நீ வரும்முன் வரை என் வாழ்வில்
நானில்லாதிருந்தேன்
நீ வந்தாய்
உன்னை பிடித்திருந்தது
அதன் நீட்சியாய் உனக்கு பிடித்ததெல்லாம்
எனக்கும் பிடிக்கத் தொடங்கியிருந்தது
வாழ்வின் பரிமாணங்களை
நான் அறிந்திடாத
புதிய கோணங்களில்
அணுகத்தெரிந்திருந்தது உனக்கு
அழகாய் தெரியத்துவங்கியது வாழ்வு
கொஞ்சம் கொஞ்சமாய்
வாழ்வு பிடித்தமானதானதாக மாறிப்போனது
பிடித்தமான வாழ்வென்பது
ஒரு போதை தானே
நீ வந்தபின்னான வாழ்வெங்கும்
நான் நிறைந்திருந்தேன்
நிறைவாய்
கூடவே நீயுமிருந்தாய்
உனக்கு பிடித்தமானதை எல்லாம்
எனக்கும் பிடித்தமானதாக்கியிருந்தேன்
எனக்கான உலகொன்றை காணும்
கண்களை பரிசளித்தாய்
பேராசைகள் தீண்டாத
ஒரு கனவை கையாளப் பழக்கினாய்
தனிமை என்பது ஒரு மனநிலை தானோ
என எண்ண வைத்தாய்
என் ரசனை உன் கோணங்கள்
உன பார்வை என் அணுகல்
என்பதெல்லாம் மறைந்து
நம் பார்வை நம் ரசனை
நம் கோணம் நம் அணுகல் என
விதிகள் மாற்றிக் கொண்டோம்
இழப்புகளில் துவண்டிடாத
ஒரு இலகுவான மனம் கொண்டோம்
ஏதேன் தோட்டமொத்த ஒரு வெளியில்
உலவிக்கொண்டிருக்கிறேன்
ஊடுருவும் சாதாரண பாம்புகள் தவிர்த்து
சாத்தானிய விலகல்களும் ஊடறுக்கும் பிரிதல்களும்
அண்டிடாத ஆப்பிள் மரத்தடிகளில்
இளைப்பாறிக் கொண்டிருக்கிறேன்
ஆதாமின் ஆப்பிள்களும் ஏவாளின் ஆப்பிள்களும்
ஒன்றல்ல என்பதை விடுத்து
நாம் என்பது கடவுளின் கனிவு நிரம்பிய
கனிகள் காய்த்துக் குலுங்கும்
சுவன விருட்சம்
வா கவிதைகளை பேசியபடி
நான்...மன்னிக்க...
நாம் இளைப்பாறிக் கொண்டிருப்போம்