Advanced Search

Author Topic: விடுதலை ✨️✨️  (Read 112 times)

November 01, 2026, 12:51:27 am
Read 112 times
விடுதலை ✨️✨️
« on: November 01, 2026, 12:51:27 am »
ஒரு விடுபடுதலுக்காகத்தான்
அத்தனை சுவர்களை உடைத்தோம்
அத்தனைக் கதவுகளைத் திறந்தோம்
அத்தனை எல்லைகளைக் கடந்தோம்

இன்னும்
கட்டுப்பட்டிருந்த
கட்டளைகளிலிருந்து
கண்காணிப்புகளிலிருந்து
நம்மைப் பற்றிய
பிறரின் தீர்ப்புகளிலிருந்தும்
ஒரு வழியாய்
விடுபட்டோம்

இனி
நாம் எங்கும் செல்லலாம்
விரும்பியதெல்லாம் செய்யலாம்
யாருடனும் சேர்ந்து நடக்கலாம்
எப்போது திரும்புவாய்
என நம்மைக் கேட்க
யார் இருக்கிறார் என மகிழ்ந்து கொண்டாடிட
முடிகிறதா
பார்

திசைகள் எல்லாம்
திறந்திருந்தும்
திரும்பிச் செல்ல
ஒரு வீடு இல்லாமல்
போனதையே
துயரமென வாடி நிற்கிறோம்

பின்னும்
நம்மைத் தடுக்க ஒரு கரமில்லாதது
ஆசுவாசம்தான்
போலவே
நம்மைத் தாங்கிக்கொள்ள
ஒரு கரமில்லாதது பெரும்
அவஸ்தையும்தான்
இல்லையா

கூண்டிலிருந்து
வெளியே வந்த பறவையாய்
முதலில் வான் பார்த்து மகிழ்வதும்
பின்
தான் வாழ்ந்தக் கிளையின்
நிழலைத் தேடுவதும்தான்
ஆண்டாண்டுகளாய்
நாம் தேடிய விடுதலையா
என்ன

தவிர
விடுதலையென்பது
எப்போதும்
சிறைகளை உடைத்து வெளியேறுவதல்ல
சமயங்களில்
நம்மைக் காத்து நின்ற
சில அரண்களையும்
இழப்பதுதான்
இல்லையா

ஆக
எல்லாக் கதவுகளும் திறக்கப்பட வேண்டியவை
அல்ல
சமயங்களில் வானம்
பார்க்க
ஒரு சிறிய ஜன்னலே
போதும்