கவிதையும் கானமும் இந்தவார புகைப்படத்திக்கான சிறுகதை
ஆவியாகி அங்கும் இங்கும் அலைபவளே என் கண்ணில் மட்டும் பட்டுவிடாதே என்று ஒருவித பயத்துடனே அந்த பாழடைந்த வீட்டை கடந்து சென்று கொண்டிருந்தாள் கீர்த்தி..
அந்த பழைய வீட்டில் காதல் தோல்வியால் தூக்கு போட்டு செத்துப் போன இளவயது பெண் ஒருத்தியின் ஆவி அங்கு இருப்பதாகவும்.. அவள் வயதொத்த பெண்களை கண்டால் பிடித்து விடுவாள் என்றும் கீர்த்தி தங்கியிருக்கும் கல்லூரி விடுதியில் பரவலாக ஒரு பேச்சு இருந்தது...
அவளுக்கு இரவு 11.மணி பேருந்தை பிடித்தாக வேண்டிய கட்டாயம்.. இந்த பேருந்தில் பறப்பட்டால் தான் அடுத்த நாள் நடக்கவிருக்கும் தன் அண்ணனின் திருமண விழாவில் கலந்து கொள்ள முடியும்.. தனக்கிருக்கும் ஒரே அண்ணன் அல்லவா என்று நினைத்து கொண்டே வேகமாக நடந்தாள் கீர்த்தி..
மணி சரியாக 10.35 .. 15 நிமிடம் நடந்தால் பேருந்தை பிடித்து விடலாம் என்று நினைத்து கொண்டு வேகமெடுத்து நடந்தாள்..
அப்போது அந்த குரல் கீர்த்திதிதிதிதி.,.. என்று சத்தமாக கேட்டு எதிரொலிப்புடன் அடங்கியது...
ஒரு நிமிடம் கீர்த்திக்கு இதயம் துடிப்பது நின்று விட்டது போன்ற உணர்வு.. இருந்தும் மனதில் தைரியத்தை வரவழைத்து கொண்டு திரும்பி பார்க்காமல் வேகமாக நடந்தாள்.. முருகா.. விநாயகா.. ஓம் நமசிவாய என்று அத்தனை கடவுள் பெயரையும் உச்சரித்தவாரே நடந்தாள்.. அந்த குரல் மறுபடியும் கேட்டது.. கீர்த்திதிதிதிதிதி.... இந்த முறை இன்னும் சத்தமாக கேட்டது...
கீர்த்திக்கு என்ன செய்வது என்று தெரியாமல் ஓட ஆரம்பித்தாள்.. பயத்துடனே ஓடியதால் என்னவோ அவள் கையில் இருந்த கைப்பேசி கீழே விழுந்து விட்டது.. இப்போது கீர்த்திக்கு இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.. ஓடி கொண்டிருந்தவள் மூச்சிரைக்க நின்றாள்.. அய்யோ என் கைப்பேசி.. திரும்பி போக மனமில்லாமல் அப்படியே நின்றாள்..
ஒரு நிமிட யோசனைக்கு பிறகு சரி எடுத்து விடலாம் என்று நினைத்தவாறே திரும்பி பார்க்காமல் பின்னோக்கி நடந்தாள்.. கால்களால் தேடியவாறே நடந்தாள்.. இன்று இந்த ஆவியின் கையால் தான் எனக்கு சாவு என்று அழுகையுடன் சேர்ந்த பயத்துடனே.. நடந்தவளுக்கு கால்களில் எதோ ஒன்று தட்டு பட்டது.. அது அவளுடைய கைப்பேசி தான்.. அப்பாடா.. கிடைத்தது விட்டது என்று குனிந்து எடுத்து விட்டு எழும்ப முற்பட்ட போது மீண்டும் அந்த குரல்... கீர்த்தி என்று மிக பக்கமாக கேட்டது...
இது நமக்கு பரிச்சயமான குரல் ஆயிற்றே என்று நினைத்தவாறு திரும்பி பார்த்தாள்.. அங்கு அவளுடைய அறை தோழி மூச்சிரைக்க ஓடி வந்தாள்.. அடியே.. நீ கிளம்பிய அவசரத்தில் நாளை உன் அண்ணனுக்கு வாங்கிய பரிசு பொருளை மறந்துவிட்டாய்.. இந்தா ... என்றவாறே எவ்வளவு நேரம் உன்னை கூப்பிடுவது.. காது கேட்காதா உனக்கு என்று திட்டிய வாரே அவள் திரும்பி சென்றாள்... கீர்த்தி எதுவும் பேசாமல் பிரமை பிடித்தவள் போல் நடந்து ஒருவாராக பேருந்தை பிடித்து ஜன்னலோரமாக உட்கார்ந்து கொண்டாள்... பேருந்து புறப்பட்டது...
அப்போது தான் யோசித்தாள் நான் பரிசு பொருள் எதுவும் வாங்க வில்லையே என்று.. அப்படியென்றால் இது... இது.. என்ன.. என்று பரிசினை பிரிக்க ஆரம்பித்தாள்.. அதில் ஒரு பட்டு புடவை அதனுடன் ஒரு வாழ்த்து அட்டை.. அதில் திருமண வாழ்த்துக்கள் என்று எழுதி இருந்தது... அவள் மூளையில் கீர்த்திதிதிதி... என்ற குரல் ஒலித்து கொண்டே இருந்தது.... அந்த சத்தத்துடனே தூங்கி போனாள்... திடீரென்று யாரோ அவளை எழுப்பினார் அவள் கண்விழித்து பார்த்த போது பேருந்து அவள் ஊருக்கு வந்திருந்தது.. நடத்துனர் தான் அவளை எழுப்பி இருக்கிறார்.. வேகமாக எழுந்து பேருந்தை விட்டு இறங்கினாள்.. அப்போது கையில் இருந்த பரிசினை பேருந்தில் விட்டு விட்டோம் என்று எடுக்க மறுபடியும் பேருந்தில் ஏறினாள்.. ஆனால் அங்கு எந்த பரிசு பொருளும் இல்லை..
மறுபடியும் குழப்பத்துடனே.. வீட்டை நோக்கி நடந்தாள்.. இந்த திகிலான மனநிலை அவளை விட்டு போக பல மாதங்கள் பிடித்தது...