10
« on: September 18, 2024, 04:10:43 pm »
எம்மா ! 🤣
ஏலே ! பத்து மணியானாளும்
பதராம நீ துங்குவ . இங்க
பயித்தியக் காரி ஒருத்தி இருக்கேன்லா
உங்களுக்கு பாடு தொலைக்கன்னு - நீ புலம்பும் சத்தம்
அனுதினமும் அதிகாலையில் எனக்கு அலாரமாகும் !
எம்மா ! எங்கம்மா போன நீ !
வீடுன்னு இருக்கமாட்டியா நீ ! அப்படின்னு நா கேட்டா ?
ஏம்லே ! உசிரு போற மாதிரி கத்துற
உனக்கு என்னய மட்டும் வீட்லயே சிலையடிச்சு வைக்கனுமே !
அப்பனுக்கு பிள்ள தப்பாம பொறந்துருக்கன்னு - நீ ஆரம்பிக்கும் வசை
நாளெல்லாம் எனக்கு இசையாகும் !
எம்மா ! எனக்கு ஏழு கழுத வயசானாலும்
எப்போதுமே என் தலைக்கு எண்ணெய் தேய்க்கும்
உன் கரங்கள் என்றுமே
எனக்கு வரமாகும் .
எம்மா ! எத்தனை முறை சாப்பிட்டாலும் என்னைக்குமே சலிச்சதில்ல .
நீ வைக்கும் எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு
என்றுமே எனக்கு அமிர்தமாகும் .
எம்மா ! உப்புமா எனக்கு வேண்டாம்னு ஒத்த கால்ல நா நின்னா
வம்படியா வந்து என் வாயில் நீ திணிக்கும்
ஒரு வாய் உப்புமா நாளெல்லாம் என் நாக்குல இனிக்கும்.
எம்மா ! ஆத்துக்கு நா குளிக்க போனா !
ஏலே ரொம்ப நேரம் தண்ணியில ஆடிக்கிட்டே இருக்காம ஆறு மணிக்குள்ள வீட்டுக்குவான்னு நீ பாசமா சொல்லும் வார்த்தை
என்றுமே எனக்கு பாடமாகும்.
எம்மா ! ஆசையா என்கிட்ட வந்து
வசந்தமாளிகை பட பாட்டு போடு ,
வாய்க்குரிசியா ஒரு டீ போடுன்னு
நீ வைக்கும் கோரிக்கைகள் என்றுமே
எனக்கு வேடிக்கையாகும்.
எம்மா ! மூத்தமகன் ஒரு முழுமாடு ,
கடைக்குட்டி தான் என் கன்னுக்குட்டின்னு
தம்பிய நீ ஆசையா கொஞ்சும் போது
அது என்றுமே எனக்கு வயித்தெரிச்சலாகும் .
எம்மா ! செல்போன் பாத்துட்டே நான் சிரிச்சா
ஏலே ! எவள பாத்து சிரிச்சுட்டு இருக்க?
எவ்வளவு நேரமா தா போன் பேசுவ ?
எத்தனை தடவ தான் தல சீவுவன்னு நீ வரிசையாய்
அடுக்கும் கேள்விகள் என்றுமே எனது வாடிக்கையாகும்.
எம்மா !
இப்படி நாளெல்லாம் உன் புராணத்த
சொல்லிக்கொண்டே இருப்பேன் சோர்ந்து போகாமல்.
எம்மா !
தொப்புள் கொடி அறுத்து !
தொட்டில் சுகம் கொடுத்து !
என் தொல்லைகள் பல பொருத்து !
உன் உள்ளத்தை இரும்பாக்கி !
உன் உதிரத்தை பாலாக்கி !
இன்று என்னையும் ஓர் ஆளாக்கி !
இங்கு
நான் எழுதிய கவிதைக்கு உன்னையே சொல்லாக்கி !
எய்துள்ளேன் உன் அன்பை அம்பாக்கி !