Advanced Search

Show Posts

This section allows you to view all posts made by this member. Note that you can only see posts made in areas you currently have access to.


Messages - Empty Dappa

Pages: 1 2 [3] 4
31
Own Poems - சொந்த கவிதைகள் / Everything ❤️
« on: December 16, 2022, 10:45:13 pm »
உண்மையிலேயே
Everything என்பது,
நிறைவு என்று பொருள்படுகின்ற
ழுழு உணர்வை சுமந்து நிற்பது.

அத்துனை பூரண புரிந்துணர்வை கண்டுகொள்கின்ற உறவொன்றில்,
காதல் முதன்மை பெறுகிறது.
எதிலும் காதலே வியாபித்துக் கிடக்கிறது.
வற்றாத ஜீவநதி போல ஆன்மாவுக்குள் இருந்தே ஊற்றெடுத்து,
ஓட ஆரம்பிக்கின்றது.
அதனினும் சிறந்தவொன்றை
சிலாகித்துப் பேசிவிட இயலாதவாறு,
அந்தக் காதல் தன்னகத்தே
சொற்களில் வறட்சியை
உணர ஆரம்பிக்கின்றது.
அப்போதெல்லாம் பரிபூரணத்தன்மையை மாத்திரம்தான்
காதலால் உணர முடிகிறது.

இதைத்தான்...!
"உன்னை பிடிக்கின்ற அளவை
சொல்லத் தெரியாது! அல்லது,
சொல்ல இயலவில்லை!
வார்த்தைகள் வசப்படவில்லை!
ப்ளா, ப்ளா, ப்ளா,...!
என்று மனிதன் சொற்களை தேடி
தாகித்துத் தவிக்கும் உணர்ச்சிப்பூர்வமான நிமிடம்.
தன்னுடைய காதலின் அதீதத்தை, தன்னகத்தே மட்டும்
கொண்டாடி, இன்புற்றுக் கொள்ள
வாய்க்கும் மனதின் மகத்துவ நிலை.

காதலின் அழகு,
அதன் வலி,
அதன் சுகம்,
அதன் இனிமை,
அதன் மேன்மை,
அதன் பரிபூரணம்,
அதனால் ஏற்படுகின்ற சுகந்தமான காமம்,
அதன் உச்சத் தன்மையில்
உடலில் படருகின்ற பிரத்தியேக அமைதி,
காதல் தருகின்ற அடர்த்தியான இனிமை,
அதனை விடுவித்துப் பிரிகின்ற போது
ஏற்படுகின்ற அதன் தனிமை போன்ற,
காதலின் ஆழமான அனைத்து வடிவங்களையும்
Everything என்ற சொற்பதம் சற்றும் மிகையின்றி
உணரச்செய்து கொண்டே இருக்கும்.
அப்படித்தான்!
சிலவற்றை உணர்வதில் உள்ள
beauty சொல்வதில் ஈடாவதில்லை.

மனதளவில் உணர்ச்சிப்பூர்வமாக எழுகின்ற அனைத்தையும்,
அதன் எல்லை வரை சென்று அனுபவித்துவிட்டு வந்த
நிரப்பத்தை தருகின்ற ஒன்றுக்கு மட்டுமே
எவ்ரிதிங் பொருந்திப் போகிறது.
கதியென வீட்டிருப்பதும்
அதனில் மட்டுமே சாத்தியப்பாடுகிறது….



32
Own Poems - சொந்த கவிதைகள் / வலிமை
« on: December 14, 2022, 09:58:05 pm »
நினைவுகளை மட்டும்
துணை வைத்துக் கொண்டு
வாழ்ந்து விட வேண்டும்.
போதும்...!
நினைவுகளை விட்டுச் சென்றவர்கள் கூட
அருகிருக்கத் தேவையில்லை.

ஆனால்...!
இங்கே அந்நினைவுகளே
வதைக்கும் போது
எங்கிருந்து துயரற்று வாழ்வது.

மெல்ல மெதுவாய்
பிரமிப்புக்கள் குறைந்து கொண்டு வந்து,
உயிராய் உரைந்த நேசத்தில்
ஓர் விலகல்...!
முன்னுரை எழுதி வைக்கையில் தான் தொடங்குகிறது...,
ஆரம்ப நாட்களில்
கொண்டாடித் தீர்த்த
நினைவுச் சுகங்களின் எண்ணங்கள்.

