Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Topics - Empty Dappa

Pages: [1]
1

"நிஜ முகத்த அவ இப்பதான் காட்டிருக்கா"
"அவன் உன்ன இவ்ளோ மோசமா திட்டிருக்கான்னா,
அப்போ இதான் அவனோட உண்மையான முகம்"
இந்த மாதிரி ஒருத்தர்
தன்னோட பொறுமைய மொத்தமா இழந்துட்டு
செய்யக் கூடிய விசயங்கள்தான்
அவங்களுடைய உண்மையான முகமா தீர்மானிக்கப்படுது.

கண்டிப்பா இதுல எனக்கு உடன்பாடு இல்ல
பத்து வருஷ திருமண வாழ்க்கைல
ஒன்னா இருந்த கணவன் மனைவிக்குள்ள
ஏதோவொரு சூழ்நிலையில சண்டையாகி கைகலப்பாகிட்டா
அதுதான் அவங்க ரெண்டு பேரோட
இத்தன வருஷ வாழ்க்கையின் உண்மையான முகம்ன்னு சொல்லீற முடியுமா.

எப்பவும் பொறுமையா இருக்குற ஒருத்தன்
சண்ட போட்டுட்டாலோ,
எப்பவுமே சிரிச்சிட்டே இருக்குற ஒருத்தன் அழுதுட்டாலோ
இதுதான் அவனோட நிஜம்ன்னு சொல்லீற முடியாது.
அதுவும் அவனுக்குள்ள இருக்குற ஒரு பார்ட். அவ்ளோதான்.

அதே மாதிரி ஒருத்தரோட குறிப்பிட்ட ரெண்டு, மூணு
எதிர்மறையான விசயங்கள திரும்ப திரும்ப சொல்லிக் காட்டிட்டே
இருக்குறதும் தப்புதான்அது அவங்கள குற்றவுணர்ச்சிலயே வச்சி
அதவிட்டு வெளியவே வர விடாம கஷ்டப்படுத்துற மாதிரி.
மன்னிப்பாலயோ, தண்டனையாலயோ தீர்வுக்கு வராத எந்தவொரு தப்பும்
பேசிட்டே இருக்குறதால சரியாகாது.

எல்லாருக்கும் எல்லாமே இருக்கு.
பால்டப்பா மாதிரி மூஞ்சி இருக்கும்.
பெரிய வில்லத்தனம் பண்ணிட்டு இருப்பான்.
ரவுடி மாதிரி இருப்பான். பச்சக் கொழந்த மாதிரி நடந்துப்பான்.
ஊருக்கே உத்தமனா இருக்குற ஒருத்தன் பெரிய அயோக்கியனா கூட இருப்பான்.
ஒருத்தரோட ஒருநாள் முகம், ஒருநேர சண்டை,
தடுமாற்றமான மனநிலையில செய்ற அல்லது சொல்ற எதையுமே
அவங்களோட நிஜமான முகமா நினைக்க கூடாது.
அத அடுத்தவங்ககிட்ட சொல்லி பதிவு பண்ணவும் கூடாது.

இங்க யாருக்கும் பொய்,
நிஜம்ன்னு மாறக்கூடிய முகமில்ல.
மனுஷன்னா எல்லா குணமும் இருக்கதான் செய்யும்.
அவ்ளோதான்!

2


நெருங்கிப் பழகின மனிதர்களுக்கும்
எங்களுக்கும் இடைல ஒரு இடைவெளி விழுறப்ப,
அல்லது முற்றாக ஒருத்தரை
மரணத்தின் வழியாக இழக்க நேரிடுறப்ப,
அவுங்க மீதுள்ள குறிப்பிட்ட சில விஷயங்கள்தான்,
அவுங்களை நினைவு படுத்திட்டே இருக்கும்.

