மௌனங்களை நீ உனதாக்குகையில்
ஒரு வழிப்போக்கன் தன் பிரயாணத்தை துவங்குகிறான்
வலிமையான தன் ஆயுதங்களை துறந்திடும் முன்னதாக
நடுங்கும் கரங்களோடு கடைசியாக வாள் வீசிக் கொள்கிறான்
மளுங்கிய அவன் வாளின் முனைகளுக்கு
இலக்குகள் என்று யாதொன்றும் இருப்பதில்லை
கனிவின் மொழிகள் கொண்டு
அவன் பாடித்துவங்கும் ஒரு போர் பரணியில்
புரிபடாத சமிக்ஞைகளையே
நோக்கம் வைக்கிறான்
கேடயங்களின் கனம் கொள்ளாத அவனது வீச்சு
ஏக்கமூறிய ஒரு நினைவு கொள்ளுதல் மட்டுமே
ஊடிக் கதவடைக்கும் வாழ்வின் முடிவிலா பக்கங்களில்
யாரும் கொண்டிட முடியாத ரகசிய அறைகளில்
அவனது ஆயுதங்கள் இனி துருப்பிடித்து நொடியட்டும்
வழிப்போக்கனின் பிரயாணங்களுக்கு தோதாக
சுய தீர்மானம் செய்து நீள்கிறது பாதை...
இரகசிய மொழியில் அவன் பாடும் பாட்டு
மறைவான அலைவரிசைகளில்
ஒலித்துக் கொண்டே இருக்கும்..
Good bye all ❤️❤️❤️