இந்த மழையிருக்கிறதே
யாரோ ஒருவரின் கரங்களில்
பற்றி கொண்ட கவலை நிரம்பிய
தேநீர் கோப்பைக்கென
விழுந்திருக்க வேண்டும்
யாரோ ஒருவரின் மகளுக்கென்றோ
யாரோ ஒருவரின் மகனுக்கென்றோ விளையாடி தீர்ப்பதற்காக
பெய்திருக்க வேண்டும்
ஏதோவொரு ஜோடிகள்
தந்து கொண்டிருக்கும்
மெல்லிய முத்தங்களுக்கென
சனனித்திருக்க வேண்டும்
எங்கேனும் நடந்து கொண்டிருக்கும்
கல்யாண நிகழ்வுக்கென வாழ்த்தை சொல்லியபடி
மண்ணில் வந்து சேர்ந்திருக்க வேண்டும்
எதாவதொரு இறுதி ஊர்வலத்தின்
தடையேற்படுத்தி விட்டு
தவித்திட வைத்திருக்க வேண்டும்
ஏதேனும் திண்ணையில்
அமர்ந்திருக்கும் முதியவர்களுக்கு
காகிதங்கள் அனைத்தையும்
கப்பலென மாற்றம் செய்து
விளையாடி மகிழ்ந்த பால்ய கால நினைவுகளை கண்முன்னே
நிறுத்தி கொண்டிருக்க வேண்டும்
யாரோ ஒருவரின் இளமைக்கால
பொழுதுகளில் முழுதும் நனைந்து
அம்மாவிடமோ அப்பாவிடமோ
அடிவாங்கிய வலிகளை
உணர்த்தியிருக்க வேண்டும்
இருக்கும் பாத்திரங்களை வைத்து
கிழிந்து போன கோணிகளை வைத்து
பன ஓலையில் வேயப்பட்ட
யாரோ ஒரு ஏழை குடிசையின்
வழியே அத்துமீறி உள்நுழைந்து
இரக்கம் ஏதுமின்றி அன்றைய இரவின் உறக்கம் தொலைத்து
ஓய்ந்து போன இந்த_மழையிருக்கிறதே
என்னைப்போல்
யாரோ ஒருவர் எழுதும்
கவிதைகளில் வெறும் வார்த்தைகளின் கோர்வைகளில்
அழகாய்முடிந்து போயிருக்க வேண்டும் ...!