உன்னையே நேசித்து , உனக்காக வாழ்கிறேன் அன்பே.. என்னை கண்கொண்டு பாராமுகம் ஏனோ..?
நீ விலகி, விலகி சென்றாலும்.. உன்னை நோக்கியே ஓடி வரும் கடலலை போன்றவள் அல்லவா நான்..? எனை அரவணைத்து அன்பு கொள்ள மறுப்பது ஏனோ..?
கதையாகவும், கற்பனையாகவும் இருந்த நம் காதல்.. நனவாகும் நேரமதில் கண்களில் கோபக்கனல் வீசுவது ஏனோ..?
கவிதையின் இலக்கணமே, உனை படித்து விடும் உரிமையை எனக்களித்து.. திரும்பி பார்த்து உன் புன்னகையை தர மறுப்பதேனோ..?
எனுலகில் நீயும், உன்னுலகில் நானும், தடம் பதித்து நடைபோடும் நேரமதில்.. உன் மௌனத்தினால் எனை வதைப்பதேனோ..?
என் பெயரும் அழகானது உன் நா உரையிலே..செல்லமாக என் பெயர் சொல்லி அழைத்து, காதல் மொழி பேச மறுப்பதேனோ..?
சந்திப்பின் முடிவில் நீ தரும் கடைசி முத்தத்தில்.. கானல் நீராய் கோபங்கள் மறைந்து.. மனம் லேசாக மிதப்பது போன்ற உணர்வை.. இன்று மட்டும் தர மறுப்பதேனோ..?
கண நொடி பிரிவினைக் கூட தாங்கி கொள்ள முடியா நாம் , நம் கரங்கள் கோர்த்து இவ்வுலகை ரசிக்க, ஏங்கி தவிக்கும் என் மனம் புரிய மறுப்பதேனா..?
யாசித்து பெறுவது அன்பல்லவே.. நம் புரிதலில் ஆரம்பித்த காதலில், கோபம் மட்டும் பனிக்கட்டி போல் உருகி விடாமல் இருப்பதேனோ..?
புரியாத ஓவியமாய் நீ இருக்க, உனை புரிந்து விடும் ஓவியராய் நானிருக்க.. அதில் தீட்டும் வண்ணமாய், நம் காதலிருக்க .. இத்தனை கோபங்கள் அவசியம் தானா..?
வெறுக்கப்பட்ட அத்தியாயம் வேண்டாம் நம் வாழ்வில்.. நான் இழைத்த தவறுக்கு மன்னிப்பாய் ..உன் கரம் பற்றி மன்னிப்பு கேட்கிறேன்.. மனமிரங்கி பதில் மொழி கூறி விடு அன்பே..!
ஓடி வந்து எனை அணைத்து கொள் அன்பே.. உன் மூச்சு காற்றில் நம் இடையேயான 'ஊடல்கள்' எரிந்த காகிதமாக காற்றில் பறந்து போகட்டும்..!