3
« on: April 20, 2025, 10:15:07 am »
தரையில் என் கால் பெரிதாய் தொட்டதில்லை
அம்மாவின் மடியிலோ,
அப்பாவின் தோளிலோ தான்,
மாறி மாறி கிடந்திருக்கிறேன்.
இப்போது
நான் தரை தொட்டு நிற்கிறேன்.
அம்மாவின் மடியும், அப்பாவின் தோளும் என
என் உலகத்தை தொலைத்து விட்டு
வேறேதோ உலகத்தில்
தரை தொட்டு நிற்கிறேன்,
தனியாய் நிற்கிறேன்.
என் உலகத்தை பறிக்க இவ்வுலகத்தாருக்கு யார் அதிகாரம் கொடுத்தது?
அம்மா சொல்லியிருக்கிறார், யாரோ கடவுளாம், கஸ்டம் வந்தால் பார்த்துக்கொள்ளுவாராம்.
நானும் தேடிக் களைத்துவிட்டேன்
காணவில்லை.
என் முன் பற்றி எரிகிறது உலகம்,
என்னோடு ஒளித்து பிடித்து விளையாடும் என் நண்பர்கள், கடைசியாக ஒளித்தவர்கள் தான், காணவில்லை.
ஊரெல்லாம் எனைத்தூக்கி திரிந்த என் உறவினர்கள்,
இப்போது அவர்களை யாரோ தூக்கிச் செல்கிறார்கள்.
யார் யாரோ சண்டைக்கு
என் வாழ்வை அழிக்கிறார்கள்.
ஓரிரு தலைவர்களுக்குள்
சண்டையென்றால்
அவர்களே முட்டி, மோதி, பலியானாலும் பரவாயில்லை, தீர்வு காணக்கூடாதா?
இங்கே அவர்களெல்லாம்
உயர் பாதுகாப்பில்
இருக்க என்னை போன்றவர்கள் உயிர் மட்டும்
உத்தரவாதம் இல்லாமல் அலைகிறதே
அம்மா சொன்ன கடவுளைப்பற்றி
இங்கு ஒருவரிடம் கேட்டேன்.
அளவிலா சக்தி கொண்டவராம்,
வேண்டியதெல்லாம் கொடுப்பாராம்,
அவரை காணமுடியாதாம்,
உணரமட்டும் தான் முடியுமாம்.
அவராலும் எங்களை காணமுடியாதா?
உணர முடியாதா?
யார் யாரோ தலைவர்களை போல
அவரும் உயர் பாதுகாப்பில்
உறங்கிக்கொண்டிருக்கிறாரோ?
வாழ்ந்த விதத்தை வைத்து
இறப்பின் பின் நல்லவர்களுக்கு சொர்க்கம், கெட்டவர்களுக்கு நரகம் எல்லாம் கொடுப்பாராம்.
வாழும் போதே அதை கொடுக்கலாமே, வக்கற்ற கடவுள் போலும்.
அவரால் இயலாதென்றால்,
அவ் அனைத்து சக்திகளையும் என்னிடம் கொடுக்க சொல்லுங்கள்.
நான் மக்களோடு மக்களாய் நின்று பார்த்துக்கொள்கிறேன்,
வாழும் போதே சொர்க்கத்தையும்
நகரத்தையும் தருகிறேன்.
அவர் உறங்கட்டும்.