தன்னந்தனியே
அழுதழுது கூட
தீர்ந்து விடாத சோகங்களில்,
உழன்று கொண்டிருக்கும் ஒருத்தியின்
ஆகச் சிறந்த வேண்டுதல் ஒன்றுமில்லை.
அவள் உள்ளக்குமுறலில்
பாதியை சுமப்பதற்கான,
இன்னோர் உறவின்
தாங்குதலைத் தவிர.
சொல்லிவிடத் தெரியாத ஏக்கத்தை தன்னகத்தே
நிரப்பி வைத்துக் கொண்டு,
இறக்கி வைத்து விட
ஏங்கிக் கிடக்கும் ஒருத்தியின்
வலிகளுக்குத் தேவை ஒன்றுமில்லை.
தொண்டக்குள்சிக்கிக் கொண்டு தவிக்கும்
வார்த்தைகளை செவிமடுப்பதற்கான, இன்னோர் நிகரற்ற
துணையைத் தவிர.
புறக்கணித்து,
ஓரமாய் தள்ளி வைத்து,
நா பேசக்கூட
இடமளிக்கப்படாத,
ஒடுக்கி வைக்கப்பட்டவளின்
அரண்ட தனிமைக்கு
வேறொன்றும் தேவையில்லை.
ஆறுதல் உணர்த்திடத் தெரிந்த
சில மனிதர்களையும்,
விம்முதல்களை
தணித்து விடத் தயாராய் உள்ள
உறவொன்றின்
அளவற்ற நேசத்தையும் தவிர.
யாருமே புரிந்து கொள்ளவில்லையே? என்பதாய் எண்ணி,
தனக்குள்ளேயே
விசும்பிக் கொண்டிருப்பவளுக்கு...! நினைப்பதை
பேசி விடத் தேவையான,
ஓர் சில மணித்துளிகள்
போதுமாய் உள்ளது.
முழு வீச்சுடன் தன் பாரங்கள்
குறைக்கப்பட்டதாய் அவள் உணர்வதற்கு.
அலுத்துப் போய்,
விரக்தியின் எல்லைகளில்
நின்று கொண்டு,
இவ்வாழ்வு நமக்கும் ஏதோவோர்
விடுதலை மிச்சத்தை,
எப்போதாவது வழங்கி விடாதா என்று, குமுறிக் கொண்டிருக்கும்
ஒருத்தியின் கடைசி நிலைப்பாட்டுக்கு, வைத்தியமாய் எதுவுமில்லை.
அவளைச் சுற்றி உள்ள
அனைத்தும்
அன்பினால் நிரப்பப்படுவதை தவிர.
அவள்களை
அவள்களுக்கான சின்ன உலகத்தில், பிரம்மாண்டங்களாய்
உணர்த்தி விடுதலை தவிர,
அவள்களுக்குள்
அவ்வளவு பெரிதான
வேண்டுதல்கள் எதுவும் இருப்பதில்லை. அவ்வளவே தான்...!
படபடப்பில்லாமல்
வாழ்வை நகர்த்துவாள்