நேற்றைகளில் பற்றிப் பிடித்துக் கொண்டு,
தாங்கித் தாங்கி ஆர்ப்பாட்டமாய்
சுமந்து கொண்டு திறிந்த அன்பெல்லாம்,
இன்றைக்கு என்னவாயிற்று?
என்ற ஒற்றைக் கேள்வியை
தனக்குள் கேட்டுக் கொள்ளும் படியான
ஓர் நிலை உண்டாவதானது,
நமது நாளைகளின்
முழு இன்பங்களையும்
கொன்று விடக் கூடும்.

புறக்கணிக்கப்படுகிறோமோ என்ற மாயையான ஓர் கேள்வி
சிந்தையில் நச்சரிப்பது எப்போதெனில்...!
நம் இருப்பை தக்க வைப்பதற்காய்
செய்த மெனக்கெடல் எல்லாமே, புறந்தள்ளப்படுகிறதே
என்ற உணர்வு சலனமாடுவதால் தான்.

பல போது
பேரன்பின்
அதிகப்படியான முடிவுரைகள்
எழுதப்படுவதெல்லாம்...!
நேர்த்தியான பெருந்துயர்களை
தொட்டுத்தான்.
அதன் பிறகான நகர்வுகளை கடப்பதெற்கெல்லாம்
அலாதியான வலிமை தேவைப்படலாம்.

33
மூடப்பட்ட ஒவ்வொரு கடையின் வாசலிலும்
தயங்கிக் கொண்டே ஒதுங்கிக் கிடக்கின்றன சில உயிர்கள்.

பிணியும், வலியும் பெரிதாய் தாக்காமல்
பார்த்துக் கொள்கிறது அவர்களது பசி.

காமமும், காதலும் நடைபாதை
செருப்புத் தடங்கள் மேலேயே
அட்டைப் பெட்டிகள் விரித்து அரங்கேற்றப்படுகிறது.

ஆம்புலன்ஸ் முதல் அரசாங்க வாகனம் வரை
அனைத்தையும் காவலர் ஊர்திதான் என்று
பதட்டத்துடனே கையாள்கிறது காதுகள்.

ஒவ்வொரு செருப்புச் சத்தம் கடந்து சென்ற பின்னும்
எழுந்து பார்த்து பிள்ளைகளை கணக்கிட்டுக் கொள்கிறார் தந்தை.

காணமல் போன பிள்ளையை கனவில் கண்டு
அவ்வப்போது பதறி எழுகிறாள் அம்மா.

வாகன விளக்கை பார்த்து சுதாரித்து
பகிரப்பட்டுக் கொண்டிருக்கிறது சில முத்தங்கள்.

போர்வை போர்த்தி பச்சிளங்குழந்தையை
பசியாற்றிக் கொண்டிருக்கிறாள் தாயொருத்தி.

யாரையும் கண்டு கொள்ளாதது போல்
கடந்து கொண்டிருந்தாலும்
எனக்குள் ஓர் ஆசை மட்டும்தான்.

பகலில் மட்டுமே மழை பொழியும் என்றிருந்தால்,
எவ்வளவு நிம்மதியாய் இருந்திருக்கும்!

34
நீ எனக்கு எவ்வளவு நிம்மதியென்று விளக்கச் சொன்னால்,
நான் தூங்கினால் எழுப்பாமல்
நானே விழிக்கும் வரை தொல்லை
அகற்றி காப்பவளைப் போல….

நீ எனக்கு எவ்வளவு நெருக்கமென்று விளக்கச் சொன்னால்,
என் நகம் கடிப்பதற்கும்,
தலை கோதுவதற்கும் அனுமதி கேட்கத்
தேவையில்லாத உரிமையானவள் போல….

நீ எனக்கு எவ்வளவு தேடலென்று விளக்கச் சொன்னால்,
சிறைக் கைதியின் கம்பிக்கு வெளியேயான
வாழ்வின் ஏக்கம் போல!

நீ எனக்கு எவ்வளவு ஆசை என்று விளக்கச் சொன்னால்,
நெடுநாள் பசியின் முன்னே வீற்றிருக்கும்
அறுசுவை விருந்தைப் போல!…

நீ எனக்கு எவ்வளவு பிடிக்குமென்று விளக்கச் சொன்னால்,
பிறவியிலிருந்தே பிடித்துப் போயிருந்த
பால்ய காலத்து தேன் மிட்டாய் போல!

நீ எனக்கு எவ்வளவு ஆசிர்வாதமென்று விளக்கச் சொன்னால்,
ஒரேயொரு ஒளியில் மிளிரும்
அறையின் வெயிலில் தெரியும்
நுண் துகள் போல!

