Advanced Search

Author Topic: பல வகை சாதம்  (Read 2431 times)

February 28, 2025, 09:39:20 pm
Read 2431 times

AnJaLi

பல வகை சாதம்
« on: February 28, 2025, 09:39:20 pm »
பாலக் ரைஸ்

அரிசி - ஒரு கப்
கீரை - ஒரு கப் [ஸ்பினாச் / அரைக்கீரை / சிறுகீரை]
வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 2 அல்லது 3
மஞ்சள் தூள் - சிறிது
கரம் மசாலா - அரை தேக்கரண்டி
பூண்டு - 3 பல்
சோம்பு - அரை தேக்கரண்டி
சீரகம் - அரை தேக்கரண்டி
காய்கறி கலவை [உருளை, கேரட், காலிஃப்ளவர்]
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 தேக்கரண்டி
நெய் - 3 தேக்கரண்டி
எலுமிச்சை சாறு - ஒரு தேக்கரண்டி [விரும்பினால்]
கறிவேப்பிலை
 

காய்கறிகளை நறுக்கவும். வெங்காயத்தை நீளமாக நறுக்கி வைக்கவும். பூண்டை தோல் நீக்கவும். கீரையை சுத்தம் செய்து வைக்கவும். அரிசியை ஊற வைக்கவும்.

கடாயில் ஒரு தேக்கரண்டி எண்னெய் விட்டு சோம்பு தாளித்து பச்சை மிளகாய், பூண்டு சேர்த்து வதக்கி அதில் கீரையை சேர்த்து நன்றாக வதக்கவும். இதை மிக்ஸியில் அரைக்கவும்.

மீண்டும் மீதம் உள்ள எண்ணெய், நெய் சேர்த்து காய்ந்ததும் சீரகம், கறிவேப்பிலை தாளித்து நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

இதில் நறுக்கிய காய்கறிகள் சேர்த்து வதக்கவும்.

காய்கள் வதங்கியதும் அரைத்த கீரை விழுதை சேர்த்து கரம் மசாலா, மஞ்சள் தூள் சேர்த்து வதக்கவும்.

கீரை நன்றாக வதங்கி, மசால் வாசம் போனதும் 2 கப் நீர் விட்டு உப்பு சேர்த்து கொதிக்க விடவும்.

நீர் கொதித்ததும் அதில் எலுமிச்சை சாறு விட்டு அரிசியை சேர்த்து கொதி வந்ததும் சிறுதீயில் மூடி சாதம் வெந்ததும் எடுக்கவும். சுவையான பாலக் ரைஸ் தயார்.
 
இதில் பாசுமதி அரிசி, சீரக சம்பா அரிசி, புழுங்கல் அரிசி என எதை விரும்பினாலும் சேர்க்கலாம். ஆனால் அரிசிக்கு ஏற்றபடி நீர் அளவு பார்த்து சேர்க்கவும். குழந்தைகளுக்கு என்றால் நெய்யில் வறுத்த முந்திரி, பச்சை பட்டாணி கூட சேர்த்து புலாவ் போல் செய்யலாம்.

February 28, 2025, 09:41:19 pm
Reply #1

AnJaLi

Re: பல வகை சாதம்
« Reply #1 on: February 28, 2025, 09:41:19 pm »
காளான் பிரியாணி

காளான் - 15
பாஸ்மதி அரிசி - 2 கப்
பட்டை - 2
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
முந்திரி - 10
பெரிய வெங்காயம் - ஒன்று
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு விழுது - ஒரு தேக்கரண்டி
தக்காளி - 2
புதினா - 15 இதழ்
மல்லித் தழை - கைப்பிடி
மஞ்சள் தூள் - அரை தேக்கரண்டி
மல்லி தூள் - ஒரு தேக்கரண்டி
கரம் மசாலா - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
உப்பு - தேவைக்கு
எண்ணெய் - தாளிக்க
நெய் - ஒரு தேக்கரண்டி
 
தேவையான பொருட்களை எடுத்துக் கொள்ளவும். தக்காளி மற்றும் வெங்காயத்தை பொடியாகவும், பச்சை மிளகாயை நீளமாகவும் நறுக்கிக் கொள்ளவும்.அரிசியை அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

ஒரு கடாயில் எண்ணெய் மற்றும் ஒரு தேக்கரண்டி நெய் விட்டு பட்டை, ஏலக்காய், கிராம்பு மற்றும் முந்திரி சேர்த்து வறுக்கவும்.

பின்னர் பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்

வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து பச்சை வாசம் போகும்படி வதக்கவும்.

பின் தக்காளியை சேர்த்து குழையும்படி வதக்கி புதினா மற்றும் மல்லித் தழையை சேர்க்கவும்.

நறுக்கிய காளானை சேர்த்து கிளறி மூடி வைக்கவும்

5 நிமிடம் கழித்து தூள் வகைகளை சேர்த்து தேவையான உப்பை போட்டு 5 நிமிடம் வேக விடவும்.

பின் குக்கர் பாத்திரத்தில் இந்த கலவையையும், அரிசியையும் சேர்த்து, அரை தேக்கரண்டி நெய், ஒரு பட்டை, சிறிதளவு புதினா, மல்லித் தழை போட்டு 3 கப் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.

