ சாதி, மதம், இனம் என்னும் பாகுபாடால்
பெண்ணை அடிமையாக்கி அவளின் கனவைக் களைத்தான்...

தோல்வியே வெற்றியின் முதல் படி... ஆனால்
ஒரு சிலரின் வாழ்வில் தோல்வியே பல படியாக உள்ளது...

ஆணைவிடப் பெண்ணுக்குப் பொறுப்பும் தைரியமும் அதிகம்
என்பதால்தான் என்னவோ படைக்கும் பொறுப்பைப் பெண்ணிடம் கொடுத்தான்...
படைப்பவளுக்கே சமுதாயத்தில் இந்த நிலை...

மாறிவரும் காலம் சாதி, மதம், இனம் எல்லாம்
பெண்ணின் காலடியில்...
பெண்ணே! தோல்வியே வெற்றிக்கு முதல் படி என்பதை
மறந்துவிடு... மீண்டும் மீண்டும் அந்தப் படியையே உனக்கு அளிப்பார்கள்.

பெண்ணே! பிரசவத்தின் வலியைவிட வேறு வலி உண்டோ இந்த உலகில்!
அதைத் தாங்கிக்கொண்ட உனக்குப் படிக்கட்டுகள் எல்லாம் பஞ்சு மெத்தை!

சிறகை விரித்துப் பார, படிக்கட்டும் இல்லை, தோல்வியும் இல்லை
அனைத்திலும் வெற்றியே காண்பாய்...

தடை இல்லாத சமுதாயம் அமைத்திடு, சாதனை படைத்திடு !

அனைத்து பெண்களுக்கும் ஒரு சமர்ப்பணம் !


நீல வானம்
« Last Edit: February 13, 2025, 12:03:33 pm by Passing Clouds »

February 13, 2025, 04:01:33 pm
Reply #3

Thendral

Re: கவிதையும் கானமும்-051
« Reply #3 on: February 13, 2025, 04:01:33 pm »
❣️👍வானமே எல்லை ...உன் காலடியில் ...வெற்றி படிக்கட்டுகள் !!!👍❣️
 ஆம்... பெண்ணே என் கண்ணே...
என்றுமே ஏணியாய் ...தன்னையேற்ற...பெண்ணே
எத்தனை நாளாய் நீயும் அப்படியே ...😞
களைந்து  ஏறு களைத்து விடாதே... நீயும் !!!

மெல்ல ஏறத்தான் முயற்சி செய்யேன் ...என் கண்ணே!!

தந்தை கரம் பிடித்து சிறு கிள்ளையாய் அன்று
சிறியவனாலும் தம்பியின் பாதுகாப்பிலே எங்கும் சென்று
அதிகம் வாயாடாதே என்று அதட்டும் தாயை ஏற்று
அடக்கமாய் அன்பாய் அறிவாய் நீ இருந்தாலும்
அடக்கியே வைக்க முற்படும் இந்த சமூகத்தில்....

மெல்ல ஏறத்தான் முயற்சி செய்யேன் ...என் கண்ணே!!

உன் அறிவே உனக்கு அரணாக ...
உன் துணிவே உனக்கு துணையாக ...
உன் அன்பே உனக்கு அடையாளமாக ...

புத்தகம் தந்த பாடத்தை கற்று...
உற்றார் அறவினர் கூறிய அறிவுரைகளை ஏற்று...
உன் காலத்தையும் நேரத்தையும் உனதாக்கி ...ஏறு !!!

மெல்ல ஏறத்தான் முயற்சி செய்யேன் ...என் கண்ணே!!

உன்னை ஏற்றும் ஏணி எங்கே ...
உனக்கான ஏணி உன் மனமே ...கண்ணே!!!
மனதால் நீ முதல் அடி எடுத்து வை ...
ஆயிரம் படிகள் அடுக்கடுக்காய் ...உனக்காய் !!!

துணிந்து ஏறு ...அடையவிருக்கும்
உயரம் வெகு தொலைவிலில்லை ....!!!

மெல்ல ஏறத்தான் முயற்சி செய்யேன் ...என் கண்ணே!!

வானமே எல்லை... தடைகள் இனி இல்லை ...
ஓடி கடந்து விடு... அத்தனை படிக்கட்டையும் ...
உயர பறக்க ...விரித்து வா உன் சிறகை...!!!

 உன் உலகம் பரந்தது ...
உன் கனவு எல்லையற்றது...
 உன் விடியல் அதோ... எட்டும் தூரத்தில் !!!

