"அம்மா மாதிரி"
ஆண்களை உணர்ச்சிவசப்படும் தருணங்களில் கவனித்ததுண்டா ?
நன்றாய் அக்கறைப்படும் ஆசிரியையில்;
நல்வழி காட்டும் நண்பியில்;
சோர்ந்து விழ சேர்ந்து நின்று "பாத்துக்கலாம்" என தோள் தரும் காதலியில்;
"என்கிட்ட ஏன் சொல்லல" என உரிமையோடு கோபிக்கும் தமக்கையில்;
பிறப்பிடம் விட்டு பிழைப்பிற்கு வந்த இடங்களில்
"சாப்பிட்டியா" என கேட்கும் ஒவ்வோர் குரலிலும்;
"இளைச்சு போய்ட்ட" ன்னு சமைத்து தரும் அக்காமார்களின் தூய அன்பிலும்;
அப்படியே அம்மாவின் சாயல்,
அந்நேர ஆண் மனத்தில் அசரீரியாய் கேட்கிறது.
"இவர்கள் அப்படியே அம்மா மாதிரி"
ஆம், அம்மாவை தான் காண்கிறேன் அத்தனை பேரிலும்.
அந்த "அம்மா மாதிரி" அன்பைத்தேடி தான் வாழ்க்கை முழுதும் ஓடுகிறேன்.
அன்பு காணும் இடமெல்லாம் அவளை அங்கு பொருத்தி அழகு பார்க்க
"அம்மா மாதிரி" எனும் சொற்றொடரின் செறிவு காலத்தோடு அதிகரித்தே செல்கிறது.
அம்மா அனைத்தும் ஆகி விடுகிறாள் - கடவுள் போல
ஆண்பிள்ளைகளின் முதல் காதலி அவள்.
போர்க்களம் தான் வாழ்க்கை என்ற போதும்,
கேடயமும் ஆயுதமும் தான் தேவையென்ற போதும்,
கேடயமாய் தான் நின்று
ஆயுதத்தை கையில் தந்து
படித்துக்கொள் என்றவள் அவள்.
இரும்பு கேடயமல்ல;
இரத்தமும் சதையுமாய், உரிமையும் உணர்வுமாய்
அவள் அன்பெனும் கேடயம்.
தகப்பன் அன்பு கிடைக்காத போதும்
தகப்பனும் தாயுமாய் நின்று காத்தவள்.
போர்க்கள வாழ்வில் எனை நானே பார்த்துக்கொள்ளும் போதே
இத்தனை வலிகளை கடக்கிறேன்;
அவள் எமக்காய் தனியே எத்தனை வலிகளை கடந்திருப்பாள் - அத்தனையோடும்
அவற்றை புறம் வைத்து அன்பை மட்டுமே எமக்கு கடத்தியிருக்கிறாள்.
கைம்மாறாய் எனக்கு ஒன்றே உண்டு ...
அதில் தான் அவளின் மொத்த சந்தோசமும்.
(திருக்குறள்) "ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் தன்மகனைச் சான்றோன் எனக்கேட்ட தாய்"
அத்தனை பேரிலும் நான் அம்மாவை கண்ட போதிலும்
அம்மாவை அறிந்தவர்கள் என்னில் தேடுவதும் அதுவே தான் - அம்மாவின் நற்குணங்கள்
அவர்கள் மனதில் இருந்து
"அப்படியே இவன் அம்மா மாதிரி" எனும் வாழ்த்திற்காகவே ஓடலாம்,
அது தான் வாழ்க்கை.
அனைத்து பெண்களிலும் அம்மாவை தேடியவன் - தேடலோடு
அம்மாவிற்கான என் அன்பையும் மதிப்பையும்
அம்மாவெனவே அனைத்து பெண்களிடமும் கொடுக்க நினைக்கிறேன்;
அதில் தான் அவளின் மொத்த சந்தோசமும்.
நிச்சயம் பெற்றுவிடுவேன் என் கிரீடத்தை
"அப்படியே இவன் அம்மா மாதிரி"
சி. வி. ஆர்.