Advanced Search

Author Topic: கவிதையும் கானமும்-052  (Read 1243 times)

March 10, 2025, 02:51:12 pm
Read 1243 times

RiJiA

கவிதையும் கானமும்-052
« on: March 10, 2025, 02:51:12 pm »
உங்களின்  கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும்  ஊக்குவிக்கும்  முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.

இந்த பகுதியில்  ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு  கருத்து படம் (புகைப்படம்)  கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு  பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி  இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள்  அடுத்த ஞாயிற்று கிழமை அன்று  GTC இணையதள வானொலியில்  வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு  சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும்  கானமும் நிகழ்ச்சியாகும்
.



இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.


1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.

2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.

4. இங்கே  கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு)  முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.

கவிதையும் கானமும்-052


இந்தவார கவிதை எழுத்துவற்கான  புகைப்படம்.




மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.

இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும்  மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
« Last Edit: March 10, 2025, 07:22:06 pm by RiJiA »

March 11, 2025, 08:29:33 am
Reply #1

Limat

Re: கவிதையும் கானமும்-052
« Reply #1 on: March 11, 2025, 08:29:33 am »

என் அம்முவின் மனதை அறிந்த நான்
அவளின் மௌன மொழியுடன் எனது கவிதை வரிகளும் சேர்ந்து சமர்பிக்கிறோம் நமது GTC யின் கவிதையும் காணமும் நிகழ்ச்சிற்க்காக..


                           நிலவாகியவனே...


வான கருங்கடலில் நீந்திக்கொண்டிருக்கும்
மேகமீன்கள் ...
அதில்
முத்தென முளைத்திருக்கும் நட்சத்திரத்தை ...
தென்றலோடு கோர்த்து மாலையாக்கினேன்
நிலவே உனக்காக அணிவிக்க...
முழுதாய் முகத்தை கண்டதும்
முழுநிலா கரைய தொடங்கியது...
என்னுள்  தொலைய தொடங்கியது ...

மதியின் மனம் யார் அறிவது?
அதன் தனிமை யார் உணர்வது ?

நிலவுக்கு என் பெயரா.?
எனக்கு நிலவின் பெயரா.?

நிலவுக்கு தனிமை கற்றுக்கொடுத்தது நானா.?
என் காவலன் நிலவா.?
இருவரில் யார் அழகு.?
இருவரின் காத்திருப்பு
யார் வருகைக்கு.?

பகலில் நான் எதிரில்
நிலாவே நீ மறைவில்...
இரவில் நிலவே நீ வானில்
நானோ கனவில்...

என் கோபக்கனலை அணைக்கும் குளிர்தன்மையன் என் மாமனே..

என் தனிமை போக்க நிலவாக என்னுடனே பயணிக்கின்றானோ என் மாமன்..

எனை அழகாக்க தன்னொளியில் என்
மேனியில் நட்சத்திரங்களை பதித்தவன்..

இரவெல்லாம் எனக்காக விழித்திருப்பவன்
என்னறையில் ஊடுருவல் புரிந்த வெண்கதிரோன்..

என் அந்திகாவலன்...
என் ஆருயிர் மாமனே..

March 11, 2025, 12:31:30 pm
Reply #2

Passing Clouds

Re: கவிதையும் கானமும்-052
« Reply #2 on: March 11, 2025, 12:31:30 pm »
நிலவின் பிரதிபலிப்பில் அவள்

அழகிய இரவில் நிலவின் ஒளியில்
அமர்ந்து நிலவை ரசிக்கும் மறு நிலா!

கருநீல வானத்தில் ஒளிரும் வட்ட நிலா
வானத்தை இரவில் ஒளிரச் செய்கிறது.

அவள் வந்ததும் எனது வாழ்க்கை ஒளிர்ந்தது போல
அவள் வந்ததும் வசந்தம் எனது வாழ்வில் நட்சத்திரமாய் மின்னியது.

பாலை போல இருக்கும் நிலவே
இரவையும் பகல் போல ஆக்குகிறாய்!