நீ எனக்கு எவ்வளவு அச்சமென்று விளக்கச் சொன்னால்,
வாழத் துடித்து ஏங்கிக் கிடப்பவன்
கண் முன்னே சந்திக்கும் சாவைப் போல!

நீ எனக்கு எவ்வளவு தொலைவென்று விளக்கச் சொன்னால்,
அழுத்தமான அன்னை முத்தத்தின்
இதழுக்கும் நெற்றிக்கும்
இடையேயான இடைவெளி போல!

நீ எனக்கு எவ்வளவு அமைதியென்று விளக்கச் சொன்னால்,
பசியாறி அயர்ந்துறங்கும் சஞ்சலமில்லா
குழந்தையின் ஆழ்மனம் போல!

நீ எனக்கு எவ்வளவு முக்கியமென்று விளக்கச் சொன்னால்,
என்னை மறந்து நேசித்துக் கிடக்கும்
நானே கண்டுகொள்ளப் படாத என் காதல் போல! ❣️

35
வேகமா நகர்ந்துட்டிருக்கோம்.
நேர்மையா சொன்னா நிக்காம ஓடிட்டிருக்கோம்.
சலிப்பாவே தான் நாள் கடத்துறோம்.
ஒவ்வொரு நாளோட இறுதியிலும்
இந்த நாள் இன்னும் நல்லதா அமைஞ்சிருக்கலாம்ன்னு தான் தோனுது.

நின்னு நிதானமா ஒரு நிமிஷம் யோசிச்சி பாத்தா
நாம தொடங்குன இடம் இத விட ஏதோவொரு வகையில
அழகா தெரியும்அங்கயே இருந்திருக்கலாம்ன்னு தோனும்.
ஆனா, நாம தொடங்குனப்ப அதுதான் மோசமான இடம்.

அந்த முந்தைய நாள்ல
நாம அன்றைய நாள குறை சொல்லிட்டோ,
வெறுத்துட்டோ, வேண்டா வெறுப்பா
வாழ்ந்து தொலைச்சிட்டோ தான் வந்து சேர்ந்திருப்போம்.
இன்னக்கி அது பேரழகா தெரியிது.
அந்த நாள்ல வாழ ஆசையா இருக்குது.

அன்றைக்கும் சரி. இன்றைக்கும் சரி.
பிரச்சனையும், வருத்தமும்,
ஏக்கமும், தேடலும்,
கோபமும், வலியும்,
வேதனையும் இருந்துட்டே தான் இருக்கு.
வெவ்வேற வகையா இருக்குமே
தவிற இதெல்லாம் இல்லாத ஒருத்தன பாக்க முடியாது.

இன்னக்கி நாம வாழுறது
நாளையில் இருந்து பாக்குற நமக்கு,
நேற்றைய நாள் தந்த ஏக்கத்தையே திரும்ப தரலாம்.
ரொம்பவே அழகா தெரியலாம்.
அப்ரம் ஏன் இன்றைக்கு இந்த சலிப்பெல்லாம்.

சரி முழுக்கவே பிரச்சனையா இருக்குங்குன்னு வச்சிப்போம்.
சரி பண்ண தான் பயணப்படுறோம்.
அதுக்காக தான் உழைக்கிறோம்,
ஓடுறோம். அந்த ஓட்டத்துல
நாம வருத்தத்த ஏன் காட்டிட்டே ஓடனும்.

தேவையோ, ஆசையோ, கனவோ, லட்சியமோ.
அதுக்காக போற பாதைய எவ்ளோ அழகா வச்சிக்க முடியிதோ,
அதேயளவு அழகா இந்த நாள கடத்திரலாம்.
வலி இல்லாத ஆளே கிடையாதுதான்.
அதுக்கான மருந்தாதான் ஒவ்வொரு நாளும் அமையனும்.

வாழ்க்கைங்குற வண்டி பஞ்சராயிருச்சுன்னா
அத பஞ்சர் கடை வரைக்கும் சிரிச்சிட்டே தள்ளுறோமா,
பஞ்சராயிருச்சேன்னு வருத்தப்பட்டு
அழுதுட்டே தள்றோமாங்குறது தான் விசயமே.
எப்டி தள்ளுனாலும் வண்டிய நாமதான் தள்ளனும்.

நாம ஆச தீர வாழ்ந்து சாக பிறந்தவர்கள்.
அலுப்பாய் சாக அல்ல.
ஒவ்வொரு நாளும் மேலும் உன்னை மெருகூட்டுகிறது மனிதா.
நீ வாழ்ந்து கொண்டிருப்பதெல்லாம் இன்னொருவரின் பேராசை.

