4
« on: October 05, 2024, 08:52:28 pm »
வெளிச்ச கீற்றுகள்
உள்ளடங்கும் வேளையில்
தனிமையின் நாக்குகள்
அடங்காத ஜூவாலையென
உள்ளிருந்து எழுந்து
விலக்க முடியா
வலையென பின்னிக் கொள்கிறது.
எல்லோரும் இருந்தும் யாருமற்ற
நிலையில்
பற்றற்று அமர்ந்திருக்கிறேன்.
தனிமை இன்னும் தீவிரமாய்
அணைத்துக் கொள்கிறது.
சில சொற்களின் சூடுகள்,
துண்டித்துக் கொண்ட
சில அன்பின் எச்சங்கள்,
தட்டிவிடப்பட்ட வெறுப்புகள்,
அலைகழிக்கப்பட்ட உணர்வுகள்
ஒன்றின் பின் ஒன்றென
மன அடுக்குகளின் மேல் எழுந்து
மீள முடியா
நீர் சுழற்சியில் சிக்கிக் கொண்டவளை போல
உள்ளிழுத்துக் கொண்டே இருந்தது.
கடிகார முட்களை பின்னோக்கி திருப்பி விளையாடும் விளையாட்டென
காலத்தை முதலிருந்து வாழ்ந்திட முடியாதா
என பெரு ஏக்கம்
காற்றை துழவுகிறது.
இல்லை,
என் காலத்தை இனி திருப்ப முடியாது
கடக்க முடியாத தூரங்களை
கடந்து வந்துவிட்டேன்
இது ஒருவழி பாதை என
நிதர்சனம் புரியும் முன்
ஒரு துளி கண்ணீர் எட்டிப் பார்க்கின்றது.
காலத்தின் மீது எந்தவொரு கோபமும் எனக்கில்லை.
யார் மீதும் கோபமில்லை
என நினைத்துக்கொண்டாலும்
என் மீதே இருக்கும் கோபத்தை
எங்ஙனம் மறைத்துக் கொள்வது?
இந்த கணம் பற்றிக் கொள்ள
ஒரு துடுப்பு போதும் தான்
எல்லாருக்கும் கை கொடுக்கும்
துடுப்பு கூட
என்னை மட்டும் ஏன் தத்தளிக்க வைக்கிறது?
துடுப்பின் மீதும் எனக்கு கோபமில்லை
பற்றிக் கொள்ள எனக்கு தான்
தெரிந்திருக்கவில்லை.
இருளை விட கொடிய
இத்தனிமையின் தீண்டலில்
இந்த இரவில் எவ்வளவு பேர்
உத்திரத்து காற்றாடியை பார்த்துக் கொண்டு அமர்ந்திருகிறார்கள்?
கேட்பாரற்று அநாதரவாய் அலையும்
நாய்க் குட்டியை போல்
தத்தளிக்கும் மனதை எதை கொண்டு நான் ஆற்றுப்படுத்துவது?
ஆதூரமாய் மெல்லிதான காற்றும்,
எங்கோ தூரமாய் ஒலிக்கும் மெல்லிய இசையும்,
சாளரங்களை தாண்டி வீசும்
நிலவின் குளுமையும்,
மெழுகுவர்த்தியின்
இச்சிறு வெளிச்ச கீற்றும்
படர்ந்துவிடாதா அத்தனை பேருக்கும்?