உங்களின் கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும் ஊக்குவிக்கும் முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.
இந்த பகுதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு கருத்து படம் (புகைப்படம்) கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள் அடுத்த ஞாயிற்று கிழமை அன்று GTC இணையதள வானொலியில் வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும் கானமும் நிகழ்ச்சியாகும்.
இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.
2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.
4. இங்கே கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு) முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
கவிதையும் கானமும்-056
இந்தவார கவிதை எழுத்துவற்கான புகைப்படம்.
(https://i.postimg.cc/pL0yfjwJ/GTC-056-20250707-180414-0000.jpg) (https://postimages.org/)
மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும் மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
மறக்க முடியாத என் நிமிடங்கள்
கல்லாய் மாறிய என் கனவுகளின் பயணம்!!!
சிறுவயதில் சிரித்தேன், சிறகு இல்லாமல் பறந்தேன்,
சின்னதாய் சொந்தங்கள், இருந்தும் சிங்காரமாய் நின்றேன்,
மழலைக் கனவுகளில் கலந்தேன்,
மழையில் நனைந்த பூவை போல் மிதந்தேன்.
படிக்கவே வந்தேன், வேலைக்கு ஓடிய பாதையில்,
படர்ந்தது கனவுகள், பசுமையில்லா பாதையில் .
பணத்தால் பறந்து போன என் பதற்றக் காலம்,
படிப்புக்கே பிழைப்பாய் மாறிய பயணம்.
நட்பில் நான் நிழலாய் இருந்தேன்,
நண்பர்கள் பேசும் வரை சிரித்தேன்,
நெஞ்சத்தில் அந்த குரல்கள் புதைந்துகொண்டிருந்தது,
இன்று அந்தக் குரலும் காற்றில் அழிந்தது.
பனித்துளிகளோடு வந்த என் கல்லூரி நாட்கள்,
பாரம்பரியங்களை விட்டுப் போன சாயல்கள்.
பார்ட் டைம் வேலை என்ற பெயரில் பரந்த என் தூக்கம்,
பயிற்சி இல்லாமல் பரிசளிக்கும் சூதாட்ட வாழ்க்கை போல்.
காலமும் கட்டுப்பாடுகளும் சேர்ந்தபோது,
காதலும் கூட என்னை விட்டுப் போனது.
வெற்றிக்கு முன்பே வெறுமை வந்தது,
வெளிச்சத்தில் நான் தோற்ற வலிகள் இருந்தது.
விளக்கின்றி போன என் தோழனின் முகம்,
விழிகளுக்குள் உருகும் என் அக்காவின் நிழல்.
இறங்கினேன் கனவுக்கு… ஏறினேன் மேடைக்கு,
தூக்கமில்லா இரவுகள், இன்பமில்லா பகல்கள்,
இனிமை கொண்ட உறவுகள் எனக்குள் இருந்த சுவடுகள்.
சேர்த்தேன் வெற்றிகள், சிந்தினேன் உறவுகள்,
சிறகு இல்லா அந்த பறவை போல் .
சிரிப்பின்றி சிகரம் சேர்த்த என் காலடி ஓசை,
சில நேரம் என்னிடம் கேட்கிறது – “இது உனக்கான தேசமா?”
எங்கே என் அம்மாவின் கதை சொல்லும் குரல்?
எங்கே என் அப்பாவின் அமைதியான உறைச்சல்?
எங்கே என் நண்பனின் சிரிப்பு கொண்ட மழை?
எங்கே என் காதலியின் முகம்?
தடம் போன நேரங்கள், தடுமாறும் நினைவுகள்,
தவிர்க்க முடியாத பணி, தவிக்கும் என் உயிர்கள் .
நீங்கிய ஒவ்வொரு நிமிடமும்
நிழலாய் நடக்கும் என் நிமிட சுவடுகள்.
உணர்வுகள் மட்டும் அறிந்த பாதைகள்…
மீள முடியாத சில தருணங்கள்,
மறக்க முடியாத சில முகங்கள்…
இது அனைத்தும் என்னை பற்றி நான் அறிந்த பக்கம்.
இபடிக்கு உங்கள் தோழன்
Harry Potter
Always peace ✌️and love ❤️
சிற்பியும் நாங்களே,
சிலையும் நாங்களே!
சிந்தனையின் உலக்கையில்
சுயமெனும் கல்லை செதுக்குகிறோம்.
விழுந்த இடம் தரையாகும்,
விரும்பினால் மேடையுமாகும்!
பிணைப்பு இல்லா காலத்தில் கூட
நம் நிழலே நமக்கு துணையாகும்.
வெற்றிக்குக் கோவணம் கட்டி
தோல்வியைச் செதுக்கிறோம்,
வீணாகும் ஒரு நொடியும்
ஒரு பாடமாய் பதிகிறோம்.
கடவுளின் கரங்களாகவே
தோன்றும் நம் விரல்கள்,
புதையல் இல்லாத இடத்தில் கூட
புதிய கனவை விரித்துவைக்கின்றோம்!
