நான் சேமித்துக் கொண்டு வரும் யாவும்
கடைசியில் எனக்கே
சொந்தமானதாக இராது...!
வெகு இயல்பாய்
கடைசியாகிப் போக வேண்டும்!
எக்காலத்திலும்
யார் வருகைக்காகவும்
காத்துக் கொண்டிராது
நகர்ந்து போகும்,
அமைதியானவொரு நதியினை போல...!
தான் வந்து விட்டுச்சென்ற
தடயத்தை மட்டும்,
மண் வாசனை மூலம்
விட்டுச் செல்லும்,
அப்போது காலாவதியான
பெரும் மழையை போல...!
யார் கால்களை நீட்டினாலும்
பாரபட்சமின்றி
நனைத்துப் பரவசமூட்டும்,
ஆழியின் ஆனந்த அலையை போல...!
அது நிகழ்ந்தேற வேண்டும்.
"எங்கோ ஏதோவொரு கடைசியில்
நானும் மிச்சமிருக்கிறேன்"
எனும் மீட்டல்களை,
எந்த மனதிலாவது
காலம் இருத்தி வைத்தால் மதி.