"போடா வருவது வரட்டும் என்பவனே நல்ல ரசிகன்"

36
நீ அழகாயிருக்கிறாய் என்பேன்வெட்கப்படுவாள்
அதே நேரம் சந்தேகப்படுவாள்.நம்ப மறுப்பாள்.
நான் அழகாயிருக்கிறேன் என்பேன்.
சிரிப்பாள். ரசிப்பாள். நம்பவும் செய்வாள். பாவக்காரி.

பெரும்பாலும் மட்டம் தட்டப்படும்
என் முகவாகை கொஞ்சும் மனிதி. அடிக்கடி நீ அழகு.
உன்னில் எல்லாமே அழகு என்று
புத்துணர்ச்சிக்குள் தள்ளிக் கொண்டேயிருப்பாள்.

புதிது புதிதாய் எப்படி கவர்கவதென்று
அவளிடம் கற்றுக் கொள்ளலாம்.
ஒவ்வொரு முறை அவள் கடந்த பின்னும்
மீண்டும் மீண்டும் புதிதாக்கிக் கொள்கிறாள் அவள் காதலை.

நிறைய கவிதை சொல்வாள்.
அது அவள் பேச்சிலேயே எதார்த்தாமாக வரும்.
உன்னை எனக்கு எவ்வளவு பிடிக்கும் தெரியுமா என்று கொண்டாடுவாள்.
எவ்வளவு காதலிக்கிறேன் தெரியுமா என்று வாதாடுவாள்.

அவள் வாக்கியத்தின்
ஒவ்வொரு வார்த்தையின்
ஒவ்வொரு ஆயுத எழுத்தின் மீதும்
ஆயிரம் புள்ளிகள் வைத்தது போல்
அவ்வளவு அழுத்தமாயிருக்கும் அவள் சொல்வது.

யாரோவொருவனாக எங்களை நானே தூரத்தில்
இருந்து பார்ப்பதாய் நினைத்திருக்கிறேன்.
சத்தமாய் சிரித்து நானே கேளி செய்யுமளவுக்கு தான்
அது இருக்கும்.

காதலிப்பவர்களின் சம்பாஷணைகள் எதுவுமின்றி
அவளை எளிமையாக கையாள முடியும்.
காதல் பைத்தியக்காரத்தனம் என்பதை மட்டும்
அவள் குணாதிசயங்கள் அவ்வப்போது நினைவு படுத்தும்.

மற்றபடி பெண்ணை பிரம்மிப்பாகவே
பார்த்துப் பழகிப்போன எனக்கு
இயல்பான மற்றும் கேளித்தனமான
அதே நேரம் ஆச்சரியமான விசயம்தான்
பெண்ணென்று தெரிந்தது உன்னால்தான்.

என்னால் உன்னை தாண்டியும், உன்னிலிருந்தும்,
உன்னை கடந்தும் வாழ்ந்து கொண்டிருக்க முடிகிறது.
மன்னித்துக் கொள்.
நீ கொட்டிச் சென்ற காதலின் அடர்த்திக்கு
என் ஆயுள் போதாது.

37
Own Poems - சொந்த கவிதைகள் / சமன்💗
« on: December 01, 2022, 05:40:50 pm »
போக்குவரத்து நெரிசலில் தவற விட்ட என் செருப்பை
என்னிடம் கொடுக்க கையில் தூக்கிக் கொண்டு
ஓடி வருகிறார் ஒருவர்.

செருப்பு விழுந்த பதட்டத்தில்
சட்டென வண்டியை நிறுத்தியதற்கு
அசிங்கமாய் ஏசுகிறார் பின்னாலொருவர்.

சமன் செய்ய ஒருவருக்கு மன்னிப்பும்,
இன்னொருவருக்கு அன்பும் தர வேண்டியதாகி விட்டது

மதிய உணவிற்கு காசில்லாத போது என்னிடம்
இந்த இரண்டு விசயங்கள் இருந்ததே தெரியாமல்,
நம்மிடம் எதுவுமே இல்லை போல என்று
வருத்தப்பட்டு கொண்டிருந்தேன்

உலகம் பணத்தால் அளவிடப்படுகிறது
மனிதர்களால் ஆசிர்வதிக்கப்படுகிறது
அன்பால் இயங்குகிறது

38
யாரையும் புதிதாய் அறிமுகப்படுத்துவதில்லை.
யாரிடமும் என்னையும் அறிமுகப் படுத்திக் கொள்வதில்லை.
யாரிடமும் நலம் விசாரிப்பதில்லை.
யாரிடமும் சுக, துக்கங்களை விழுங்காமல் சொல்ல முடிவதில்லை.

