இரவு 12 மணிக்கு சாலையில் ஓர் வாடகை கார் வேகமாகச் சென்று கொண்டிருந்தது. ஒரு நடுத்தர வயதுப் பெண்மணி, அந்த காரை கையசைத்து நிறுத்தினார்.
"தம்பி ஆஸ்பத்திரி போகணும்"
"நான் வரமுடியாது. சாப்பிட்டுட்டு, படுக்கப் போறேன்".
"என் மகளுக்கு பிரசவவலி வந்து விட்டது, தயவுசெய்து வரமாட்டேன்னு சொல்லிடாதேப்பா" என்றார் அப்பெண்மணி.
"நீங்க இவ்வளவு சொல்றதாலே வர்றேன். 500 ரூபா ஆகும்" என்றான் அந்த கார் ஓட்டும் இளைஞன்.
அப்பெண்மணி 500 ரூபா என்ன 1000 ரூபாய் கேட்டால் கூட தர சம்மதம் என்பதுபோல் வேகவேகமாக தலையாட்டி சம்மதிக்க, கார் அவர்களுடன் மருத்துவமனைக்கு விரைந்தது.
கார் ரெயில்வே கேட்டை நெருங்கவும், எச்சரிக்கை மணி ஒலிக்க கேட் மூடப்பட்டது. அக்கர்ப்பிணியின் முனகல் சற்று அலறலாக மாறியது. இரண்டு ரெயில் வண்டிகள் எதிர் எதிர் திசையில் கடக்க, பத்து நிமிடத்தில் கேட் திறந்தது.
இப்போது கார் இன்னும் சற்று வேகமாக ஓடி மருத்துவமனையில் நின்றது. நடுநிசியின் நிசப்தத்தைக் கிழித்தது அப்பிரசவத் தாயின் அலறல். மூடிய விழிகளில் நீர் மல்க, அந்த நடுத்தர வயதுப் பெண்மணி கைகளைக் கூப்பி மகளுக்காக இறைவனிடம் வேண்டினாள்.
அந்த கார் இளைஞனும் அமைதியாக அங்கே நின்றிருந்தான்.
சற்று நேரத்தில் மருத்துவர் வந்து சுகப்பிரசவம் நடந்துள்ளது. ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த தாய் கார் இளைஞரிடம் "தம்பி! ரொம்ப நன்றிப்பா. இந்தா நீ கேட்ட பணம்" என பணத்தை நீட்டினாள் அப்பெண்மணி.
"வேணாம்மா. எங்கம்மா என்னைப் பெற எவ்வளவு வேதனைப்பட்டிருப்பாங்கன்னு இறைவன் எனக்கு புரிய வச்சிட்டார். பணத்தை நீங்களே வைங்க" என்று சொன்னபடி நடக்க ஆரம்பித்தான்.
ஏதோ யோசிக்க போனை எடுத்து ஒரு நம்பரை கண்டுபிடித்து டயல் பண்ணினான்.
"ஹலோ முதியோர் இல்லமா?"
"ஆமா என்ன இந்த நேரத்துல போன் பண்ணுறீங்க?"
"மன்னிக்கவும். நாளு நாளைக்கி முன்னாடி அனாதைன்னு சொல்லி ஒருத்தவங்கள உங்க இல்லத்துல சேர்த்தேன்.. இல்லையா?
அவுங்க அனாதை இல்லை என்ன பெத்த தாய். நாளைக்கு காலையிலே வர்றேன் அவுங்கள கூட்டிட்டு போக" முதியோர் இல்ல பொறுப்பாளரின் அனுமதியைக் கூட கேட்காமல் மொபைலை கட் பண்ணி விட்டு வண்டியை தீர்க்கமான முடிவோடு ஸ்டார்ட் செய்தார் .
'ஆம். நிஜத்தை தரிசிக்கும் ஒவ்வொரு இதயமும்... ஒரு மனிதனைப் பிரசவிக்கிறது'.