பத்திரிக்கையில், பெயர் பொறித்த நாளோடு!
பரிதவிப்பு பற்றிக்கொண்டு, பாடாய் படுத்துதடா!
கல்யாண தேதி, பக்கத்திலே இல்லையடா!
புகலிடமாய் உன் மடி சேர, ஆவலும் கூடுதடா!
அலாதியான ஆவலுடன், மங்கையென்னை திருமதியாக்க, மன்னன் அவன் வருவானே!
ஒப்பான கனவினிலே, ஓயாமல் வந்தவனே, என்னுள்ளே ஓருயிராய் இணைவானே!
கண்கவர்ந்த கண்ணாளா!
மனம் நிறைந்த மணவாளா!
சிந்தையிலே நித்தம் வந்து!
நிஜமாகும் நாளும் வந்து!
அகத்தினுள்ளே கொண்டாடி!
முகத்தினிலே புன்முறுவல் பூத்து!
நாணத்திலே கன்னம் சிவந்து!
தனி உலகில் நானிருக்க!
கை, கால்கள் பதட்டத்துடன்,
தலை கவிழ்ந்து நான் நடக்க!
பொன்நகைகள் மினுமினுக்க!
பொலிவான ஒப்பனையும்,
கூந்தலில் சூடிய மல்லிகையும்,
கை நிறைந்த மருதாணியும்,
காஞ்சிப் பட்டில் களஞ்சியமாய்,
காண்போர் கண்ணுக்கு அழகு சிலையாய்,
மஞ்சளும், குங்குமமும் சூடிக்கொண்டு,
சுற்றத்தார்கள் சூழ்ந்து நிற்க!
சொல்லில் அடங்கா வார்த்தைகளும் உதடு தாண்டி வர மறுக்க!
நாதஸ்வர இசையுடனே,
அன்பை கொண்டாடும் நாளாக!
அடக்க ஒடுக்கமாய் நானிங்கே!
அவன் வருகைக்காக காத்திருக்க!
காட்சி பிழையா, இல்லை காதல் பிழையா இது ?
மொத்த அழகும், அவன் முகத்தினிலே குதூகலிக்க, கம்பீரமாய் வந்து நின்றான்!
வந்திறங்கிய கணமதிலே, கண்ணோடு கண் பார்த்து, வெட்கத்திலே தலை குனிய வைத்தான்!
நெருங்கி வந்து, ரகசியமாய்
கண்ணடித்தான்!
தோழிகளின் சிரிப்பொலியும்,
சொந்தங்களின் கேலி பேச்சும்,
திரையிட்டு மறைத்ததே, வார்த்தையதை!
ஆற்ற முடியா நாணத்துடன், கைகளும் முகத்தை மூடியதே..!
வெட்கத்தையும் படம் பிடித்து பரிசாக தருவானோ?
நகை புதிது,
உடை புதிது,
நாணம் புதிது,
எண்ணம் புதிது,
என்னவனை சேரும் நாளும் புதிது,
கரம் கோர்த்து, மாலை சூடி, கட்டிய மாங்கல்யத்துடன் அவன் வசமாகும் நாளிதுவே!
தந்தை, தாய் ஆசிர்வாத அட்சதை தூவி, நம்மை வாழ்த்தி வழியனுப்பும் நாளுமிதுவே !
என்னவன் கையில் தஞ்சமடைந்த என் கைகளும் நடுங்கியதே .. ?
சேர்ந்த நம் மணநாளை கொண்டாடவா ?
ஆனந்த கண்ணீரில் மிதக்கும், என் அன்னையவள் அன்பை, விட்டு பிரிய மனமின்றி, தந்தையின் தோள் சாயாவா?
புது உறவை ஏற்றுக் கொண்டு,
புகுந்த வீட்டில் பக்குவமாய் வாழ,
பாசத்துடன் ஆசிர்வதித்து,
பெருமித சிரிப்பொன்றை முகத்தில் காட்டி,
அன்புடன் அரவணைத்த,
பெற்றோரின் ஆசைகளும்,
நிறைவேறும் நாளும் வரும்.
வாழ்த்தொலிகள் விண்ணை முட்ட, இருமனம் இணைந்த நாளை,
கலப்படமில்லா கவிதையாக,
திகட்டாத இனிப்பாக,
தெள்ளுதமிழ் பாட்டாக,
கனிவான வாழ்வாக,
ஊர் மெச்ச, மங்காத தமிழாக, வாழ்வோம் நாமே!.