விளக்கு வைத்த நேரத்திலே, மின்மினி பூச்சி கண்டேனம்மா!
இரவை விரட்ட போராடி, அங்கும் இங்கும் ஓடுதம்மா!
கார் இருளில், கண் மயக்கும் நடனம் ஒன்றை ஆடுதம்மா!
ஒளியை பரப்பி, அனைவரையும் ஆனந்தத்தில் ஆழ்த்துதம்மா!
குழந்தைகளும், கொண்டாடும் அற்புதத்தை காட்டுதம்மா!
ஒற்றை ஒளியை, சுமந்து கொண்டு உலகம் சுற்றும் மின்னலம்மா!
குழந்தையாகி மகிழ்ந்தேனே!
கவலை தனை மறந்தேனே!
ஒளியை தேடி ஓடி வரும், எத்தனை ஜீவன் உலகிலம்மா!
நன்மை, தீமை, அறிந்திருந்தால் நாளும் வெற்றி கிடைக்குமம்மா!
மனிதருள்ளும், தெரிந்தோ தெரியாமல், தவறிழைப்போர் கண்டேனம்மா!
ஒருவர் வாழ்வில், வெளிச்சமாய் இருந்தால், எத்தனை சுகமென, உணர்ந்தால் புரியுமம்மா!
முயற்சியற்று, முயல்வோரை இகழ்ந்து, மூடர் போல்.. வாழ்ந்தது போதுமம்மா!
புத்தக வாசம்!
உணவின் அருமை!
உடையின் அழகு!
பணத்தின் பலம்!
உற்ற நண்பன்!
உண்மை உறவுகள்!
கனவுகளின் எல்லை!
இவை, அறிந்திரா எத்தனை ஜீவன்கள் மண்ணில் உள்ளதம்மா!
இயன்ற மட்டும், ஒருவர் வாழ்வில், விளக்காய் இருந்தால் போதுமம்மா!
வறுமையிலே உதவிடம்மா!
குடிசையிலே விளக்கேற்றிடம்மா!
பசிக்கு தான் உணவிடம்மா!
உழைப்பிலே உயர்ந்திடம்மா!
தோல்வியில் உடனிரம்மா!
அழுகையில் ஆறுதலாய் இரம்மா!
அன்பிலே உண்மையாய் இரம்மா!
உயர்வுக்கு ஊக்கமாயிரம்மா!
மூங்கிலில், காற்று நுழைந்தால்.. கானம் பிறக்குமம்மா!
ஒருவர் வாழ்வின், தன்னம்பிக்கையாய்.. நீ இருந்தால் நிம்மதி கிடைக்குமம்மா!
நீர் தெளிக்கும், மேகமாக.. நின்று விடம்மா!
கனவுதனை, எட்டிப் பிடிக்க.. வெளிச்சமாக மாறிவிடம்மா!
கம்பன் கவிதை கேட்டு, காற்றில் பறக்கும் மின்மினியே!
அந்தி நேர ஆவலாய், அணையா விளக்காய் ஒளிர்ந்தாயே!
வெற்றி வெளிச்சம், மக்கள் பக்கம் வீசினால் , என்றும் அது பிரகாசமே!