யாரிடமும் என் சார்ந்த எதற்கும் அனுமதி கேட்பதில்லை.
யாரிடமும் ஒரு வரிக்கு மேல் வாதாடுவதில்லை.
யாரையும் பகிரங்கமாக கத்தி கூப்பிட பிடிக்கவில்லை.
யாரைப் பற்றியும் புகாரிட விரும்பவில்லை.

பிடித்தவர், பிடிக்காதவரென்ற
எந்தவொரு வரைமுறையும் சுற்றத்தாரை வைப்பதில்லை.
பிறப்பு, இறப்பென்று
எந்த சுக துக்கங்களையும் விரும்பி ஏற்றுக் கொள்வதில்லை.
உரிமை கொண்டாட பிடிக்கவில்லை.

உறவு முறை, நட்பு முறை பாராட்ட பிடிப்பில்லை.
இதுதானென்ற நியாய, அநியாய கோட்பாடுகளை ஏற்க விருப்பமில்லை.
யாரும் கை பிடித்து அழைத்து செல்ல விரும்பவில்லை.

யார் பணமும், யார் குரலும்
இப்போதைக்கு என் தைரியமாயில்லை.
அலுப்பில்லாமல் சாப்பிட, தூங்க உடலும் விரும்பவில்லை.
மெய்வருத்த மனதும் தயங்கவில்லை.

கூடென்று ஏதுமில்லை.
சுதந்திரப் பறத்தலுக்கு சிறகுமில்லை.
கவிதை, கதை ஏதுமில்லை.
காதலுமில்லை.
கருணையுமில்லை, என்னிடத்தில் கண்ணீருமில்லை.
கடைசியில் உண்மையுமில்லை.

அன்பின் சல்லாபங்கள் வாழ்வின் எல்லை சேரும் வரை
தன்னை நிராயுதபாணியாய் பாவித்து நம்ப வைத்து
பயணப்படுத்தும் போது உடனான அத்தனையும் சலிப்புக்குள்ளாகிறது.

ஏதுமில்லை என்றானபின் வரும்
எண்ணவோட்டம் நதி போன்றது ……

39

கனம் கூடிய மனநிலையின் முற்றிய நிலையில்
உடைந்தழுகையில் கிடைக்கும் மடியில் கிடக்கும் போது
கிடைக்கும் தழுவலுக்கு நிகரான ஓர் நம்பிக்கையூட்டும்
செயலென்பது அசாத்தியமானது.

தவம் முடித்து விழித்ததைப் போன்ற அதிகாலை
விழிப்பிதுக்கத்தில் கிடைக்கும் தலைக்கோதுதலுக்கு
நிகரான ஒரு ஊக்குவிப்புச் செயலென்பது
எத்தகு வியப்புக்குரியதாய் இருக்கும் என்று
அன்று முழுதும் இருக்கும் புத்துணர்ச்சியேப் பதில் சொல்லும்.

அதிகமான சந்தோஷத்திலோ,
அடக்கி வைக்க முடியாதப் பேரின்ப நிகழ்விலோக் கிடைக்கும்
ஒரு தழுவலுக்கு நிகரான எந்தவொரு பக்குவப்படுத்தும்
அறிவுரையும் இருந்திருக்க வாய்ப்பில்லை என்றும் கூறலாம்.

ஆடிப்பாடி வெறும் களைப்பொன்றின் மட்டுமேக் காரணங்கொண்டு
கட்டிலில் மடிந்து விழுந்துக் கிடக்கையில் கிடைக்கும்
அந்த ஒரு தழுவலென்பதற்கு நிகரானதொரு நிதானமூட்டும் பண்பு
எந்த பொழுதுபோக்கு அம்சங்களுக்கும் இருந்திடுவதில்லை.

எதாவதொரு அதிகப்படியானத் தனிமையை உணர்ந்து
யாருமில்லாத நிலை என்ற முட்டாள்த்தனப் புலம்பல்களுக்கு
இடையில் கிடைக்கப் பெறும் திடீர் அணைப்பிற்கு நிகராக
எந்தவொரு ஆறுதல் வார்த்தையும் இருந்து விட முடியாது.

இவையெல்லாம் கிடைக்கப் பெறுவதென்பதுதான் வரம்.
இந்தத் தழுவல்களெல்லாம் படிநிலைகளுக்கு உயர்த்திச் செல்லும்.
முன்னேற்றும். நடத்தி முடிக்கும் நம்மையே, நம்மின் இயக்கத்தையே.
ஆகையால், இது போன்ற ஒன்றிரண்டுத் தழுவல்களுக்குதான்
இந்த மனம் ஏங்கி நிற்கிறது.

