POEMS - கவிதைகள் > படித்து ரசித்த கவிதைகள்

படித்ததில் பிடித்தது

(1/1)

Vaanmugil:
பிரியன் என்பவரின் கவிதை :

தாய் பாசம்

பட்டு சட்ட போட்டுக்கிட்டு
துட்டு கொஞ்சம் வாங்கிகிட்டு
சிட்டு போல பொம்பளைய
கட்டிக்கிட்டு வந்தானே!

பெத்தமனம் படபடக்க
வளத்தமனம் துடிதுடிக்க
கல்யாணம் கட்டி வந்து
கண்கலங்க வச்சானே!

என்னடான்னு கேட்டாக்கா
"நடந்தது நடந்திருச்சு
நடக்குறத பாரு"ன்னு
நாசூக்கா சொன்னானே!

நாவச்ச பூச்செடிதான்
நாளபின்ன பூக்குமின்னு
கண்ணுறக்கம் கேட்டு போயி
காத்துதான் கெடந்தேனே!

நேத்து வந்த புயல் காத்து
பூச்செடிய தின்னுபுட்டு
எம்முன்னே ஏப்பம்விட்டு
போகுதறக் கண்டேனே!

பொண்டாட்டி பேச்சையே
பொன்னு போல நினைச்சு
சொத்தெல்லாம் எழுதி வாங்கி
சோகத்துல விட்டானே

ஏ ஆத்தா ஏ ஆத்தான்னு
தலைமேல வச்ச மகன்
போ ஆத்தா போ ஆத்தான்னு
சொல்லாம சொன்னானே

ரெண்டு மூன பெத்திருந்தா
வண்டுபோல வாழ்ந்திருப்பேன்
சாகபோற காலத்திலாவது
சந்தோசமா இருந்திருப்பேன்!

பொத்திவச்ச பத்திரமா
ஒத்தமகன பெத்ததால
போக்கிடமே இல்லாம
புகழுகேட்டு நிக்கிறேனே!

மத்தியான நேரத்துல
காலக்கஞ்சி கேட்டதுக்கு
எப்பவுமே சோறான்னு
எடுத்தெறிஞ்சு சொன்னானே!

பத்து முழம் மல்லி வாங்கி
பக்குவமா வச்சுவிட்டு
பக்கத்துல வாடின்னு
பொஞ்சாதிய கொஞ்சினானே!

பட்டணப் பொடி வாங்க
பைசான்னு கேட்டாக்கா
வெட்டி செலவு எதுக்குன்னு
வெறுங்கைய விரிச்சானே!

அவளோட பேச்ச கேட்டு
உறவெல்லாம் அத்துக்கிட்டு
ஆத்தான்னு பாக்காம
அனாதிபோல வச்சானே!

நடக்கவும் தெம்பில்ல
பார்க்கவும் கண்ணில்ல
தலையில மயிரில்ல
ஒடம்புல முழுசா உயிரில்லா

அரளிகொட்ட அரச்சு வச்சு
கஞ்சிகூட கலந்து வச்சு
வம்படியா சாகவக்கல
வக்கணையான எம்புள்ள!

காசு கொஞ்சம் செலவழிச்சு
ஆசிரமம் அனுப்பிவிட்ட
எம்புள்ள ராசாதான்!
நாவளத்த ரோசாதான்!


Vaanmugil:
பிரியன் என்பவரின் கவிதை :

கவிதை எனப்படுவது......

அகிம்சையும்
ஆதரிக்கும்
ஆயுதம்...

இதை கொண்டு
எந்த முரண்பாடுகளையும்
முடிவுக்கு கொண்டு வந்துவிடலாம்

இளைங்கர்களுக்கு கிடைத்த
இலக்கண திறவுகோல்....

இதைக்கொண்டு
திறக்க மறுக்கும்
மனங்களையும் 
திறந்து விடலாம்...

எழுத்து வடிவில்
எழுந்து நிற்கும்
சூரியன்.....

இதை கொண்டு
இருண்டு கிடக்கும்
இதயங்களின் வாசலில்
விடியல்களின் நிழலை
விழவைத்து விடலாம்....

இந்த நீதிமன்றத்தில்
மட்டும்தான்
எல்லா பொய் சாட்சிகளும்
ஏற்றுக்கொள்ளப்படுகின்றன...

கவிதையால்
கவரப்பட்டவனுக்கு
இருக்கும்
இடத்தை பொறுத்து
இரட்டை பட்டம்
கொடுக்கபடுகிறது....

படித்தவனிடத்தில்
கவிதை சொன்னால்
"கவிஞன்"

பாமரர்களிடம் சொன்னால்
"கிறுக்கன்"

அன்பான காதலிடம் சொன்னால்
"விரும்பத்தக்கவன்"

அர்த்தபடாத சமுதாயத்திடம் சொன்னால்
"வேலை வெட்டி இல்லாதவன்"

மரபுக்கு மதிப்பு கொடுத்தால்
"அர்த்தமுள்ள கவிஞன்"

புது கவிதைக்குள் புகுந்தவன்
"அவசரக் கவிஞன்"

இப்படி கவிதையால்
கவரப்பட்டவனுக்கு
இருக்கும்
இடத்தை பொறுத்து
இரட்டை பட்டம்தான்
 
அன்று பக்கம் பக்கமாய்
இருந்த கவிதையெல்லாம்

இன்று டிசம்பர் மாதத்து
காலண்டர் காகிதமாய்
இளைத்து விட்டன!

அன்று
சமுகக் கவிதைகளுக்கு
காதல் கவிதைகள்
ஊறுகாய்களாய் இருந்தன....

இன்று ஊறுகாய்களே
உணவாகிவிட்டன....

இப்பொழுதெல்லாம்
LKG குழந்தையின்
சேர்க்கை செலவு மாதிரி
காதல் கவிதைகளே
அதிகம் அச்சேறுகின்றன.....

ஆனாலும் காதலிப்பவன்
பாடப்புத்தகம் படிப்பதுபோல்
அவ்வப்போது
கருத்து கவிதைகளும்
கருதரித்துகொண்டுதான் இருக்கிறது....

பழமையை மறக்காத்
பழைய இதயங்கள்
படிக்கும் என்ற
பகட்டு நம்பிக்கையில்.....


இந்த கவிதை ரொம்பவே அழகு உண்மையும் கூட கவிதையை பார்த்தால் சிலருக்கு என்னவெல்லாம் தோன்றும் என்பது அழகா சொல்லிருகாரு....இதை படிக்கும் தருணம் இதில் நான் எழுதும் கவிதை எவ்வாறு என்று சிந்தித்தேன்!... கவிஞன், கிறுக்கன், விரும்பத்தக்கவன், வேலை வெட்டி இல்லாதவன், அர்த்தமுள்ள கவிஞன், அவசரக் கவிஞன் இப்படி பல பெயர்கள் கொண்டவர்கள் கவிதை பார்ப்பவரின் நிலையை பொறுத்துள்ளது.....

Navigation

[0] Message Index

Go to full version