எனது வாழ்க்கையில் அவள் மாற்றியது போல …

நிலவின் மகளே  எனது மனதை கொள்ளையடித்த என்னவளே
உன்னையும் நிலவையும் பிரித்துப் பார்க்க முடியவில்லை.

எனக்கு ஒரு சந்தோகம்: நீ நிலவை ரசிக்கிறாயா?
இல்லை, நிலவு உன்னை ரசிக்கிறதா?

அழகின் அரசியே, உன் முகத்தில் நான் கண்டா
முகப்பரு அப்பொழுதுதான் புரிந்தது நிலவுக்கும் பாரு உண்டு என்று...

மின்னும் நட்சத்திரங்கள் இரவுக்காக காத்திருக்கும் நிலவை காண அல்ல,
நிலவை காணவரும் என்னவளை காண என்று !

இரவில் வரும் நிலவுக்கு வெளிச்சம் தருவது சூரியன் என்று நினைத்தேன்,
ஆனால் இன்றுதான் புரிந்தது என்னவளின் முகத்தின் ஒளி என்று!

தேய்பிறையும் வளர்பிறையும் இல்லாத நிலவின் மகளே,
நிலவும் பொறாமைப்படும் உனது அழகினை கண்டு…

உன்னை ரசிப்பது நிலவு மட்டும் அல்ல, நீ
அமர்ந்திருக்கும் இருக்கையும் தான்…

ஒரு சில நொடி உன்னை சுமக்கும் இருகைக்கு,
எவ்வளவு ஆனந்தம் என்றால்,

வாழ்நாளெல்லாம் உன்னை சுமக்கும் எனது
ஆனந்தத்தை சொல்ல வார்த்தை இல்லை, பெண்ணே...

இரவுக்கு நிலவழகு எனக்கு அவள் அழகு.
 


நீலவானம்

March 14, 2025, 10:21:52 pm
Reply #3

Wings

Re: கவிதையும் கானமும்-052
« Reply #3 on: March 14, 2025, 10:21:52 pm »
அமைதியான இரவு நேர வேளை

என் குழம்பிய மனநிலையோடு நிலவை நோக்கி புன்னகைக்க

நிலவும் என்னை நோக்கி    பதிலளித்தது அதன் புன்னகையோடு

அட பேதையே
இங்கே நீ தனியே இல்லை

நீயும் நானும் ஒரே ஜாதி தான் என்று
 
பின் நான் நிலவை நோக்கும் போது அதில் என்னை கண்டேன்

அழகிய காடுகளைப் போன்ற நிலவு   காட்சி அளித்தது

மனிதனுக்கு அது தரும் வெளிச்சம் பிரதிபலன் பாராதது

நிலவு மின்னும் மின்மினிகள் நடுவே நிற்கிறது அதன் ஒளியால்

நிலவும் நானும் ஒன்று

தேய்கிறேன் என் கவலையில்
ஒளிற்கிறேன் என் புன்னகையில்

நான் நிலவிடம் கேட்டேன்

சூரியனுடனான உன் பிரியமான காதல் எவ்வாறென்று

இருவரும் சந்திக்கும் நேரம் வேறு
ஏன் சந்திப்பு ஒரே நேரமில்லை என்று

அதற்கு நிலவு சொன்னது

அவன் மயக்கும் பார்வையை சந்திக்கும் துணிவின்றி நான் மறைகிறேன் என்று

நான் மட்டுமல்ல
 
அவனும் அவ்வாறே

என் வெண்ணிற அழகினை அவன் வெப்பம் சுட்டுவிடும் என்று மறைகிறான் எனக்காக

நான் சிந்தித்தேன் எவ்வாறு நானும் நிலவும் ஒன்று என்று

பிறகு என் சிந்தையில் எட்டியது

அவன் இருக்கும் இடத்தில் நான் இருந்தால் போதும்
அவன் மனதை வெல்ல ஆசை இல்லை

என் காதலை எண்ணியே ஆனந்தம் அடைகிறேன்

நிலவும் நானும் ஒன்று என்று


அந்த இருண்ட இரவில் நான் ஒரு நண்பனை கண்டேன்

என் இதயத்தின் ஒரு துண்டை பிடித்து வைத்திருந்த நிலவாகிய அவளை.

