""மாலையில் யாரோ மனதோடு பேச''
மார்கழி வாடை மெதுவாக வீச'' மெல்லிசையில், மெல்லமாய் தொடங்கும், அந்தி நேர ரயில் பயணமிது..!
குழறிய வார்த்தைகளின் குதூகலமா..?
வம்படியாய் சிக்கிக் கொண்ட விசித்திரமா?
வார்த்தைகள் கோர்த்து தீட்டிய வர்ணமா?
இவை ஒன்றாக கலந்து எழுதிய புது மொழியா?
என்றெண்ணுமளவு, கனவுகள் பல நூறு சுமந்து, சுதந்திரமான பயணமதை இனிதே தொடங்கினாள்..!
சில்லென்ற காற்று வீசும் சாளரத்தின் அருகிலே, சிற்றிதழ் சொந்தக்காரி சாவகாசமாய் அமர்கிறாள்..!
பச்சை பசேலென்ற பசுமையான வயல்வெளியின், அரும்புவிட்ட நெற்க்கதிரின் வாசமும், இனிமையான சுகந்தமும்..!
தாழப் பறக்கும் வண்ணத்துப்பூச்சிகளின் பட படக்கும் சத்தமும், ரயிலின் ஆராவார சத்தத்துடன் போட்டி போடும் தருணமும்..!
கடந்து செல்லும் கண் கொள்ளா இயற்கையின் நடுவே, ஆயிரம் கதை பேசும் சொந்தங்களும், சிக்காமல் சிட்டாக அங்குமிங்கும் ஓடித் திரியும் சின்னஞ் சிறு மழலைகளும்..!
மொழிகள் ஒருமித்து எதிரொலிக்கும் சத்தத்தின் நடுவிலே, இனிப்பான தேநீரும், பலவகை நொறுக்கு தீனி விற்பவரின் கணீரொலியும்..!
இவையாவும் ரசித்த படி அமர்ந்திருக்கும் அமைதியான அவள் கண்களும், கதை பேசுதே பயண மொழி..!
இணையா இரயில் பாதையே.."
இணைந்து விடும் மனங்களே.."
இத்தனை ரம்மியங்கள் தாண்டி, இதமாக இதயம் துளைக்கும், என்னவன் நினைவுகளே..."
சிதறிய சிந்தனையில், மனம் லயித்த அவளின், எங்கோ சென்ற நினைவை, நிகழுலகம் கொண்டு வந்தவர் யாரோ..?
சட்டென்று பெய்த சாரல் மழை தான் அதன் பெயரோ..?
கன்னம் தொட்ட மழைத்துளியே..!
கார் கூந்தல் நனைக்கும் கருமேகமே..!
குளிர்ச்சியான சிலிர்ப்பூட்டும் சிறுதுளியே..!
மண் மணம் கமழும், மழை வாசமே..!
கையில் வாங்கி, அள்ளி வீசி ஆனந்தம் கொள்ளும் என் சுவாசமே..!
மனம் தெவிட்டா மகிழ்வான பயணமிது!
ஆனந்தத்தின் எல்லை தொடும் நெடுந்தூர பயணமிது!
கனவுகளை ஸ்தம்பிக்க வைத்து, காற்றிலே பறக்கும் தொடர்வண்டி,!
இறுகிய மனதுடன், பிரியா விடை கொடுத்து, இறக்கி வைக்கும் ரயில் வண்டி.!
சிலமணி நேர சந்திப்பின் பிரிவில், சமாதானமின்றி இறங்கி செல்லும், நினைவுகளை துரத்தி செல்ல முடியா பயணம் இது..!
மொத்தத்தில் மிச்சம் வைக்காத, அத்தனை நினைவுகளடங்கிய, அனுபவங்களின் தொடர் பயணம், தொடர்கின்ற பயணம்..!