4
« on: November 11, 2024, 06:09:05 pm »
நீர்வீழ்ச்சி
வானில் முட்டி மோதி
உரசிச் செல்லும் மேகக் கூட்டம்,
அது மோகத்தின் தாகத்தில் உச்சி
மலையை முத்தமிடும்.
முத்த மிச்சங்கள் பாற்கடலாய்
உச்சியில் வழிந்து கொட்டும்..!
பொங்கும் உவகையால் பூரிக்கும்
நுரைக்கடல் எங்கும் ஆர்ப்பரிக்கும்
அருவியை நான் பார்க்கிறேன்
அதன் அழகில் என்னை மறக்கிறேன்..!
சுடரின் பட்டுக்கதிர் பட்டு,
சிறு துளிகள் ஒளி வீசும்.
விண்ணுக்கும் மண்ணுக்கும்
வெண் நுரைப் பந்தலாய்,
கண்ணையும் கருத்தையும்
கரைக்கின்ற விந்தையாய்,
நிலம் மோதும் நீரினோசை
சட சட ஒலி பரப்ப
மரமோதும் காற்றோசை
பட பட ஒலி பரப்ப
மரமுகும் சருகுகள்
சர சர சப்தமிட
வானத்தில் வழிந்து வரும் நீரருவி,
ஆனந்த நடை போடும் நம் மனமுருவி.
அருவிநீர் அருகே பனிதரும் காற்றும்
ஆகாயம் முட்டும் கனிதரும் மரமும்
ஓங்கார இரைச்சலிட்டு ஓடிவரும் நீரும்
எங்கும் காணாத எழில் மிகு அழகு
சிந்தையில் என்றும் நீங்காது ..!