அதுல பிரதானமானது, அவுங்களோட முகம்.
அந்த முகத்தை இழக்குற சோகம் தாளமுடியாத ஏக்கத்திற்கானது.
 அவுங்களோட நினைவாக
நாம வச்சிக்கிட்டு இருக்குற போட்டோக்களை
அப்பப்ப பாக்குறப்ப, மனசுக்குள்ள ஒரு துயரம் எழும்.
அந்த நிமிஷத்து துயரம்,
நம்மை ஆட்கொள்கின்ற போது,
நம் கண்ணீரின் வழியாக அவர்கள் நினைவு கூறப்படுகிறார்கள்.

பிரிதொரு முகத்தை கொண்டு பூரணப்படுத்த தடுமாறுகின்ற,
வற்றாத ஜீவனுள்ள ஒரு முகத்தின் வெற்றிடமென்பது,
அலாதியான விருப்பத்திற்குச் சொந்தமானது.
அதுக்குப் பிறகு நாம் சந்திக்கின்ற எல்லார்ட்டயும்,
நாம் கடக்கின்ற நெறய மனுஷங்க கிட்ட
அந்த முகத்தை தேடி தோற்றுப் போகிறோம்.
வாழ்க்கையின் இன்னல்கள் சூழ்ந்து கொள்ளும் போதெல்லாம்
அவுங்க நம்ம கூடவே இப்பவும் இருந்திருந்தா
நல்லாருக்குமே என்ற ஏக்கத்தில்,
அவர்களின் முகம்தான் நம்முன் வந்து தவழ்கிறது.

நம்ம மனசோட நிறைவை,
நாம நெனக்கிறப்ப எல்லாம் கிடைக்கிற ஒருவித ஆறுதலை, நிம்மதியை,
அந்த முகம் கொண்டிருக்கிறது.
நினைத்துப் பார்ப்பதற்கு, நினைத்தழுவதற்கு,
நினைத்தேங்குவதற்கு,
அத்துனை பிடித்தமுள்ள ஒரு முகத்தின் பெருமானம்,
ஆயுளுக்கும் நம்ம மனசுலயே இருக்கிறது,
அவ்வளவு சாதாரணத்தன்மை உடையதில்ல.

நினைவுகளின் பெரு வனத்தில்
பூத்து அழிகின்ற எத்தனையோ மலர்களில்,
இந்தவொரு முகம் மாத்திரம்,
பிடித்தமான ஒரு ரோஜாவைப்போல
அழியாமல் இருந்துவிடுகின்றது.


3


ஒருவரின் ஞாபகங்களில்,
நாம் காலத்திற்கும் வாழ்வதற்கான
தகுதியை ஏற்படுத்தித் தருகின்ற,
மாபெரும் தாக்கத்தை
அவர்களுக்கு நாம் உணரச் செய்யலாம்.

ஒன்றில்!
மோசமான அனுபவத்தின் வாயிலாக….

இன்னொன்று!
ஆன்மாவின் தீராத காதலை
பரிசளிப்பதன் வாயிலாக.

நமது நினைவு மண்டலத்தில் சேகரிப்படுகின்ற எல்லாமும்
மங்கிப் போகின்ற நாளொன்றில்,
கடைசிச் சொட்டு ஞாபகத்திலும்
ஒரேயொரு முகமும்,
காதலும், அப்படியே தேங்கி நிற்குமானால்,
அதற்கீடான ஒரு காதலை,
இவ்வாழ்வு வழங்கிடவில்லை என்பதே உண்மை.

