மெல்லிசை
கூர் இருள் துளைக்கும் குளிர் பனிப் பொழிவு
கூவிச் செல்லும் கூதல் காற்று
முகில்இடுக்கில் முகம் பார்க்கும் நிலவு
மூடாத இமைகளுடன் விழித்திருக்கும் வானம்
ஓசை தொலைத்த நிசப்தங்களின்
ஒற்றையடிப்பாதை வழி
ஊடுருவி வரும் மெல்லிசையே
உன்னோடு சிறகு விரிக்கிறேன்
உன் காத்திருப்பில் எனை நிறுத்தி
காதோரம் தேனூற்றும்
கணப் பொழுதெல்லாம்
தொடுவானச் சூரியனாய்
திசையெங்கும் நிறைந்திருப்பாய்
மென் மழையின் தூறலென வீழ்ந்து
மிஞ்சுகின்ற வெள்ளமென எழுந்து
மஞ்சள் மாலை ஒளியெனப் பரந்து
மனதை மயக்கும் இருள் கலந்து
மாய ஒளி உமிழும் மெழுகென கரைந்து
மனவெளியெங்கும் நிறக்குழம்பு பூசி நிற்பாய்
நாதமாய் சுருதியாய் நற் சுரமாய் ராகமாய்
நாளும் பொழுதும் நடந்து வரும் மெல்லிசையே
நான் கண்மூடிக் காத்திருப்பேன்
தென்றலோடு தவழ்ந்து வந்துன் கரம் தா
தீராத துயரத்தின் கண்ணீரைக் கழற்றி எடுக்க
எழுதியவர் : சிவநாதன் (9-Apr-16, 12:01 am)