நிலவும் நானும்

பூமியிலிருந்து வானத்தை நோக்கி,
முடிவில்லாத ஒரு கதை.

March 18, 2025, 09:19:26 pm
Reply #4

Isha003

Re: கவிதையும் கானமும்-052
« Reply #4 on: March 18, 2025, 09:19:26 pm »
என்னவனே !
என் இனிய காதலனே !
ஒரு தசாப்த காதலை சில வரிகளில் சொல்ல துணிந்தேன் !
சார் இல் அறிமுகம் ஆகி
என் அத்தனையும் ஆன அழகனே !
நிலவின் துணையோடு நாம் செய்த நடை பயணங்கள்
அர்த்தமின்றி நாம் செய்த தர்க்கங்களை எனக்கு
இன்னும் மிச்சமின்றி நினைவூட்டுகிறது !
ஒரு முழு நிலா நாளில்
திடீரென நீ உரைத்த காதலை
உணர முடியாமல் அடைந்த திகைப்பை இந்த நிலா எனக்கு நினைவூட்டுகிறது!
என்ன பேச என தெரியாமல்
மொட்டை மாடியில் நிலவின் துணையோடு உன் இருப்பை உணர்ந்த நிமிடங்கள் எனக்கு இன்னும் சிலிர்ப்பூட்டுகிறது!
பேசாமலே நிலவை பார்த்து ரசித்த மௌனங்கள் கொள்ளை அழகானது !
எப்படி இத்தனை காதல் என யோசிக்க யோசிக்க ஒன்றும் புரியவில்லை எனக்கு!
கரம் கோர்த்த நாளில்  மூன்றாம் பிறை என இருந்த  காதல்
எப்போது முழு நிலவாய் முழுமை பெற்றது என இன்னும் சிந்தித்துக்கொண்டே இருக்கிறேன் !

தாயென நீ தாங்கிய தருணங்களில் கொஞ்சம் !
தந்தை என அரவணைத்த அணைப்பில் கொஞ்சம் என நான் நினைக்க ?
என் மொத்தமும் நீயென எப்போது ஆனாய் குமரனே!

சிறு வயதில் சிறு காயத்துக்கும் கூட அம்மாவிடம் சொல்லி  ஆறுதல் தேடும் என்னை!
எப்போது  மாற்றினாய்  என்  பெரு வலியிலும் உன்  ஒற்றை பார்வை கூறும் சமாதானத்துக்கு !

ஒவ்வொரு சண்டையிலும் தேய்பிறை நிலவென உன்னை நான் நினைக்க !
என்றும் மாறா முழு நிலவென நீ எப்போதும் துணை நிற்கிறாய் என்னுடன்!
உயர்வும் தாழ்வும் வலியும் இன்பமும்
வாழ்வின்  தவிர்க்க இயலாத அம்சங்கள் என்று
நம் காதலுக்கு சாட்சியான
நிலவின் தேய்வும் வளர்பிறையும்
எனக்கு பாடமாக  உணர்த்த !
பௌர்ணமி நிலவை காணும்  கணமெல்லாம் என் வாழ்நாள் பௌர்ணமியான உன்னை கண்டு மகிழ்கிறேன்  !


« Last Edit: March 18, 2025, 09:32:52 pm by Isha003 »

March 19, 2025, 11:09:18 am
Reply #5

Thendral

Re: கவிதையும் கானமும்-052
« Reply #5 on: March 19, 2025, 11:09:18 am »
     ✨ 🌜நிலவொளியில் என் சூரியன் ☀️✨
         ✨நானும் நிலவும் என் சூரியனும்✨
என்னுள் இருக்கும் ஒளியாய் ...என் சூரியன் !!!!