This Is Really Blessed 😇


4
நீ வரும்முன் வரை என் வாழ்வில்
நானில்லாதிருந்தேன்

நீ வந்தாய்
உன்னை பிடித்திருந்தது
அதன் நீட்சியாய் உனக்கு பிடித்ததெல்லாம்
எனக்கும் பிடிக்கத் தொடங்கியிருந்தது

வாழ்வின் பரிமாணங்களை
நான் அறிந்திடாத
புதிய கோணங்களில்
அணுகத்தெரிந்திருந்தது உனக்கு

அழகாய் தெரியத்துவங்கியது வாழ்வு

கொஞ்சம் கொஞ்சமாய்
வாழ்வு பிடித்தமானதானதாக மாறிப்போனது

பிடித்தமான வாழ்வென்பது
ஒரு போதை தானே

நீ வந்தபின்னான வாழ்வெங்கும்
நான் நிறைந்திருந்தேன்
நிறைவாய்
கூடவே நீயுமிருந்தாய்

உனக்கு பிடித்தமானதை எல்லாம்
எனக்கும் பிடித்தமானதாக்கியிருந்தேன்

எனக்கான உலகொன்றை காணும்
கண்களை பரிசளித்தாய்

பேராசைகள் தீண்டாத
ஒரு கனவை கையாளப் பழக்கினாய்
தனிமை என்பது ஒரு மனநிலை தானோ
என எண்ண வைத்தாய்

என் ரசனை உன் கோணங்கள்
உன பார்வை என் அணுகல்
என்பதெல்லாம் மறைந்து
நம் பார்வை நம் ரசனை
நம் கோணம் நம் அணுகல் என
விதிகள் மாற்றிக் கொண்டோம்

இழப்புகளில் துவண்டிடாத
ஒரு இலகுவான மனம் கொண்டோம்

ஏதேன் தோட்டமொத்த ஒரு வெளியில்
உலவிக்கொண்டிருக்கிறேன்
ஊடுருவும் சாதாரண பாம்புகள் தவிர்த்து
சாத்தானிய விலகல்களும் ஊடறுக்கும் பிரிதல்களும்
அண்டிடாத ஆப்பிள் மரத்தடிகளில்
இளைப்பாறிக் கொண்டிருக்கிறேன்

ஆதாமின் ஆப்பிள்களும் ஏவாளின் ஆப்பிள்களும்
ஒன்றல்ல என்பதை விடுத்து
நாம் என்பது கடவுளின் கனிவு நிரம்பிய
கனிகள் காய்த்துக் குலுங்கும்
சுவன விருட்சம்

வா கவிதைகளை பேசியபடி
நான்...மன்னிக்க...
நாம் இளைப்பாறிக் கொண்டிருப்போம்

5
Own Poems - சொந்த கவிதைகள் / மழை
« on: July 01, 2023, 03:21:11 am »
இந்த மழையிருக்கிறதே

யாரோ ஒருவரின் கரங்களில்
பற்றி கொண்ட கவலை நிரம்பிய
தேநீர் கோப்பைக்கென
விழுந்திருக்க வேண்டும்

யாரோ ஒருவரின் மகளுக்கென்றோ
யாரோ ஒருவரின் மகனுக்கென்றோ விளையாடி தீர்ப்பதற்காக
பெய்திருக்க வேண்டும்

ஏதோவொரு ஜோடிகள்
தந்து கொண்டிருக்கும்
மெல்லிய முத்தங்களுக்கென
சனனித்திருக்க வேண்டும்

எங்கேனும் நடந்து கொண்டிருக்கும்
கல்யாண நிகழ்வுக்கென வாழ்த்தை சொல்லியபடி
மண்ணில் வந்து சேர்ந்திருக்க வேண்டும்

எதாவதொரு இறுதி ஊர்வலத்தின்
தடையேற்படுத்தி விட்டு
தவித்திட வைத்திருக்க வேண்டும்

ஏதேனும் திண்ணையில்
அமர்ந்திருக்கும் முதியவர்களுக்கு
காகிதங்கள் அனைத்தையும்
கப்பலென மாற்றம் செய்து
விளையாடி மகிழ்ந்த பால்ய கால நினைவுகளை கண்முன்னே
நிறுத்தி கொண்டிருக்க வேண்டும்