அறிவே அரணாக ...
துணிவே துணையாக...
 அன்பே அடையாளமாக ...
ஏறு கண்ணே...முன்னேறு !!!

நீயே உன் ஒளி ...
நீயே உன் உளி...
உன் உயரம்... அதோ... தொடும் தூரத்தில்...!!!

மெல்ல ஏறத்தான் முயற்சி செய்யேன் ...என் கண்ணே!!

உன்னை போல் ஆயிரம்... கண்மணிகளுக்கு
நீயே அடையாளமாக !!!

தடைகளை உடைத்து ...  நீ ஏறிடவே விரைந்து ஏறு ...
அனைத்து படிக்கட்டுகளும் உன் காலடியில் ....
விரைந்து ஏறு ...இமயம் தொடு ...
பெண்ணே என் கண்ணே!!

இப்படிக்கு நானும் பெண்ணாய்...
❣️உங்கள் தென்றல் ❣️
« Last Edit: February 13, 2025, 04:11:07 pm by Thendral »

February 18, 2025, 12:31:50 pm
Reply #4

kittY

Re: கவிதையும் கானமும்-051
« Reply #4 on: February 18, 2025, 12:31:50 pm »
அறிவாளியையும் வென்றிடு. 🤗

முட்டாளாய் நடி, அறிவாளியை வென்றிடு, விழாமல் ஓட வேண்டும் என்றால், விழுந்து விழுந்து எழ வேண்டும், காயங்கள் இன்றி, தடைகள் இன்றி,
தோல்விகள் இன்றி,
வலிகள் இன்றி, எதுவும் கிடைத்து விட போவதுமில்லை,
அப்படி கிடைக்கும் எதுவும் நிறந்தரமும் இல்லை,

கீழே விழுந்து விடுவாய் ஓடாதே என்று கூற பல பேர் உண்டு, ஆனால் விழுந்தாலும் பரவாயில்லை மீண்டும் எழுந்து ஓடு என்று சொல்ல சிலர் உம் உண்டு, முயற்சி இல்லாமல் பயிற்சி இல்லை, பயிற்சி இல்லாமல் இலட்சியம் இல்லை,

உன்னால் முடியாது என்று கூறியவனின் முன்னாள் ஓடு..
உன்னை குறை கூறியவனுக்கு முன்பு ஓடு..
உன்னை மட்டம் தட்டியவனின் முன்பு ஓடு...
ஒருநாள் இவர்கள் யாரும் உன்னை பார்த்து கைத்தட்டும் சத்தம் கேட்கும் வரை ஓடு...
உனக்கான அந்த பொன்னான நாளை நீயே அடையும் நாள் வரும்... தடைகளை உடைத்து சாதனை படைக்க ஓடு ஓடிக்கொண்டே இரு.

குறை கூற இருப்பவர்கள் இருந்து கொண்டு தானே இருப்பார்கள் சாக்கடை நீரை போல அதையே நாம் நின்று கேட்டு கொண்டிருந்தால், உன் வாழ்வில் மாற்றம் எங்கிருந்து வருமோ,

ஓடும் ஆற்றினை பார்  தினமும் புதியதாய் ஓடிக்கொண்டே இருக்கின்றது. அதன் இலக்கு கடலை சென்றடையும் வரை அது தன் பயணத்தை இடைநிறுத்துவதில்லை, ஆற்றை போல நீயும் ஓடிக்கொண்டே இரு, உன் இலக்கு வரும் வரை ஓடு...

நம்பிக்கையை விதை , அதுவே மரமாகி உனக்கு நிழல் கொடுக்கும்,

ஒரு விதையை விதைத்து, அதற்கு நீரூற்றி, அது மண்ணில் இருந்து செடியாய் தலைகாட்ட ஆரம்பித்த வுடன் உரங்கள் இட்டு, மேலும் மேலும் தேவையான நீரை ஊற்றி அந்த செடி மரமாகி அதில் இருந்து பழங்களும், பூக்களும் கிடைக்க வேண்டும் என்று அவன் விதையில் இருந்தே காட்டிய அக்கறையும் கவனமும் மரமாய் வளர்ந்து இன்பத்தை
அளிக்கின்றது, முயற்சி இல்லாமால் எதுவும் இல்லை. அந்த விதையின் மீது நம்பிக்கை வைக்கவில்லை, உன் முயற்சியில் தான் அது மரமாகியது,

தட்டி கொடுக்க கைகள் இருந்தாலும், உன்னை தட்டி வீழ்த்தி விடவும் கைகள் உண்டு, உன் நம்பிக்கை என்ற மூன்றாவது கை கொண்டு முயற்சிக்க தவறாதே!