நிலவொளியில் நான் தனித்திருக்க
என் இதயமதில் ஒளியாய் ...என் சூரியன் !!!
நிலவில் என் சூரியனை  நான் காண்கிறேன் ...
நானும் நிலவும் என் சூரியனும்  !!!

இவ்வுலகினை காண ஒளி தந்த என் சூரியன் ...
தனிமையில் என் எண்ண ஓட்டத்தின்
வழித்தடம் மாறாமல்  காத்த இந்நிலவு .....
நானும் நிலவும் என் சூரியனும் !!!

என்னுயிர் துளிர்க்க என்னுள்ளே -அனுவாய்
உயிர் வளர்த்து எனை மெருகேற்றி
காணும் வழிநெடுக நிழலாய் ....
என்னுடன் நிலவும் என் சூரியனும் !!!

தனிமையில் தொலையாமல் இதோ இந்த நிலவும்....
என்னுள்ளே என் சூரியனும் - என் கரம் பற்றி
ஒளியாய் ... அரணாய் ...வழித்துணையாய் !!!
நானும் நிலவும் என் சூரியனும் !!!!

வாழ்ந்த நாட்களில் முட்களும்.. பூக்களும் ..
என் உயிர் தீண்டி உடன் வர -வருங்காலம்
பூமெத்தை விரித்து வரவேற்கும் கனவிலே
நானும் நிலவும் என் சூரியனும் !!!

பகலில் சூரிய வெளிச்சத்திலும் ...
இரவில் நிலவொளியிலும்.. என் சூரியனை நான் தேட
தொலைந்து போன என் சூரியனை
நிலவொளியில் கண்டெடுக்க என்பாடு- அறியுமோ ...இந்நிலவு !!!

நிலவில் என் சூரியனின் பிம்பம் ..திட்டுத்திட்டாய்...
 புகைப்படமாய் ...என்வீட்டில் ... என் அப்பா
நிலவொளியில் சூரியனாய் ...என் அப்பா
நானும் நிலவும் என் அப்பாவும் !!!

நான் நேசிக்கும் இனிய ...நிலா
நான் நேசிக்கும் இனிய ...தனிமை
நான் நேசிக்கும் இனிய ...இரவு
எனை நேசித்த என் சூரியன் ...என் அப்பா
ஆம் நானும் நிலவும் என் அப்பாவும் !!!

அன்றும் இன்றும் என்றும்
என் அப்பாவின் நினைவுகளுடன் ...
தனிமையில் ....நிலவின் மடியில்....
இந்த தென்றல் ...நிசப்தமாய் ...💔

« Last Edit: March 21, 2025, 07:37:34 am by Thendral »

March 23, 2025, 09:11:20 am
Reply #6

iamcvr

Re: கவிதையும் கானமும்-052
« Reply #6 on: March 23, 2025, 09:11:20 am »
உறக்கம் இல்லையா பெண்ணே?
உலகம் உனை தனியே விட்டு இயங்குவதாய் உணர்கிறாயா?
முகத்தில் ஏனம்மா இவ்வளவு ஏக்கம்?
மனதும் தாங்குமா அவ்வளவு தாக்கம்.
சற்றே இறக்கி வைத்து பெருமூச்செறி - என்
சாரலில் உனை ஒப்படைத்து
ஓய்வெடு,
நிதானம் பெறு,
நிதர்சனம் நுகர்.

கொஞ்சம் என்னை உற்று நோக்கு.
பட்டுத் தெறிக்கும் ஒளியிலேயே நான் பிரகாசிக்க முடியுமென்றால் - உன்
உள் ஒளி உணர்ந்து நீ பிரகாசிக்க தொடங்கினால் நினைத்துப்பார் பெண்ணே
நீ எவ்வளவு அழகாவாய்.

தேய்பிறை கண்டும் வளரும்
வளர்பிறை கண்டும் தேயும் என்னைப்பார்.
நான் துளியேனும் மாறவில்லை - எனை
உலகம் காணும் கோணங்கள் தான் மாறுகிறது.
எனக்கு துளி கவலையும் இல்லை அதை எண்ணி,
அமாவாசையிலும் கூட நான் முழுமையாகவே இருக்கிறேன்,
உங்கள் பார்வையில் இல்லாமல்,
எந்த தேய்வும் இல்லாமல்.