யாரோ ஒருவரின் இளமைக்கால
பொழுதுகளில் முழுதும் நனைந்து
அம்மாவிடமோ அப்பாவிடமோ
அடிவாங்கிய வலிகளை
உணர்த்தியிருக்க வேண்டும்

இருக்கும் பாத்திரங்களை வைத்து
கிழிந்து போன கோணிகளை வைத்து
பன ஓலையில் வேயப்பட்ட
யாரோ ஒரு ஏழை குடிசையின்
வழியே அத்துமீறி உள்நுழைந்து
இரக்கம் ஏதுமின்றி அன்றைய இரவின் உறக்கம் தொலைத்து
ஓய்ந்து போன இந்த_மழையிருக்கிறதே

என்னைப்போல்
யாரோ ஒருவர் எழுதும்
கவிதைகளில் வெறும் வார்த்தைகளின் கோர்வைகளில்
அழகாய்முடிந்து போயிருக்க வேண்டும்   ...!

                                                       

6
மறக்கவியலாத ஒரு தாக்கத்தை
நமக்குத் தந்த
எந்த விஷயத்தையும் நாம வெகு சுலபமா மறந்துட்றது இல்ல!
அதன் Impact உள்ளுக்குள்ள
இருந்துட்டே இருக்கும்.
அது லைப்ல நாம சந்திச்ச வினோதமான மனிதர்களாக இருந்தாலும் சரி!
மனசுக்கு நெருக்கமாக
நாம சேர்த்து, அணச்சி வச்சிக்கிட்ட மனிதர்களாக இருந்தாலும் சரி!

சிலரோடு மட்டும் தான்
பேசிக்கிட்டே இருக்குறதுக்கும்,
எதையாவது ஒன்ன
அவுங்க கூட பரிமாறிட்டே இருக்குறதுக்கும்,
நம்ம மனசு துடிச்சிட்டே இருக்கும்.
அது அவுங்க மேல உள்ள
ஈடுபாட்டின் உயர்நிலை.
அவுங்களோடான உறவு,
ஏதாவது ஒரு வழில
என்னைக்கும் நமக்கு இருந்துட்டே இருக்கனும்ன்ற படபடப்பு,
சில போது பயமா கூட மாறும்.

கொஞ்சம் ச்சில்!
கொஞ்சம் ரிலாக்ஸ்!
இந்த பதட்டம் பயமாகி,
அந்த பயத்துக்கு ஏற்றாற்போல
அவுங்கள தவற விட்ற மாதிரி
ஒரு ஃபீல் மைண்ட்டுக்குள்ள க்ரியேட் ஆகுது.

அப்றம் என்ன?
நீ சரியா பேசல!
சரியா புரிஞ்சிக்கல!
சரியா கவனிக்கல!
நீ முன்ன மாதிரி இல்ல!
போன்ற குறைகள் தான்
நிறைய மனசுல தழும்பி நிற்கும்.

ஒரு கட்டத்துக்கு மேல
எதையெல்லாம்
நம்மளால தாங்கிங்க முடியாம போகுதோ! எதையெல்லாம்
மன முரண்டோடு உள்வாங்கி,
ஏத்துக்க முடியாம திணறுகிறோமோ!
அதை எல்லாம் சர்வ நிச்சயமாய்
சலித்துப் போனவைகளில்,
அல்லது விருப்புக் குறைந்தவைகளில்
நம் மனம் சேர்த்துக் கொள்ளும்.
ஆனா...!
அதுக்கெல்லாம் காலவரையறை இல்ல!
அடுத்த நாளே கூட அந்த சலிப்பு உடையலாம்.
அவுங்க திரும்ப வந்து பேசுற வரை தான் நம்ம கர்வம் எல்லாம் ஒட்டிக்கும்.
அதுவர நாம திட்டலாம், கதறலாம், எல்லாத்தையும் வெறுப்போடு அணுகலாம்.

