General Category > Cooking Tips - சமையல் குறிப்புகள்

பழங்களின் பலன்கள்

<< < (2/2)

Sanjana:
6.நார்த்தம் பழத்தின் மருத்துவகுணங்கள்

நார்த்தம் பழம் எலுமிச்சை வகையைச் சார்ந்தது. இதன் பழங்கள் பெரிதாக அளவில் காணப்படும். காய்கள் நன்கு பச்சையாக இருக்கும். நார்த்தம் பழத்தின் மணத்திற்கு மற்ற மணங்களைக் கட்டுப்படுத்தும்குணமுண்டு. நார்த்தம் பழத்தில் நன்கு கனிந்த பழமே சாப்பிட உகந்தது. இந்தப் பழம் எல்லாக் காலங்களிலும் கிடைக்கும். நன்கு பழுத்த பழம் மஞ்சள், பச்சை கலந்து காணப்படும். பழத்தின் தோல்பகுதி கனமானதாக இருக்கும்.

இவற்றில் நீர்நிரம்பியிருக்கும். புளிப்பு சுவை மிகுதியாக இருப்பதால் இந்தப் பழத்தை சிலர் விரும்பி சாப்பிடுவதில்லை. ஆனால் நன்கு கனிந்த பழம் நல்ல சுவையுடன் இருக்கும். கிராம மக்களின் சாத்துகுடியாக நார்த்தம்பழமே விளங்குகிறது. நார்த்தை மரங்கள் நூறு ஆண்டுகளுக்கு மேல் வாழக்கூடியவை. நார்த்தையில் வேர், மலர், கனிகள் அனைத்துமே பயன்கொண்டவை.

செயல்திறன் மிக்க வேதிப்பொருட்கள்

கனிகளில் அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், கொழுப்பு அமிலங்கள் உள்ளன. அஸ்கார்பிக் அமிலம், அலனைன், நியசின், வைட்டமின் பி, அஸ்பார்டிக் அமிலம், இனிசைன், குளுடாமிக் அமிலம், பெர்கமோட்டின், நாரிங்கின், சிட்ரல், லிமோனின், நார்டென்டாடின், வெலென்சிக் அமிலம் உள்ளன.

மலர்கள் தசை இறுக்கி, செயல்ஊக்கி, வேர் வாந்திக்கும் வயிற்றுப் புழுக்களுக்கும் எதிரானது. மலச்சிக்கல் மற்றும் சிறுநீரகக்கல் நோய்களுக்கு மருந்தாகிறது. கனியின் தோலுறை வயிற்றுப் போக்கை நிறுத்தும். வயிற்றில் ஏற்பட்ட புண்ணிற்கு நார்த்தங்காய் ஊறுகாய் நல்ல மருந்தாக அமைகிறது.

நார்த்தங்காயை அல்லது பழத்தை எந்த வடிவத்திலாவது உணவில் சேர்த்து வர ரத்தம் சுத்தமடையும். வாதம், குன்மம் (வயிற்றுப் புண்), வயிற்றுப் புழு இவை நீங்கும். பசியை அதிகரிக்கும்.

கனிந்த கனிகள் வலுவேற்றி, ஊக்குவி, இதன் சாறு வாந்தி நிறுத்தும். பசியை தூண்டுவிடும், தசை இறுக்கி குளிர்ச்சி தரும். காய்ச்சலின் வெப்பம் மற்றும் தாகம் போக்கும். நார்த்தை பழத்தின் மேல் தோலை தேன் அல்லது சர்க்கரைப் பாகில் ஊற வைத்து நன்கு ஊறிய பின் சீதக் கழிச்சல் உடையவர்களுக்கு கொடுக்க நல்ல பலன் தரும்.

உடல் சூடு தணியும்

உடல் சூடு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். உடல் சூடு தணிய தினமும் ஒரு நார்த்தம்பழம் சாப்பிட்டு வந்தால் உடல் சூடு தணியும். உடலுக்கு புத்துணர்வு கிடைக்கும். இப்பழச்சாறு மதிய வேளையில் அருந்திவந்தால் வெயிலின் தாக்கம் குறையும்.

பித்த அதிகரிப்பால் ஈரல் பாதிக்கப்படுவதுடன் இரத்தமும் அசுத்தமடைந்து பல நோய்கள் ஏற்படுகின்றன இந்த பித்த அதிகரிப்பால் தலைச்சுற்றல், வாந்தி, மயக்கம் உண்டாகிறது. இதற்கு நார்த்தம் பழத்தை காலையில் சாப்பிட்டு வந்தால் பித்தம் தணியும்.

உடல் வலுப்பெற

நார்த்தம் பழத்தை சாறு எடுத்து அதனுடன் பனங்கற்கண்டு அல்லது தேன் சேர்த்து அருந்தி வந்தால் உடல் வலுப்பெறும். இரத்தம் மாசடையும்போது இரத்தத்தில் உள்ள வெள்ளையணுக்கள் பாதிக்கப்படுகின்றன. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறைகிறது. நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்தம் சுத்தமடையும். நோயின் தாக்கத்தினால் அவஸ்தைப்பட்டு விடுபட்டவர்களின் உடல்நிலை தேற நார்த்தம் பழச்சாறு அருந்துவது மிகவும் நல்லது.

சுகமான பிரசவம்

கர்ப்பிணிகள் காலையும், மாலையும் நார்த்தம் பழச்சாறு எடுத்து தண்ணீர் கலந்து அதில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு நன்றாகக் கலந்து அருந்திவந்தால் சுகப்பிரசவம் எளிதில் நடைபெறும்.

சிலர் கொஞ்சம் சாப்பிட்டால்கூட வயிறு பெரிதாக பலூன் போல் காணப்படும். சில சமயங்களில் வாயுத் தொல்லையும் அதிகரிக்கும். இவர்கள் நார்த்தம் பழத்தை சாறு பிழிந்து வெந்நீர் கலந்து அடிக்கடி பருகி வந்தால் வாயுத்தொல்லையிலிருந்து விடுபட்டு வயிற்றுப் பொருமல் நீங்கும். எல்லாக் காலங்களிலும் கிடைக்கும் நார்த்தம் பழத்தை தினமும் சாப்பிட்டு நீண்ட ஆயுளோடு வாழலாம்.

Navigation

[0] Message Index

[*] Previous page

Go to full version