மனிதர்களுக்கான தேவையே சக மனிதர்கள்தான்.
வலியானவர்களை அணைப்பதும்,
பிணியானவரை பேணுவதும்
இயற்கையாகவே இயன்றதுதானே.
ஏந்திக் கொள்வோம்.!

"கண்ணீரை துடைக்கும் விரலுக்கு, மனம் ஏங்கி கிடக்குது"

40
நீ நலமாய் இருப்பாய்!
நீ ஆரோக்கியமாய் இருக்க வேண்டும்!
நீ மனமுடையாது தைரியமாய் இரு!
நீ மகிழ்ச்சியாய் இருந்தாலே போதும்!
உன் நல் எண்ணங்கள் நிறைவேறும்!
உன் துன்பங்கள் நீங்கும்!
முடிந்தால் என்னோடு அவைகளை
பகிர்ந்து கொள்!
அப்போதாவது மனம் சற்று ஆறும்!
உனக்காக எப்போதும் பிரார்த்திக்கிறேன்!
நீ நலமோடு இரு!

இவ்வாறு எல்லாம் கூறிக் கொண்டு,
அவ்வளவாய் நமக்கு பரீட்சியம் இல்லாத
மனிதர்கள் நிறைய,
வாழ்வில் வந்து போகிறார்கள்.
அவர்கள் கூறுவதால்
எம் பிரச்சனைகளும், துயரங்களும்,
தீர்ந்து விடாது தான்.
ஆனால்...!
அவை எல்லாம்
அவ்வப்போது தடுமாறும் மனதுக்கு இதமளிக்கிறது.

ஏனெனில்!
இங்கேயே தான்
நமக்கு மிகவும் பரீட்சியமான
பல மனிதர்கள்
கண்டும் காணாதது போல நகர்கிறார்கள்.
இங்கேயே தான்
நம்மை தெரியாத மனிதர்கள் போல,
அவர்கள் பாசாங்கு செய்து
ஒளிந்து கொள்கிறார்கள்.
நாம் இத்துனை
பழக்கம் வாய்ந்தவராய் இருந்தும்,
நம் துன்பங்களின் போது
தூரமாய் தொலைந்திருக்கிறார்கள்.

அப்படிப் பார்க்கையில்...!
அவ்வப்போது வரும்
பரீட்சியம் இல்லாத
இம்மனிதர்கள் எல்லோருமே,
நியாபகத்தில்
நிறுத்தி வைக்கப்பட வேண்டியவர்கள்.
இவர்கள் எல்லாம்
அத்துனை முக்கியமானவர்கள்.

"மன்னித்துக் கொள்" என,
பின்னொரு நாளில்
எதற்குமே உபயோகமற்ற
மன்னிப்புக் கோரல்கள்
கூறிக் கொண்டு வருபவர்களை விட,
தக்க தருணத்தில்
ஆற்றுப்படுத்தல்களோடு
வந்து சேரும் மனிதர்கள்
மிகப் புனிதமானவர்கள்

41
இப்போதெல்லாம் ஒரு பிரிவினை
அத்துனை சுலபமாக,
இதோ! பரிசெனக் கையளிக்கிறார்கள்.
அதனை நாம்
ஒப்புக் கொண்டுத்தான் ஏற்கிறோமா, என்பதைப் பற்றிய
கரிசனையாவது இருப்பதில்லை.

எப்போதோ துயருறும் போது
துணை நின்றவர்கள் தான்,
இப்போது துவழ்கையில்
துரதிர்ஷ்டவசமாய்
இல்லாமல் போயிருக்கிறார்கள்.

அவர்கள் அறிவார்களா!?
"இனி இல்லை"
என்ற வார்த்தைக்குப் பின்னால்,
தனியாய் நடுநடுங்கிக் கொண்டிருக்கும் தனிமையைப் பற்றி?
இன்மை என்பதன் பின்னால்
பதற்றத்தோடு மறைந்திருக்கும் ஆற்றுப்படுத்தவியலாத
ஆதங்கங்கள் பற்றி?

அவர்களுக்குத் தெரியவில்லை!
பிடித்தமான ஒருவரின்
குரல் கேட்பது நின்று விட்டால்,
மனதுக்கு நெருக்கமான அத்துனையும் பிடிக்காத பட்டியலில்
சேர்ந்து விடுகிறதென்பது!