எதுவுமே பற்றில்லாத போது
மறுபடி இந்த மனசு வேண்டுறது
ஒன்னே ஒன்னு தான்.!
"அவுங்க வந்து பேசினா நல்லாருக்கும்ல"

ஆனா ஒன்னு மட்டும் நிச்சயம்!
புரிதலின் அடிப்படையில்
நம்மளோட யாரெல்லாம்
கருணையோடு கரம் கோர்த்தார்களோ...! அவுங்களுக்கும் கண்டிப்பா
நமக்குள்ள இருக்குற,
அதே Impact இருந்துட்டு தான் இருக்கும்.
அதான் அன்பின் விதி.!

7
ஒருத்தவங்கள விரும்புறீங்க
அவங்களுக்காக எல்லாத்தையும் மாத்திட்டு
அவங்களுக்கு புடிச்ச மாதிரி இருக்கீங்க.
இந்த சூழ்நிலையில அவங்க வெறும் வெறுப்பையும்,
அவமதிப்பையும் மட்டுமே தந்தாங்கன்னா நீங்களே ஒதுங்கீருங்க.

மொத்த சுதந்திரத்தையும் பறி கொடுத்து
ஒரே ஒருத்தருக்கு மட்டுமே புடிச்ச மாதிரி
இருக்க முயற்சி பண்றது முட்டள்த்தனம்.
எல்லா கட்டுப்பாட்டையும் உடைச்சி,
உங்களுக்கு நியாயம்ன்னு பட்டத,
புடிச்சத, எதையெல்லாம் செய்யக் கூடாதுன்னு சொன்னாங்களோ,
அதையெல்லாம் செய்ங்க.

அதுக்கு அப்ரம் வெறுப்பு அதிகமாகி
விலகி போனா போகட்டும்
புரிஞ்சி திரும்பி வந்தா வரட்டும்.
எவ்வளவு மெனக்கெட்டாலும்
நம்மல வெறுக்குறவங்கள விரும்ப வைக்க முடியாது.
அப்டியே விரும்புனாலும் அது நிலைக்காது.

பிரியத்தை திணிக்க முடியாது.
அது இயற்கையின் விளைவுகள்
போல தானே நிகழும்! ❣️

8
Own Poems - சொந்த கவிதைகள் / ரணம்
« on: April 07, 2023, 08:45:50 am »
மிக ஆழமான நேசங்களின் மிச்சங்கள் எப்போதும்
மிக ஆழமான வலிகளையும்
தந்துவிடத்தான் செய்கிறது.
அப்போது மட்டும் அழுவதை தவிரவோ முணங்கிக் கொண்டு
அல்லல் படுவதை தவிரவோ
எதையும் செய்யத் தோன்றுவதில்லை.

எஞ்சிப் போன காலத்திற்காகவும்
சற்று வலிகளை
சேர்த்து வைத்துக் கொள்ளுங்கள்...!

அன்பெனும் போதைக்கு அடிமையானால் தன்னிலை மறந்து கூட
துயர் பட நேரிடும்.
முதலில் உணர்வுகளின்
அத்தனை பலத்தையும்
மெல்ல மெல்ல விழுங்கிக் கொண்டு,
நம்மை ஆர்ப்பரிப்பில் ஆழ்த்தி விடும்.
பிறகு மீளவே முடியாத
எல்லைக்குள் நிற்க வைத்து
வதைப்புக்குள் அடக்கி விடும்.

பல போது மிருதுவான
நெஞ்சத்துக்கு அளிக்கப்படும்
அதிகபட்ச ரணமே...!
இந்த நேசத்தின் போதை தரும்
முதல் சொட்டு ஆர்ப்பரிப்புத் தான்.

9
இந்த பூமிப் பெருவெளியில்
பெருந்துயரோடு,
வலிகளின் விளிம்பில்
உள்ளவனும் நம்மை கடப்பான்.
அதே வலிகளில் விரக்தியுற்று,
அமைதியை தேடியும் ஒருவன் கடப்பான்.