நீ முழுமை
உலகத்தின் பார்வைப்பற்றி கவலைகொள்ளாதே.
உலகம் உனை தனியே விட்டே இயங்கட்டும்.

அழ வேண்டுமா
கடைசிச்சொட்டு கண்ணீர் வரை அழுது தீர்த்துவிட்டு, கடந்து செல்.
எப்பார்வையும் நிரந்தரமில்லை,
உன் இருப்பே நிரந்தரம் - என்னைப்போல்.
« Last Edit: March 24, 2025, 05:23:05 am by iamcvr »

March 26, 2025, 02:58:27 pm
Reply #7

Misty Sky

Re: கவிதையும் கானமும்-052
« Reply #7 on: March 26, 2025, 02:58:27 pm »
"நிலவொளி காவியம்
வானத்தின் நடுவே நீயொரு ஓவியம்"
"நிலா இரவின் மடியில் ஒளிரும் முத்து,
வான்வெளியில் நீ ஒரு அழகிய சொத்து"
"நிலா இரவின் ராணி நீயே,
வான்வெளியில் ஒளிரும் பேரழகே!!!
இருள் சூழ்ந்த இரவில் ஒளி தரும் தேவதையே!!!
குளிர்ந்த உன் ஒளி வீசும் அழகிய வேளையிலே,
மனம் அமைதி கொள்ளும் பொன் மாலையிலே!!!
"வெண்ணிலவே, உன் அமைதியின் ஒளியில்,
உலகம் உறங்கும் அமைதியின் வழியில்"

"நிலா பௌர்ணமி இரவில் உன் முழு வடிவம்,
அழகின் உச்சம், அது அமைதியின் பிம்பம்!!!
பௌர்ணமி இரவில் உன் முழு ஒளி வீசும்,
உன் ஒளியில் நான் கண்ட கனவுகள் அனைத்தும் எழ,
உன் அழகில் நான் தொலைத்த என் கவலைகள் பல"

"நிலா என் தனிமைக்கு அழகு சேர்க்கும் ஒற்றை அழகு நிலா"
"நிலா மின்சாரம் இல்லா வானில் இரவில் என் தனிமையைப் போக்க எனக்குத் துணையாய், ஒளி விளக்காய் வந்த ஒற்றை அழகு நிலா"

"நிலா நிழல் விரிக்கும் இரவினிலே,
வான்வெளியில் ஒளி வீசுடும் என்
வெண்ணிலவே"
"நீயே என் தனிமையின் தோழியே"
"நீயே என் தனிமையின் தோழியே"

"நிலா அமைதியின் அழகிய வடிவம் நீ!!!
கடல் அலைகள் உன் ஒளியில் நடனமாட,
மரங்கள் உன் நிழலில் உறங்க,
பறவைகளும் உன் ஒளியில் கூடு திரும்ப,
பூக்களும் உன் ஒளியில் புன்னகை விரிய,
குழந்தைகளின் கனவில் நீ மிதக்க,
காதலர்களின் இதயத்தில் காதல் மலர,
காதலர்களின் இதயத்தில் நீ கவிதை ஒளியாய் ஒளிர்கிறாய்
காதலர்களின் இதயத்தில் நீ கவிதை ஒளியாய் ஒளிர்கிறாய்"

"நிலா உன் குளிர்ந்த கதிர்கள் என் மனதை அமைதிப்படுத்த,
உன் மென்மையும், வெண்மையும் என் தனிமையின் துயரத்தை மறக்கச் செய்ய,
நிலா உன் மென்மையின் ஒளி பட்டால் என் மனமும் அடையுமே அமைதி,
உன் வெண்மையின் ஒளி கண்டால் என் கண்களுக்குக் கிடைக்குமே வெகுமதி!!!
உன் அழகில் என் எண்ணங்கள் உன்னில் கரைந்து போக,
உன் அழகிய தோற்றம் என் மனதை ஈர்க்க,
உன் அமைதியான ஒளி என் மனதை ஆட்கொள்ள!!!
நீ மட்டும் போதும் இந்த இரவில்
என் தனிமைக்கு நீ துணை நிற்க
என் தனிமைக்கு நீ துணை நிற்க"