மேலும்!
குறுஞ்செய்திகளை
அத்துனை இயல்பாய்
நிறுத்திக் கொள்கிறார்கள்.
அவர்கள் அறியமாட்டார்கள்! அவையெல்லாம் வெறும்
எழுத்துக்கள் அல்ல!
விரும்பிப் படித்துப் படித்தழும்
ஆசையாய் சேகரிக்கப்படும்
உணர்வுக் குவிப்புக்கள் என்று.

"காலம் மாற்றி விடும்!
இயல்பாய் இருக்கப் பழகிக் கொள்"!
எனச் சொல்லித் திரும்புகிறார்கள்.
அவர்களுக்கு எப்படிப் புரியும்?
கடலும், காற்றும்,
வானும், மண்ணும்,
நிலையாய்
இருப்பு பெற்றிருப்பது போலத்தான்
அவர்களின் இருப்புமென்பது.

அவர்கள் அறிவார்களா?
எத்தனை முகங்களோடு
உறவாடி, உரையாடினாலும்,
அவர்களை, அவர்களின் பிரதியினை,
பிற ஒருவரிடம்
தேடியடைந்து கொள்ள முயற்சித்த பிரயத்தனங்கள் எல்லாம்,
பரிதாபமாய் தோற்றுப் போனதை.?


42
உனக்கு முன்னால்
உடைந்து அழுதிடவும் முடியும்
என்பதை விடவா
வேறொரு இயல்பாயிருத்தல்
சாத்தியப்பட்டுவிட முடியும்

காயப்பட்ட ஒரு அப்பிராணி விலங்கின் மீது
காட்டிடும் காருண்யம் போன்றல்லாத
ஒரு அக்கறையையே எதிர்நோக்குகிறேன்

உன்னை காயப்படுத்தக்கூடும்
எதிர்ப்பார்பின் இன்னொரு எதிர்வினையை
என் அன்பு நிகழ்த்திப் போகுகையில்
எதிர்கொண்டிடும் கையாலாகாத்தனங்களால்
கைசேதப்பட்ட படியே
இல்லா வைராக்கியம் ஒன்றின்
கூடுகளுக்குள்ளே நுழைந்து
நீறுகிறேன்

இயல்பாயிருத்தலும் இயல்புதொலைத்தலும்
இல்லாத ஒரு நிலையினில்
எதைக்கேட்பது என்றறியாத
அழுது ஓய்ந்த ஒரு குழந்தையின் அமைதியை தேர்கிறது
இரைச்சல்களின் சலசலப்புகள் அடங்கிடாத மனம்

பனிபடர்ந்த சருகுகளின் மீதாக
தன் அடர்வை போர்த்திக் கொள்கிறது இருள்

விடியலுக்கு முன்னாக உதிரக்கூடும்
இலைகளுக்கு மேலாகவே படரட்டும்
விடியலின் வெளிச்சக் கதிர்கள்

இந்த ஈரம் உலர்ந்திடும் சாத்தியங்களில்லை

இயல்பாயிருக்கவே விழைகிறேன்
இரவின் கருணையை வேண்டியபடி...

43
நீ...♥

என் தற்காலிகப் புன்னகைகளின் உருவாக்கம்.
நிரந்தர மகிழ்வின் நீட்சி.
சொற்ப கால சுதந்திரம்.
என் வாழ்நாளின் பலன்.

தொலை தூர பயணத்தின் கடைசி நிறுத்தத் துணை.
அருகே அமர்ந்த குழந்தை.
தோல் சாய்ந்த உறக்கம்.
ஏதோவோர் சங்கீதம்.

நன்னாளின் புத்தாடை.
நிறைவான நல் விருந்து.
என் காதலின் கிடாவெட்டு.
இரட்டைப் பக்க ஒரே இலை.
பந்தியில் எனக்கு மட்டும் தனிப் படையல்.

முந்நூறு கண் சிமிட்டல்கள்.
மூவாயிரம் முத்தங்கள்.
முப்பதாயிரம் தேநீர்.
மூன்று நாளைய போதை.
மொத்தமான என் கதி.

விடியலின் மொத்த விருட்சம்.
நள்ளிரவிலும் விலகாத வெளிச்சம்.
என் மழைக்கோர் குடை.
பனிக்கோர் போர்வை.
இடர்க்கோர் தீர்வு.

எனதான ஓர் பத்திரம்.
என் மெத்தையின் சோடித் தலையணை.
எனதென்று கைக்காட்ட ஓர் சொத்து.
நீயன்றி ஏதுமில்லை என்றான நியாபகம்.

