நெருங்கிப் பழகின மனிதர்களுக்கும்
எங்களுக்கும் இடைல ஒரு இடைவெளி விழுறப்ப,
அல்லது முற்றாக ஒருத்தரை
மரணத்தின் வழியாக இழக்க நேரிடுறப்ப,
அவுங்க மீதுள்ள குறிப்பிட்ட சில விஷயங்கள்தான்,
அவுங்களை நினைவு படுத்திட்டே இருக்கும்.
அதுல பிரதானமானது, அவுங்களோட முகம்.
அந்த முகத்தை இழக்குற சோகம் தாளமுடியாத ஏக்கத்திற்கானது.
அவுங்களோட நினைவாக
நாம வச்சிக்கிட்டு இருக்குற போட்டோக்களை
அப்பப்ப பாக்குறப்ப, மனசுக்குள்ள ஒரு துயரம் எழும்.
அந்த நிமிஷத்து துயரம்,
நம்மை ஆட்கொள்கின்ற போது,
நம் கண்ணீரின் வழியாக அவர்கள் நினைவு கூறப்படுகிறார்கள்.
பிரிதொரு முகத்தை கொண்டு பூரணப்படுத்த தடுமாறுகின்ற,
வற்றாத ஜீவனுள்ள ஒரு முகத்தின் வெற்றிடமென்பது,
அலாதியான விருப்பத்திற்குச் சொந்தமானது.
அதுக்குப் பிறகு நாம் சந்திக்கின்ற எல்லார்ட்டயும்,
நாம் கடக்கின்ற நெறய மனுஷங்க கிட்ட
அந்த முகத்தை தேடி தோற்றுப் போகிறோம்.
வாழ்க்கையின் இன்னல்கள் சூழ்ந்து கொள்ளும் போதெல்லாம்
அவுங்க நம்ம கூடவே இப்பவும் இருந்திருந்தா
நல்லாருக்குமே என்ற ஏக்கத்தில்,
அவர்களின் முகம்தான் நம்முன் வந்து தவழ்கிறது.
நம்ம மனசோட நிறைவை,
நாம நெனக்கிறப்ப எல்லாம் கிடைக்கிற ஒருவித ஆறுதலை, நிம்மதியை,
அந்த முகம் கொண்டிருக்கிறது.
நினைத்துப் பார்ப்பதற்கு, நினைத்தழுவதற்கு,
நினைத்தேங்குவதற்கு,
அத்துனை பிடித்தமுள்ள ஒரு முகத்தின் பெருமானம்,
ஆயுளுக்கும் நம்ம மனசுலயே இருக்கிறது,
அவ்வளவு சாதாரணத்தன்மை உடையதில்ல.
நினைவுகளின் பெரு வனத்தில்
பூத்து அழிகின்ற எத்தனையோ மலர்களில்,
இந்தவொரு முகம் மாத்திரம்,
பிடித்தமான ஒரு ரோஜாவைப்போல
அழியாமல் இருந்துவிடுகின்றது.