என் அன்பு மகளே,
உன் தாயின் கருவில் நீ மலர்ந்தபோது
இந்த உலகிற்கு என்னை அடையாளம் காட்டினாய்,
இந்த பூமியில் நீ பூத்த போது உலகை
எனக்கு அடையாளம் காட்டினாய்!"
தவமாய் தவமிருந்து எம் தாயின் உருவில் பெற்ற என் தேவதையே ! கண்ணே.! கண்ணின் ஒளியே !
நீ பிறந்த அன்று
ரோஜாப் பூவாய் உனைக் கையில் ஏந்தி ஒரு
ராஜாவாக உணர்ந்தேன் உலகையே வென்றவனாய்.!
பா.. அப்பா.. என முதன் முதலாக நீ
பவழ வாய் திறந்து தித்திக்கும் தமிழில் பேசியதும்...
தத்தித் தவழ்ந்து நடை பழகியதும் உன்னை
ஈன்ற பொழுதின் பெரிதுவந்த
இனிய தருணங்கள் இன்று நினைத்தாலும்
இதயம் சிலிர்க்கிறது .!
முதன்முதலில், என் குழந்தையின் முகத்தைப் பார்த்து முத்தமிட்ட அந்த நொடி! அந்த உணர்ச்சியை விவரிக்க எனக்கு வார்த்தைகளே இல்லை. தன் ரத்தம், தன் வாரிசு, தன் குழந்தை, அடுத்த சில வருடங்களில் தன்னைத் தாங்கப் போகும் தூணான, உன்னை முதன்முதலில் கையில் ஏந்தி, முத்தம் கொடுத்த அந்த அழகிய நொடியை என்னால் மறக்கவோ, விளக்கவோ முடியாது. அந்த இன்பத்திற்கு இணை எதுவும் இல்லை...
உன் பிஞ்சு கைகளால், அந்த மெல்லிய விரல்களால், உன் முழு கையையும் வைத்து என்னுடைய ஆள்காட்டி விரலைப் பிடிக்கும். அந்த அழகை ரசிக்கவே எனக்கு ஆயிரம் கண்கள் வேண்டுமே!
தினம் தினம் உன்னுடன் விளையாடும் அந்த அழகான இன்பத்திற்கு இணை எதுவும் இல்லை...
நீ என் மார்பில் எட்டி உதைக்கும் சுகமும், உன் அழகிய கொஞ்சல் சிரிப்பும் என்னை வீழ்த்தும் அஸ்திரங்கள். என் ராஜகுமாரி உன்னை கொஞ்சி கொஞ்சி நாட்களைக் கழிக்கும் அந்த இன்பத்திற்கு இணை எதுவும் இல்லை...
நீ முதல் முதலாக என்னைப் பார்த்து அப்பா என்று கூறிய போது நான் மீண்டும் இப்பூமியில் பிறந்ததைப் போன்று உணர்ந்தேன்...
என் மார்பிலும், முதுகிலும், தோளிலும் தவழ்ந்த உனது பிஞ்சு பாதங்கள் முதல் அடியை எடுத்து வைத்ததும், எனக்கு ஆனந்தக் கண்ணீரும், மகிழ்ச்சியும் எனக்கு காட்டாறு போல பெருக்கெடுத்து ஓடியது... எங்கே நீ கீழே விழுந்து விடுவாயோ என்று நானும் உன்னுடன் சேர்ந்து குழந்தையாகவே மாறிப் போனேன்...
என் விரல் பிடித்து நடந்த என் குட்டி தேவதை பருவ வயதில், பூப்பெய்தியதும், என்னை அறியாமல் ஒரு ஆனந்தமும், பயமும் எந்தன் உடல் எங்கும் பரவியது. அந்த உணர்வை எப்படி சொல்லலாம்? என் பெண் பிள்ளையை பத்திரமாக பார்த்துக் கொள்ள வேண்டிய கட்டாயமும், அவளுக்குத் தேவையானதைச் சேர்க்க வேண்டும் என்ற பொறுப்பும், இன்னும் வெகுசில வருடங்களில் அவள் இன்னொருவனின் மனைவி என்கிற எண்ணத்தின் தாக்கமும், பேரானந்தமும் ஒருசேர ஒருவிதமான உணர்ச்சியை என் மனதில் உருவாக்கியது. அதைப் பெண் பிள்ளைகளைப் பெற்ற அப்பாக்களால் மட்டுமே உணர முடியும்.
காலங்கள் உருண்டோட 'நேற்று பிறந்த குழந்தை போல' தோன்றும் என் பெண் பிள்ளைக்கு திருமண நாள் குறிக்கப்படும். மகனாக இருந்தால், அவனை நல்ல ஒரு ஆண்மகனாக வளர்த்து, தன்னை நம்பி வரும் பெண்ணை தன் தாய்க்கு நிகராக நடத்துபவனாக மாற்றி இருக்க வேண்டும். மகளாக இருந்தால், அவளுக்கு ஏற்ற துணையை தேர்ந்தெடுக்க வேண்டும். என் மகளின் கைகளை தன்னைவிட பத்திரமாகப் பார்த்துக் கொள்ளும் ஓர் ஆடவனிடம் ஒப்படைக்கும் நொடி.... என் மகளின் வாழ்வு நிறைவானதாக இருக்க வேண்டும் என்ற வேண்டுதல் ஒருபுறமும், இனி இவள் மீது இவள் கணவனுக்கே முதல் உரிமை என்ற நிதர்சனமான உண்மை மறுபுறமும் மாறி மாறி அலைக்கழிக்கும். ஆனாலும், உதட்டில் புன்னகையுடனும், கண்களில் ஒளிந்திருக்கும் கண்ணீருடனும் என் மகளை, மருமகளாக இன்னொரு வீட்டிற்கு வழி அனுப்பி வைக்கும் என்னைப் போன்ற அப்பாவின் மனதில்தான் எத்தனை எத்தனை எண்ணங்கள்!
இப்படி ஒரு பெண் பிள்ளையைப் பெற்ற அப்பாவின் வாழ்வு முழுவதுமே சிறு சிறு நெகிழ்ச்சியுறும் தருணங்களால் நிறைந்தவையே.
அப்பாக்களுக்கு நிகர் அப்பாக்கள் மட்டுமே
இறுதியாக சில வார்த்தைகள் சொல்ல ஆசைப்படுகிறேன். எனக்கு இன்னும் திருமணமாகவில்லை. வருங்காலத்தில் எனக்கு திருமணம் ஆன பிறகு எனக்கு பெண் குழந்தை பிறந்தால் மிகவும் மகிழ்ச்சியாய் உணர்வேன்... மீண்டும் என்னுடைய அம்மாவே இந்த பூமியில் பிறந்தது போல மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவும், பேரானந்தமாகவும் உணர்வேன்...
சற்று பெரிய கவிதை தான். என் கவிதையை பொறுமையாக வாசித்து காட்டியதற்கு மிக்க நன்றி...
இப்படிக்கு
உங்கள் (NATURE LOVER) இயற்கை நேசகன்