44
Own Poems - சொந்த கவிதைகள் / பாதை....
« on: September 15, 2022, 10:38:37 am »
பாதைகள் தடங்கல்களற்றதாக
மாறியிருக்கிறது

இலக்குகளற்ற பயணம்
என்பது போய்
குதுகூலமற்றதாக மாறி
வெளிறத் துவங்குகிறது இலக்குகள்

யாரையெல்லாம் விழிகள்
விரிய விரிய பார்த்து மலர்ந்ததோ
அவர்களை தூரமாய் பார்த்தும்
பாராமுகமாகிறேன்

தாடைகள் அகன்றிடும்
போலியான ஒரு புன்னகை போர்த்தும்
அசௌகரியங்களை விட
பரிச்சயமில்லாத இந்த பதுங்கல்கள்
பாதகமில்லை என்ற சமாதானங்களை
சாக்காக்கிக் கொள்ளலாம்

காரணம் சொல்லிக் கொள்ளும்
தேவைகள் இல்லை
என்பது கூட காரணமாகி இருக்கலாம்

வழிதூரத்தில் எங்கோ
என் பாதைகளைத் தொலைத்திருக்கிறேன் 

உண்ணவும் குடிக்கவுமான இடைநிற்றல்களும்
இளைப்பாறல்களும்
தவிர்த்து
இடற்பாடுகள் ஏதுமற்ற
வேறு யாரோ ஒருவரின்
வழித்தடத்திலேயே
நோக்கங்கள் ஏதுமின்றி
ஒரு பிரயாணம் மேற்கொண்டிருக்கிறேன்.

இன்னும் கொஞ்சம் நேரத்தில்
இலக்கு வந்துவிடும்
நான் போகவேண்டியபாதைகள் தடங்கல்களற்றதாக மாறியிருக்கிறது

இலக்குகளற்ற பயணம்
என்பது போய்
குதுகூலமற்றதாக மாறி
வெளிறத் துவங்குகிறது இலக்குகள்

யாரையெல்லாம் விழிகள் விரிய விரிய பார்த்து மலர்ந்ததோ
அவர்களை தூரமாய் பார்த்தும்
பாராமுகமாகிறேன்

தாடைகள் அகன்றிடும்
போலியான ஒரு புன்னகை போர்த்தும்
அசௌகரியங்களை விட
பரிச்சயமில்லாத இந்த பதுங்கல்கள்
பாதகமில்லை என்ற சமாதானங்களை சாக்காக்கிக் கொள்ளலாம்

காரணம் சொல்லிக் கொள்ளும்
தேவைகள் இல்லை
என்பது கூட காரணமாகி இருக்கலாம்

வழிதூரத்தில் எங்கோ
என் பாதைகளைத் தொலைத்திருக்கிறேன் 

உண்ணவும் குடிக்கவுமான இடைநிற்றல்களும்
இளைப்பாறல்களும்
தவிர்த்து
இடற்பாடுகள் ஏதுமற்ற
வேறு யாரோ ஒருவரின்
வழித்தடத்திலேயே
நோக்கங்கள் ஏதுமின்றி
ஒரு பிரயாணம் மேற்கொண்டிருக்கிறேன்.

இன்னும் கொஞ்சம் நேரத்தில் இலக்கு வந்துவிடும்
நான் போகவேண்டிய பாதைகளை
இனி எங்கே தேடுவது?பாதைகளை
இனி எங்கே தேடுவது?

45
ஆறுதல் கூற வருகின்ற
எல்லோரிடத்திலுமே
தூய்மை இருப்பதில்லை.

பொழுது போக்கிற்காக
சிலர் வருவார்கள்.

சங்கடப்படுத்துவதற்காக
சிலர் வருவார்கள்.

தற்காலிகமாக
சிலர் வருவார்கள்.

துயரத்தில் குளிர்காயவென்றே
சிலர் வருவார்கள்.

அகத்தில்
மகிழ்ச்சியை தவழச் செய்து கொண்டு, புறத்தில் கைப்பிடிப்பதாய் காட்டுவதெற்கென்றே
சிலர் வரத்தான் செய்வார்கள்.

இவர்கள் எல்லாம்
வந்துவிட்டுப் போகட்டும் விடுங்கள்.!

எல்லோரும் வந்து சென்ற பிறகும், மீதமிருந்து தோள் தரும் உன்னதமெது என்பதை சிலர் உணர்த்துவர்.
அவர்களை மட்டும் அங்கீகரியுங்கள். எங்கோவொரு
தூரத்துப் புள்ளியாய் இருந்து கொண்டு
நம் நலனை விரும்புபவர்கள்,
அருகில் வந்து
துயரமூட்டுபவர்களை விட மேலானவர்கள்....

Pages: 1 2 [3] 4