உங்களின் கவிதை எழுதும் திறமையையும் , சிந்திக்கும் திறனையும் ஊக்குவிக்கும் முயற்சியாக பொது மன்றத்தின் இந்தப்பகுதியை உருவாக்கி இருக்கிறோம்.
இந்த பகுதியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிற்று கிழமை அன்று ஒரு கருத்து படம் (புகைப்படம்) கொடுக்கப்பட்டு இருக்கும். அந்த புகைப்படத்திற்கு பொருத்தமாக உங்கள் மனதில் தோன்றும் கவிதைகளை எழுதி இந்த பகுதியில் பதிவிட வேண்டும்.
இங்கு பதியப்படும் கவிதைகள் அடுத்த ஞாயிற்று கிழமை அன்று GTC இணையதள வானொலியில் வாசிக்கப்படும். இங்கு எழுதப்படும் கவிதைகளுக்கு பொருத்தமான பாடல்களோடு சிறப்பான முறையில் தொகுப்பாளரால் தொகுத்து வழங்கப்படும். இதுவே கவிதையும் கானமும் நிகழ்ச்சியாகும்.
இந்த நிகழ்ச்சி சிறப்பாக அமையும் பொருட்டு சில விதிமுறைகள் இங்கே குறிப்பிடப்படுகிறது. கவிதை பதிவிடுபவர்கள் இதனை மனதில் கொண்டு கவிதைகளை பதிவிடுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
1. நீங்கள் பதிவிடும் கவிதைகள் உங்களின் எண்ணத்தில் அமைந்த சொந்த கவிதைகளாக இருத்தல் வேண்டும். சொந்தமான சிந்தனையில் அமைந்த முதல் 7 கவிதைகள் மட்டுமே வானொலி நிகழ்ச்சியில் எடுத்துக்கொள்ளப்படும்.
2. உங்கள் கவிதைகள் 15 வரிகளுக்கு குறையாமலும் , 45 வரிகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
3. இந்த பகுதியில் பின்னூட்டங்கள் (comments) இடுவதோ,பாராட்டு பதிவுகள் இடுவதோ கூடாது.
4. இங்கே கவிதை பதிவதற்கு (துண்டு போட்டு) முன்பதிவு செய்ய கூடாது.முழுமை செய்யப்பட்ட கவிதைகளை மட்டுமே பதிவு செய்ய வேண்டும்.
கவிதையும் கானமும்-052
இந்தவார கவிதை எழுத்துவற்கான புகைப்படம்.
(https://i.postimg.cc/1RJwK6Dj/20250310-162203.jpg) (https://postimages.org/)
மேலே கொடுக்கப்பட்டுள்ள கருத்துப்படம் (அல்லது) புகைப்படத்திற்கான உங்கள் கவிதைகளை எதிர்வரும் புதன்கிழமை இந்திய நேரம் இரவு 12 மணிக்கு முன்னதாக பதிவு செய்யும்படி அன்போடு கேட்டுக்கொள்கிறோம்.
இது உங்களின் சொந்த கவிதை முயற்சி. உங்கள் கவிதைகள் மென்மேலும் மெருகுற முயற்சி செய்து எழுதுங்கள்.
உறக்கம் இல்லையா பெண்ணே?
உலகம் உனை தனியே விட்டு இயங்குவதாய் உணர்கிறாயா?
முகத்தில் ஏனம்மா இவ்வளவு ஏக்கம்?
மனதும் தாங்குமா அவ்வளவு தாக்கம்.
சற்றே இறக்கி வைத்து பெருமூச்செறி - என்
சாரலில் உனை ஒப்படைத்து
ஓய்வெடு,
நிதானம் பெறு,
நிதர்சனம் நுகர்.
கொஞ்சம் என்னை உற்று நோக்கு.
பட்டுத் தெறிக்கும் ஒளியிலேயே நான் பிரகாசிக்க முடியுமென்றால் - உன்
உள் ஒளி உணர்ந்து நீ பிரகாசிக்க தொடங்கினால் நினைத்துப்பார் பெண்ணே
நீ எவ்வளவு அழகாவாய்.
தேய்பிறை கண்டும் வளரும்
வளர்பிறை கண்டும் தேயும் என்னைப்பார்.
நான் துளியேனும் மாறவில்லை - எனை
உலகம் காணும் கோணங்கள் தான் மாறுகிறது.
எனக்கு துளி கவலையும் இல்லை அதை எண்ணி,
அமாவாசையிலும் கூட நான் முழுமையாகவே இருக்கிறேன்,
உங்கள் பார்வையில் இல்லாமல்,
எந்த தேய்வும் இல்லாமல்.
நீ முழுமை
உலகத்தின் பார்வைப்பற்றி கவலைகொள்ளாதே.
உலகம் உனை தனியே விட்டே இயங்கட்டும்.
அழ வேண்டுமா
கடைசிச்சொட்டு கண்ணீர் வரை அழுது தீர்த்துவிட்டு, கடந்து செல்.
எப்பார்வையும் நிரந்தரமில்லை,
உன் இருப்பே நிரந்தரம் - என்னைப்போல்.