நம்பிக்கை இருக்கும் இடத்தில் தான் முயற்சி வரும், முயற்சி இருக்கும் இடத்தில் பயிற்சி வரும் பயிற்சி இருக்கும் இடத்தில் தான் வெற்றி வரும், வெற்றி வந்த பின்பே  எல்லாமே தானாய் வரும்,

கல்லடி பட்டு காயங்கள் கண்டு, சில மனிதர்களின்  சொல்லடி பட்டு,  கண்கலங்கி நின்றாலும் கிழக்கு சூரியனை போல இரவு கடந்து காலையில் வரும் பல கை கொண்டு உலகிற்கே வெளிச்சம் கொடுக்கும்,

உன் விடா முயற்சியும், உன் ஆர்வமும், உன் வலியும் உன்னை வீழ்த்த என்று நினைக்காதே, உன்னை வடிவமைக்கும் கருவிகள் என்று நினைத்து நம்பிக்கையோடு முன் செல்ல ஏமாற்றத்தையும்,
அவமானத்தையும், ஊக்குவிக்கும் ஆயுதாமாய் கையில் எடு!

இன்று என் நம்பிக்கையில் நான் எழுதிய இந்த கவிதை என் முயற்சி, உங்கள் வாழ்க்கையிலும் ஒரு மாற்றத்தை கொண்டு வரும் என நம்புகின்றேன், இன்றும் என்றும்  என் முயற்சியில் ஒரு கவிதை உங்களுக்காக....😊

February 22, 2025, 03:14:06 am
Reply #5

iamcvr

Re: கவிதையும் கானமும்-051
« Reply #5 on: February 22, 2025, 03:14:06 am »
சகோதரா!
கலங்கி நிற்கும்
தங்கையையோ தமக்கையையோ தாயையோ - பார்த்து
தடுமாறாத ஆண்களை கண்டதுண்டா?
அடுத்தவன் தங்கையையும் தமக்கையையும் தாயையும்
தடுமாற வைக்கும் ஆண்களை செல்லுமிடமெல்லாம் காண்கிறாயே ஏன்?


சமுதாயமே!
காணும் ஆண்களெல்லாம் சகல போகம் கண்டு களித்திருக்க
காவலிட்டு பெண்ணில் மட்டும் கலாசாரம் காக்க நினைக்கிறாயே ஏன்?
அவளின் கனவுகள்,
அவளின் சுயம்,
அவளின் எதிர்பார்ப்புகள்
அத்தனைக்கும் நீ வரையறைகள் வகுப்பது ஏன்?


தாயே!
தான் பட்ட கஸ்டம்
தன் மகள் பட கூடாதென நினைக்கும் தாயே- சமூகத்துக்கு
கட்டுண்டு வாழ
கடமையாற்றி வாழ
காயங்கள் பொறுத்து வாழ
சிறு பராயம் தொட்டு சொல்லி சொல்லி வளர்ப்பது ஏன்?


நாடே!
சட்டங்கள் பல இருந்தும்
சட்ட மீறல்கள் தொடர்ந்து ஏன்?
சுதந்திரம் பெற்று தலைமுறைகள் கடந்திருந்தும்
கதவுகள் அடிக்கடி அடைக்கப்படுவது ஏன்?
ஒரு தாய் பிள்ளைகள் நாமென்று சொல்லும் நீ
ஓர வஞ்சனையாய்
ஆண்களுக்கு அதீத சுதந்திரத்தையும்
பெண்களுக்கு அரைச்சுதந்திரத்தையும்
அர்த்தமிலாது வகுத்தளிப்பது ஏன்?


பெண்ணே!
தலைமுறைகளாய் வஞ்சிக்கப்பட்டும்
தவறிழைக்காமலே தண்டிக்கப்பட்டும் - இன்னும் நீ
தெளிந்து முடிவு காணாது
சார்ந்து வாழ்வதையே தொடர்வது ஏன்?
இன்னல் காணும்
இன்னொரு பெண்ணுக்காய்
கூட நிற்காதது ஏன்?
நீ காணும் இன்னல்களின் ஆழத்தை
உன் சகோதரனுக்கு உணர்த்தாதது ஏன்?


தேடிப் படி;
தீரப் பகுத்தறி;
"ஏன்?"களின் விடையறி;
அனைவரையும் ஒன்று சேர்த்து . . .
வென்று முடி.


என் தோழியே, என் சகோதரியே, என் தாயே!