14
« on: August 23, 2024, 02:47:43 pm »
மழை மேகமாய் உருமாறவா...
பூவினை மெல்ல வருடிச்செல்லும் காற்றை போல
மிகவும் மெல்லிய உரையாடலில் எழுந்த ஓர் உன்னத உறவு
இயல்பான நிலையில் வார்த்தைகள் அதன் இனிமையை இயற்ற
வார்த்தைகளின் மென்மை, மெல்லிய சூழல் ஒன்றை உருவாக்கியது
அச்சூழலில் உருகிய எண்ணம், அதன் நேசத்தொடு பின்னிக்கொண்டது.
பின்னியது எண்ணம் மட்டுமே என்று நினைத்த மாயத்தில்
நிகழ்ந்த உரிமைகளின் பரிமாற்றம் உணர்த்தியது - தொலைத்த என் மனதினை.
தொலைந்த பொழுதில் வினவிய மனம், வினாக்களுக்கு இரையானது
வினாக்கள் விடையில்லாமல் தவித்த போதும், மனமோ தவிப்பே இன்றி என்னை உன்னோடு இன்னும் ஆழமாய் செதுக்கியது.
ஆழம் பெருகிய வண்ணம், மனம் உள்ளூர கரைய தொடங்கியது
கரைந்தவாரே உன்னில் இருக்கும் - உன் அன்பை, பார்த்து ரசித்தது
ரசித்தவை ஏனோ சிறு சிறு இடர் ஈட்ட, மகிழ்வோடு ஏற்றது
அச்சிறு இடர்களை ஏற்றவாறே புன்னகை அணிந்து கடக்க நேர்ந்தாலும்
என்னில் உள்புகுந்த உன்னை விட்டு பிரிய மனமில்லாமல் உரைந்தே போனது
உரைந்தது நான் ஆயினும் கண்கள் ஏனோ உன்னை மட்டும் தேடியது
கண்ணோடு காண இயலாமல் மொழியோடு மட்டுமே இணைகிறோம் ஆயின்
மொழி வழியில் கவிதையாய் உருமாறி உரைகிறேன் உன்னில் நானாய்
உன்னோடு சேர துடிக்கும் என் மனதை
பசுமை நிறைந்த சோலையில் பூக்கும் பூவின் மீது விழ, எண்ணி தவிக்கும் மழை துளி வழியே
நானும் ஓர் மழை மேகமாய் உருமாறவா 🌿🌧️💚