பிரியாணி ஆனதும் அரை தேக்கரண்டி நெய் விட்டு கிளறி எடுக்கவும். சுவையான, ஈஸியாக செய்யக் கூடிய காளான் பிரியாணி தயார்.

February 28, 2025, 09:43:14 pm
Reply #2

AnJaLi

Re: பல வகை சாதம்
« Reply #2 on: February 28, 2025, 09:43:14 pm »
தேங்காய் சாதம்

தேங்காய் துருவல் - கால் கப்
வடித்த பச்சரிசி சாதம் - 1 1/2 கப்
காய்ந்த மிளகாய் - 4 (காரத்திற்கு ஏற்ப சேர்க்கலாம் )
கடலை பருப்பு - ஒரு தேக்கரண்டி
உளுந்து - ஒரு தேக்கரண்டி
வேர்கடலை - ஒரு தேக்கரண்டி
கடுகு - ஒரு தேக்கரண்டி
சீரகம் - ஒரு தேக்கரண்டி
பச்சை மிளகாய் - 3
இஞ்சி - சிறு துண்டு (நறுக்கவும்)
கொத்தமல்லி - சிறிது
பெருங்காயம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை, எண்ணெய், நெய் - தாளிக்க
தேங்காய் எண்ணெய் - ஒரு தேக்கரண்டி
உப்பு, முந்திரி - தேவைக்கு ஏற்ப
 
பச்சை மிளகாயை இரண்டாக கீறி வைக்கவும். இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய், நெய் சேர்த்து சூடானதும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்கவும்.

அடுத்து பச்சை மிளகாய், இஞ்சி, முந்திரி ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்கவும்.

தாளித்தவற்றுடன் கொத்தமல்லி, தேங்காய் துருவல் சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.

தட்டில் சாதத்தை கொட்டி பரத்தி உப்பு, தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்கு ஆற வைக்கவும்.

நன்கு ஆறிய சாதத்தை தாளித்த தேங்காய் கலவையுடன் சேர்த்து கலந்து விடவும்.

சுவையான தேங்காய் சாதம் தயார்.
 
தேங்காய் எண்ணெய் சுவை பிடிப்பவர்கள் தேங்காய் எண்ணெயிலே செய்யலாம். தேங்காயை சேர்த்ததும் அடுப்பில் இருந்து இறக்கி விடவும் மிதமான தீயில் செய்தால் தான் கருகாமல் வரும்

March 01, 2025, 03:36:14 pm
Reply #3

AnJaLi

Re: பல வகை சாதம்
« Reply #3 on: March 01, 2025, 03:36:14 pm »
புளியோதரை

வடித்த பச்சரிசி சாதம் - 1 1/2 கப்
புளி - தேவையான அளவு
காய்ந்த மிளகாய் - 15 (காரத்திற்கு ஏற்ப சேர்க்கலாம்)
கடலை பருப்பு - ஒரு பிடி
உளுந்து - ஒரு பிடி
வேர்க்கடலை - ஒரு பிடி
கடுகு - 3 தேக்கரண்டி
சீரகம் - 3 தேக்கரண்டி
மிளகு, வெந்தயம் - ஒரு தேக்கரண்டி
தனியா, எள் - ஒரு தேக்கரண்டி
மிளகாய் தூள் - ஒரு தேக்கரண்டி
மஞ்சள் தூள் - ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் - ஒரு தேக்கரண்டி
கறிவேப்பிலை, எண்ணெய் - தாளிக்க
உப்பு - தேவைக்கு ஏற்ப
 
முதலில் மேற் சொன்ன பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைத்துக் கொள்ளவும்.

புளியை அதிக நீர் விடாமல் கெட்டியாக கரைத்து வைக்கவும்.

ஒரு தேக்கரண்டி கடலை பருப்பு, வேர்கடலை, உளுந்து சேர்த்து வெறும் வாணலியில் வறுத்து ஆற விடவும்.

ஒரு தேக்கரண்டி கடுகு, சீரகம், வெந்தயம், மிளகு சேர்த்து வெறும் வாணலியில் வறுத்து ஆற விடவும்.

பாதியளவு காய்ந்த மிளகாய், எள் சேர்த்து நிறம் மாறாமல் வெறும் வாணலியில் வறுத்து ஆற விடவும். ஆறிய பொருட்களை கொரகொரப்பாக அரைத்து பொடிக்கவும்.

வாணலியில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு, சீரகம், உளுந்து, கடலை பருப்பு, வேர்க்கடலை, கறிவேப்பிலை, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்கவும்.

கரைத்து வைத்துள்ள புளிக்கரைசல் சேர்த்து கொதிக்க விடவும்.

கொதி வந்ததும் அடுப்பை குறைத்து உப்பு, மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.

சற்று கெட்டியானதும் பொடித்த பொடியை சேர்த்து கிளறி அடுப்பை அணைக்கவும்.

சுவையான புளியோதரை செய்ய புளிக்காய்ச்சல் ரெடி.

தட்டில் சாதத்தை கொட்டி பரத்தி உப்பு, எண்ணெய் சேர்த்து நன்கு ஆற வைக்கவும்.

நன்கு ஆறிய சாதத்தில் ஆறிய கலவையை சேர்த்து கலந்து விடவும். சுவையான புளியோதரை தயார்