"நிலா வானத்தில் என்றும் நீ ஒரு வரைந்த ஓவியமாய் இருக்க,
என் மனதில் என்றும் நீ ஒரு ஒன்றைக் காவியமாய் நிற்க,
காலம் கடந்தும் என்றும் நீ ஒரு மாறாத அதிசயமாய் உன்னைப் பார்க்க,
வெண்ணிலவே, உன் அழகு என்றும் நிலைக்கும்,
வெண்ணிலவே, உன் அழகிலே என்
மனம் மயங்கி நின்றேனே!!!
"என் இதயத்தில் நீ என்றும் ஒளிர்வாய்"
"என் இதயத்தில் நீ என்றும் ஒளிர்வாய்"

"நிலா வானில் நீ மறைந்தாலும், உன் நினைவுகள் மறையாது,
என் காதல் உன்னில் என்றும் குறையாது!!!
உன் வருகைக்காக என் கண்கள் ஏங்கி தவிக்கும்,
என் இதயம் உன்னை மட்டும் தாங்கி துடிக்கும்!!!
என் காதல் நிலவே, நீயே என் துணை,
உன் ஒளியில் நான் கண்டேன் என் வாழ்வின் இணை!!!
உன் நினைவில் என் காதல் என்றும் நிலைக்கும்,
உன் ஒளியில் என் இதயம் என்றும் துடிக்கும்"

"இருண்ட வானில் தனித்து ஓடும் எரி நட்சத்திரம் போல,
"யாரும் அறியா என் மனதின் ஆழத்தில், வேதனையின் சுமை, கடலெனப் புரள்கிறது"
"என் மனதின் வலியை யார் அறிவார்?
"என் கண்ணீரின் கதையை யார் கேட்பார்?
"யாருமில்லா இந்த பாதையில்,
நான் மட்டும் தனியே நடக்கிறேன் என் விதி வழியில்,
"என் நிழல் கூட என்னை விட்டு விலகுகிறது,
"நினைவுகளின் சுமை என் மனதை வாட்டுகிறது,
"கண்ணீரின் துளிகள் என் கண்களை மூடுகிறது,
"என் மௌனத்தின் வலி,
"என் இதயத்தின் அழுகையின் ஓலம்,
"யாரும் அறியா என் தனிமையின் வேதனை,
"இந்த இருளிலும் ஒரு ஒளியாய், எனக்கு வழித் துணையாய் வந்த "அழகிய என் பொன் நிலவே"
"அழகிய என் பொன் நிலவே"
உனக்காய் வாழ்கிறேன்!!!
உன்னுள் வாழ்கிறேன்!!!
உன்னுள் ரசிக்கிறேன்!!!
உன்னுள் மகிழ்கிறேன்!!!
என்றும் உன்னுடன் நான்!!!
என்றும் அன்புடன் நான்!!!
"இயற்கையின் கோடிக்கணக்கான படைப்புகள் ஒவ்வொன்றும் அழகு,
இதற்கு ஈடாகுமோ செயற்கை படைப்பு"
"இயற்கையின் எழில், என்றும் மாறாதது"
"என்றும் மறையாதது இயற்கையின் மேல் நான் வைத்த நேசம்"
"இயற்கையை நேசித்து, இயற்கையை சுவாசித்து
இயற்கையோடு நாம் இணைவோமே
இன்பமுடன் இனிதாய் வாழ்வோமே
இன்பமுடன் இனிதாய் வாழ்வோமே"

"சந்தோஷமிக்க என் கண்ணீர் துளிகளுடன் முடிக்கின்றேன்!!!
இப்படிக்கு
உங்கள் MISTY SKY 💙💙