உள்ளே வலிகளின் ரத்தத்தில்
நீந்திக் கரை சேர துடித்து, மூழ்கி,
பரிதாபமாக வாடுபவனும்
நம்மை கடப்பான்.

மானத்தை காத்துக் கொள்ள
சாதுரியமாக வலிகளை மறைத்து,
உன்னை கடப்பவன் ஒருவன்
சில போது,
வாடாத புன்னகையை கூட உதிர்ப்பான்.

உயிரை மாய்த்துக் கொண்டால் என்னவென்று எண்ணி,
வலிகளின் பள்ளத்தாக்கில் சிக்குண்டு
மூச்சித் திணருபவனும் நடப்பான்.

வாழ்க்கைச் சாலை
அப்படி யாரிலிருந்தும்
வலிகளை ஒதுக்கி,
இன்பத்தை மட்டும் நுகர
வழி விடுவதில்லை.

நீ கடக்க வேண்டிய
மொத்த நாட்களின் பாதியையே
விழுங்கித் திண்ணும் அளவுக்கான வலிகளை பெற்றிருந்த போதும்,
அதையும் சுமந்து கொண்டேனும்
நீ நடந்தே தான் தீர வேண்டும்
என்பதுவே வாழ்வின் கட்டளை.

இங்கே நம்மை கடப்பவனுக்கும்
நாம் கடப்பவனுக்கும், நமக்கும்
தேவை ஒன்று தான்.
அப்பிக் கிடக்கும் வலிகளை
உளரிக் கொட்டி விடவும்,
கொட்டித் தீர்த்து விடவும்,
சொல்லிக் கதறி அழவேனும்
ஓர் தயவான, கனிவான
ஆத்மார்த்தமான நேசம் ஒன்று தான்.

வலிகளை பகிர்ந்து கொள்ள
யாரும் இல்லாத போது,
உண்டாகும் வலிகளைப் போன்ற
ஓர் உயிர் கொள்ளும்
அசுர வேதனை வேறேதும் இல்லை.

வலி பெற்றதே...
ஓர் மனிதன் மூலம் தான் என்றாலும்,
அதை இறக்கி வைத்து
தேற்றிக் கொள்ள தேவைப்படுவதும்,
இன்னோர் மனிதனின் தோள்கள் தான் என்பதே
இவ்வாழ்வின் அழகிய விதி.

10
நான் சேமித்துக் கொண்டு வரும் யாவும்
கடைசியில் எனக்கே
சொந்தமானதாக இராது...!

வெகு இயல்பாய்
கடைசியாகிப் போக வேண்டும்!

எக்காலத்திலும்
யார் வருகைக்காகவும்
காத்துக் கொண்டிராது
நகர்ந்து போகும்,
அமைதியானவொரு நதியினை போல...!

தான் வந்து விட்டுச்சென்ற
தடயத்தை மட்டும்,
மண் வாசனை மூலம்
விட்டுச் செல்லும்,
அப்போது காலாவதியான
பெரும் மழையை போல...!

யார் கால்களை நீட்டினாலும்
பாரபட்சமின்றி
நனைத்துப் பரவசமூட்டும்,
ஆழியின் ஆனந்த அலையை போல...!
அது நிகழ்ந்தேற வேண்டும்.

"எங்கோ ஏதோவொரு கடைசியில்
நானும் மிச்சமிருக்கிறேன்"
எனும் மீட்டல்களை,
எந்த மனதிலாவது
காலம் இருத்தி வைத்தால் மதி.

11
என்னை என்ன செய்து விடும் உன் பெயர்??

