காலை நேரம்,
சாதாரணமாய் சாலையில் செல்கிறேன்.
ஒவ்வொருவர் முகத்திலும் ஓர் வெறுமை தெரிகிறது.
பிடிக்காத வேலைக்கென
நேர்த்தியாய் வெளிக்கிட்டுச்செல்லும் இளைஞர்கள், யுவதிகள்;
பொருந்தாத திருமணம் செய்துவிட்டு
பொறுப்புகளை சுமந்து செல்லும் தம்பதிகள்;
மனமுறிவு தாங்காமல், மனமுறிவும் ஏற்பட்டு
தனியே பிள்ளையை பள்ளிக்கு ஏற்றிச்செல்லும் தாய்மாரும் தந்தைமாரும்;
இக்குடும்ப வாழ்க்கைக்குள்ளேயே நுழையாமல் தனியனாகிப்போனவர்கள்;
அத்தனைபேர் முகத்திலும் ஓர் வெறுமை.
யாருக்காக ஓடித்திரிகிறார்கள் இந்நேரத்தில்?
முழுதாய் உணர முடிகிறதே,
அவர்கள் அவர்களுக்காய் வாழவில்லை என்று.
காண்பவர்களிடம் சற்று கதைத்துப்பார்த்தேன்.
ஒரு ஐந்து வயதுப் பாலகியின் அம்மா,
கல்யாணமாகி ஈராண்டுகளில் கணவனை தொலைத்ததாய் சொன்னாள்.
ஒரு தம்பதி,
கல்யாணமாகி நான்காண்டுகள் தாண்டியும்,
கர்ப்பம் காணா வயிற்றோடும்
கண்டவர்கள், காது படப்பேசும் வசைச்சொற்களோடும்
சொந்தங்களை சந்திக்கவே தவிர்ப்பதாய் சொன்னாள்.
இரு சிறுமிகளின் தாய்,
அவளின் கணவன்
இவளை பிரியாமலேயே இன்னொருத்தியோடு திருமணம் செய்து சந்தோசமாய் இருக்க
இவள் மன அழுத்தத்தில் இருப்பதாய் சொன்னாள்.
ஒரு தாய், தந்தையாகும்
கனவில் களித்திருந்த தம்பதி
சுகவீனமுற்று மகவும்
வெளி உலகம் காணாமலே
கலைந்து விட்டதாய் சொன்னாள்.
வெறுமை கனக்கிறது.
வெளிச்சொல்லாமல் ஆயிரம் வலிகளை தாங்கி
கடக்கிறார்கள் சகமனிதர்கள்.
இவர்களை கண்ட பின்
கடவுள் நம்பிக்கையே மெல்ல அகல்கிறது, ஆனால்
அனைவரோடும் கனிவோடு
நடப்போரில், மீளக் கடவுளே தெரிகிறது.
சிலரில் ஏனோ சாத்தானும்
தெரிகிறது.
செல்வாக்கு மிக்கோரால் வழக்கு பதியப்பட - எம்மைப்போல் ஒருவன்
செல்-வாக்கிலேயே கொல்லப்பட்டான், அதிகார வர்க்கத்தால் - அன்புச் சகோதரன் அஜித்குமார்
பிறந்த வீட்டிற்கு பாரமாய் இருக்க கூடாதென்றும்
புகுந்த வீட்டின் பாரம் பொறுக்க முடியாதென்றும்
வரதட்சணை கொடுமையால்
வாழும் வழி தவறிய மாமியார், மணமகனால்
தற்-கொல்லப்பட்டாள் - அன்புச் சகோதரி ரிதன்யா
ஆவிகளாயினும் வந்து - உங்களை இப்படிச்செய்த
இப்பாவிகளை ஆயிரம் மடங்கு கொடூரமாய் வதம் செய்து விடுங்களேன்.
அரசாங்கம், சட்டம் மீதெல்லாம் நம்பிக்கை அற்றுப்போய்விட்டது.
இனி எப்போதும்
இவ்வாறெல்லாம் நடக்காது;
எல்லாம் மாறும் என நினைத்தால்
#justicefor மாறிலியாய் இருக்க
பின் வரும் பெயர்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன.
கண்ணீரோடு என் வலிகளை எழுதுகிறேன்.
மனிதராய் இருப்போம்;
அன்பே எம் அறம்.