சின்ன தவறுகள் கூட
பெரும் வடிவம் தருகின்றன,
அவையும் சிற்பத்தின் ஓர் கோடு
நம்மை அலங்கரிக்கின்றன!
வலி ஒரு தங்க வேலைபோல்
மனதைப் பொலிவூட்டுகிறது,
ஓர் ஏமாற்றம் கூட
உண்மையின் கண்காட்சியாகிறது!
நம் குரலும் கைகளும்
வாழ்க்கையை வடிப்பதற்கான கருவிகள்,
நம் உள்ளமும் முயற்சியும்
அதற்கான கோர்வையாசிரியர்கள்!
அடையாளம் எதற்கும் இல்லை,
நம்மை நாம் உருவாக்கும் வரை!
முன்பே யாரும் இல்லாத
புதிய சிலையாகும் நம் பாதை!
காலை நேரம்,
சாதாரணமாய் சாலையில் செல்கிறேன்.
ஒவ்வொருவர் முகத்திலும் ஓர் வெறுமை தெரிகிறது.
பிடிக்காத வேலைக்கென
நேர்த்தியாய் வெளிக்கிட்டுச்செல்லும் இளைஞர்கள், யுவதிகள்;
பொருந்தாத திருமணம் செய்துவிட்டு
பொறுப்புகளை சுமந்து செல்லும் தம்பதிகள்;
மனமுறிவு தாங்காமல், மனமுறிவும் ஏற்பட்டு
தனியே பிள்ளையை பள்ளிக்கு ஏற்றிச்செல்லும் தாய்மாரும் தந்தைமாரும்;
இக்குடும்ப வாழ்க்கைக்குள்ளேயே நுழையாமல் தனியனாகிப்போனவர்கள்;
அத்தனைபேர் முகத்திலும் ஓர் வெறுமை.
யாருக்காக ஓடித்திரிகிறார்கள் இந்நேரத்தில்?
முழுதாய் உணர முடிகிறதே,
அவர்கள் அவர்களுக்காய் வாழவில்லை என்று.
காண்பவர்களிடம் சற்று கதைத்துப்பார்த்தேன்.
ஒரு ஐந்து வயதுப் பாலகியின் அம்மா,
கல்யாணமாகி ஈராண்டுகளில் கணவனை தொலைத்ததாய் சொன்னாள்.
ஒரு தம்பதி,
கல்யாணமாகி நான்காண்டுகள் தாண்டியும்,
கர்ப்பம் காணா வயிற்றோடும்
கண்டவர்கள், காது படப்பேசும் வசைச்சொற்களோடும்
சொந்தங்களை சந்திக்கவே தவிர்ப்பதாய் சொன்னாள்.
இரு சிறுமிகளின் தாய்,
அவளின் கணவன்
இவளை பிரியாமலேயே இன்னொருத்தியோடு திருமணம் செய்து சந்தோசமாய் இருக்க
இவள் மன அழுத்தத்தில் இருப்பதாய் சொன்னாள்.
ஒரு தாய், தந்தையாகும்
கனவில் களித்திருந்த தம்பதி
சுகவீனமுற்று மகவும்
வெளி உலகம் காணாமலே
கலைந்து விட்டதாய் சொன்னாள்.
வெறுமை கனக்கிறது.
வெளிச்சொல்லாமல் ஆயிரம் வலிகளை தாங்கி
கடக்கிறார்கள் சகமனிதர்கள்.
இவர்களை கண்ட பின்
கடவுள் நம்பிக்கையே மெல்ல அகல்கிறது, ஆனால்
அனைவரோடும் கனிவோடு
நடப்போரில், மீளக் கடவுளே தெரிகிறது.
சிலரில் ஏனோ சாத்தானும்
தெரிகிறது.
செல்வாக்கு மிக்கோரால் வழக்கு பதியப்பட - எம்மைப்போல் ஒருவன்
செல்-வாக்கிலேயே கொல்லப்பட்டான், அதிகார வர்க்கத்தால் - அன்புச் சகோதரன் அஜித்குமார்
பிறந்த வீட்டிற்கு பாரமாய் இருக்க கூடாதென்றும்
புகுந்த வீட்டின் பாரம் பொறுக்க முடியாதென்றும்
வரதட்சணை கொடுமையால்
வாழும் வழி தவறிய மாமியார், மணமகனால்
தற்-கொல்லப்பட்டாள் - அன்புச் சகோதரி ரிதன்யா
ஆவிகளாயினும் வந்து - உங்களை இப்படிச்செய்த
இப்பாவிகளை ஆயிரம் மடங்கு கொடூரமாய் வதம் செய்து விடுங்களேன்.
அரசாங்கம், சட்டம் மீதெல்லாம் நம்பிக்கை அற்றுப்போய்விட்டது.
இனி எப்போதும்
இவ்வாறெல்லாம் நடக்காது;
எல்லாம் மாறும் என நினைத்தால்
#justicefor மாறிலியாய் இருக்க
பின் வரும் பெயர்கள் மாறிக்கொண்டே இருக்கின்றன.
கண்ணீரோடு என் வலிகளை எழுதுகிறேன்.
மனிதராய் இருப்போம்;
அன்பே எம் அறம்.