மழை, நதி, நிலா என்றும்
இன்னும் பல பிறவென்றும்
உனக்கு பெயரிட்டுக் கொள்கிறேன்

மழையெனும்போது
மனம் நிறைத்துவிடும் மழையாகி விடுகிறாய்

நதியென மொழிகையில்
நினைவுகளில் பெருக்கெடுக்கிறாய்

நிலா என அழைக்கையில்
தனிமைகளை தணிக்கிறாய்

உன் அன்பின் அவதாரங்களை விவரித்திட
தேவதை இராசாத்தி மலர் என நீளும்
இன்னும் பல பெயர்கள் உண்டே உனக்கு

ஆயினும்
உன் பெயர் மொழிகையில்
நான் நிறைவாகிறேன்.

அத்தனையையும்
உள்ளடக்கிய பரிபூரண நிறைதல்
என்னில் உன் பெயர்.

12
மௌனங்களை நீ உனதாக்குகையில்
ஒரு வழிப்போக்கன் தன் பிரயாணத்தை துவங்குகிறான்

வலிமையான தன் ஆயுதங்களை துறந்திடும் முன்னதாக
நடுங்கும் கரங்களோடு கடைசியாக வாள் வீசிக் கொள்கிறான்

மளுங்கிய அவன் வாளின் முனைகளுக்கு
இலக்குகள் என்று யாதொன்றும் இருப்பதில்லை

கனிவின் மொழிகள் கொண்டு
அவன் பாடித்துவங்கும் ஒரு போர் பரணியில்
புரிபடாத சமிக்ஞைகளையே
நோக்கம் வைக்கிறான்

கேடயங்களின் கனம் கொள்ளாத அவனது வீச்சு
ஏக்கமூறிய ஒரு நினைவு கொள்ளுதல் மட்டுமே

ஊடிக் கதவடைக்கும் வாழ்வின் முடிவிலா பக்கங்களில்
யாரும் கொண்டிட முடியாத ரகசிய அறைகளில்
அவனது ஆயுதங்கள் இனி துருப்பிடித்து நொடியட்டும்

வழிப்போக்கனின் பிரயாணங்களுக்கு தோதாக
சுய தீர்மானம் செய்து நீள்கிறது பாதை...

இரகசிய மொழியில் அவன் பாடும் பாட்டு
மறைவான அலைவரிசைகளில்
ஒலித்துக் கொண்டே இருக்கும்..

Good bye all ❤️❤️❤️

13
கொஞ்சம் கொஞ்சமாய்
அன்னியமாகிப் போய்விடும் போது
விரிவடையத் துவங்குகிறது
உன் வானம்

உனக்கான பாடலின் வரிகளை
நீ மறந்திடும் தருணத்தில்
ஈர்ப்பு தொலைத்திட்ட
ஒரு சரணத்தை
முணுமுணுத்துக் கொள்கிறேன்

நீ கேட்காத
கேள்வியொன்றின் பதிலை இன்னதென
நான் பாடமிட்டுக் கொள்ளுகையில் காலாவதியாகிப் போகிறது அக்கேள்வி

வருத்தங்களை கரைத்ததாய் புளங்காகிதப்பட்ட
ஒரு நிகழ்வை
நினைவுகளின் அடுக்கங்களில்
இன்னொரு வருத்தமாய்
பதிவு செய்து வைத்திருக்கிறேன்

கண்ணீர் உலர்ந்திட்ட
ஒரு துயராய்
நான் மாறிடுகையில்
உனக்கான பாடல் வரிகளை
பாடத் துவங்குகிறாய்

மந்தாரப் பனித்திரைகளை கரைக்கும்
மார்கழி வெயிலின் கதகதப்புக்கு
காத்திருந்த ஒர் புலரியில் தான்
உன் பெயர் எழுதப்பட்டிருந்தது

விசிச் சென்ற
பூங்காற்றின் வாசனையில்
இன்னும் நிறைந்திருக்கிறேன்
உயிர்க்கூட்டின் துடிப்பில்
ஒரு இரகசியமாகவே
எதிரொலித்துக் கொண்டிருக்கிறது
உன் பெயர்

Pages: [1]