மே தினக் கவிதை!!
உழைப்பினால்,
வியர்வையை தந்து,
உழைப்பின்
அயர்வினால்
உடல்நொந்து,
உலகிற்கு
உயர்வு தரும்
உந்து சக்தியான,
தொழிலாளிகளுக்கு
மே தின வாழ்த்துக்கள்!!
முதல் போட்டவன்
அல்ல முதலாளி!
தன் முதுகெலும்பை
முதலாகக் கொண்டு,
லாபத்தில்,
முதலாளியை
முதல் ஆளாக,
கொண்டு வரும்
தொழிலாளியே,
முதலாளி!!
மே தினம் தந்தது,
பணி நேரத்தை "எட்டாகவும்"
மிகை நேரத்தை "துட்டாகவும்"!!
மே தினம் தந்தது
முதலாளிகளுக்கு "கொட்டும்"
தொழிலாளிகளுக்கு "லட்டும்"!!
முதலாளி,
தொழிலாளிகளை
ஒப்பிட்டான்,
"பிணத்தோடு"!
அந்த எண்ணம்
ஒழிந்தது
மே "தினத்தோடு"!!
பலரின் தியாகத்தால்,
பணி நேரம்
பதினாறிலிருந்து
"எட்டானது"!
அன்று முதல்
தொழிலாளிகளுக்கு
இயந்திர சத்தம்
கூட "மெட்டானது"!!
நமக்கு
நலன் கிடைக்குமா
என்று
தொழிலாளிகள்
இருந்தனர்
"தாகத்தால்"!
அவர்களின்
தாகம் தீர்ந்தது
மே மாத
"மேகத்தால்"!!
மே தினம்
மா தினமாக மாற
தேவைப்பட்டது,
பலரின் "சத்தங்களும்"
பலரின் "ரத்தங்களும்"!!
இந்த உலகத்தை
ஆள நினைத்த,
முதலாளிகள் என்னும்
பாவிகளால்தான்,
இந்த உலகத்தை
விட்டு
தொழிலாளிகளின்
ஆவிகள் போனது!
ஆயினும்
அந்த "ஆவிகள்" தான்
மே தினத்தை
திறக்க
"சாவிகள்" ஆனது!!
"நெற் கதிர்களும்"
"சூரிய கதிர்களும்",
தலை நிமிர்ந்து
தலை சாயும் வரை,
தலை சாயாமல்
உழைக்கும்
உலகின் தலை
விவசாயி!!
"உளி" கொண்டு,
உளியின் "ஒலி" கொண்டு,
கை "வலி" கண்டு,
கல்லை கடவுளாக்கி
கருவறைக்குள்,
கொண்டு செல்பவரே
"சிற்பி"!
அவரை நீ "சிறப்பி"!!
நாம்,
துப்பியதையும்
துடைக்கும்
துப்புரவாளர்கள்,
"துப்புரவாளர்கள்" அல்ல!
அசுத்தத்தை கண்டு
பிடித்து அழிக்கும்
"துப்பறிவாளர்கள்"!!
பட்டு பூச்சியின்
நூல் கொண்டு,
நம்மை ஆடை
கொண்ட
பட்டாம் பூச்சியாய்
மாற்றும்
"நெசவாளி"!
உழைப்பில்
"நிறை வாளி"!!
"வலைகளை"
கொண்டு,
"அலைகளையும்",
புயல் "மழைகளையும்"
மேற்கொண்டு,
நாம் நாவாற
சுவைக்க,
இறா
சுறா
விரா
தந்து,
தன் கரத்தால்
சாகரத்தை
ஆளும் மா வரம்
மீனவன்!!
நாம்,
காலம் ஆகாத படி
காலனும் சிறிது
கருணை காட்டுகிறான்,
மருத்துவர்களின்,
காலம் கருதா
உழைப்பை பார்த்து!
மருத்துவர்களின்,
ஞானத்தினால் தான்
இந்த ஞாலம்
உயிர் பெறுகிறது!!
"விழா" நாட்களில்
கூட ஊருக்குள்
"உலா" வந்து,
நம் குடும்ப மகிழ்ச்சிக்கு,
தன் குடும்ப
மகிழ்ச்சியை,
காவு கொடுக்கும்
"காவலாளிகள்",
நம்மை காக்க
இறைவன்
அனுப்பிய
"ஏவலாளிகள்"!!
குடும்ப வாசத்தை
விட்டு,
தேசத்தின் மீது
"பாசமும்",
"விசுவாசமும்"
கொண்டு,
உறை பனியிலும்
உறங்காமல் பணி செய்து,
நாம் நிம்மதியாக
உறங்க
பாயாக இருக்கிறார்கள்
சிப்பாய்கள்!!
உழைப்புக்கு இல்லை,
"மதமும்
மாதமும்"!!
உழைப்பை நேசித்து,
அறிவால் வாழ்வோம்
"சிங்காரவேலர்களாய்"!
அகிலத்தில் வாழ்வோம்
"சிங்கார
தொழிலாளர்களாய்"!!
வாழ்த்துக்களுடன்
சிற்பி